அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு

அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0

சாம் மாநிலத்தின் திமா ஹசாவோ (Dima Hasao) மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” (Mahabal Cement) எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 3,000 பிகா நிலத்தை (8.10 கோடி சதுர அடி) மகாபால் சிமெண்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது அம்மாநில பா.ஜ.க. அரசு.

திமா ஹசாவோ மாவட்டமானது அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை மாவட்டமாக வரையறுக்கப்பட்டு, இம்மாவட்டத்தின் நில மேலாண்மையும் நிர்வாகமும் “வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில்” (North Cachar Hills Autonomous Council) எனும் தன்னாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் மரபுகள் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்கும் பொருட்டு இது செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கத் திட்டம் திட்டமிடப்பட்ட திமா ஹசாவோ பகுதியானது வெப்ப நீரூற்றுகளையும் (hot spring) புலம்பெயர் பறவைகள் மற்றும் வன விலங்குகள் தங்குமிடத்தையும் கொண்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் (environmental hotspot).

ஆனால், தற்போது கார்ப்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக கௌஹாதி உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அந்நிலங்கள் தரிசு நிலங்கள்தான் என்றும் அவை சிமெண்ட் ஆலை நடத்துவதற்கு அவசியம் என்றும் அசாம் அரசு மற்றும் மகாபால் நிறுவனம் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தன.


படிக்க: அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!


கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் மேதி, “3,000 பிகாக்கள் என்பது ஒரு முழு மாவட்டம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு தனியார் நிறுவனத்திற்கு 3,000 பிகாக்கள் வழங்கப்படுகிறதா? தரிசு நிலம் என்றாலும் 3,000 பிகா நிலத்தை கொடுப்பதா? இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன நகைச்சுவையா? தனியார் நலன் முக்கியமல்ல, பொது நலனே முக்கியம்” என்று பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இக்காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அன்றைய தினம் டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் அபிசார் சர்மா (Abhisar Sharma) இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், “அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பழங்குடியினரின் நிலத்தை பறித்த விவகாரத்தை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக இந்து-இஸ்லாமிய மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வருகிறார்” என்று பா.ஜ.க-வின் இந்துமதவெறி அரசியலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் சேவையை அம்பலப்படுத்தினார்.

இந்த உண்மையை பொறுத்துக்கொள்ள முடியாத சங்கிகள் ஊடகவியலாளர் அபிசார் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த அலோக் பருவா என்பவர் அபிசார் சர்மா மீது புகார் கொடுத்துள்ளார். அப்புகாரில், “அபிசார் சர்மா ஒன்றிய, மாநில அரசுகளை இழிவுபடுத்திவிட்டார். இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்துவிட்டார். அசாம் முதல்வரை மதக் கலவரங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு கவுகாத்தி போலீசு கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று அபிசார் சர்மா மீது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல், மத குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் என பி.என்.எஸ்-இன் பிரிவு 152 கீழ் ’தேசத்துரோக’ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள பத்திரிகையாளர் அபிசார் சர்மா, “அசாம் போலீசு என் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. அதற்கு சட்டப்பூர்வமாக பதிலளிப்பேன். அசாம் நீதிபதி அசாம் அரசு மகாபல் சிமெண்ட் நிறுவனத்திற்கு 3,000 பிகா நிலத்தை வழங்கியது குறித்து விமர்சித்திருந்தார். நான் அதனை எனது காணொளியில் குறிப்பிட்டு முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சொந்த அறிக்கைகளின் அடிப்படையில் அவரது வகுப்புவாத அரசியலை உண்மைகளுடன் எடுத்துக்காட்டினேன். இதில் என்ன தவறு?” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரை அம்பலப்படுத்தி கட்டுரை பதிவிட்டதற்காக “தி வயர்” (The Wire) பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் ஊடகவியலாளர் கரண் தாப்பர் மீது அசாம் பா.ஜ.க. அரசு பி.என்.எஸ். 152 பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிந்து சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள அசாமில் பத்திரிகையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள், ஜனநாயக சக்திகள் குரல் எழுப்ப வேண்டும்.

மறுபுறம், அசாம் மாநிலத்தில் அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு பழங்குடியின மக்கள், இஸ்லாமிய மக்களின் நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு அவர்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இந்துமதவெறியில் மக்களை மூழ்கடித்து வருகிறது பாசிச பா.ஜ.க. அரசு.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க