மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட “பரமசிவமும் பாஷாவும்” என்ற ஆவணப்படம் நேற்று (ஆகஸ்ட் 25) மதுரையில் திரையிடப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், ஆவணபடத்தைத் திரையிடுவதற்கு “அனுமதி பெறவில்லை” எனக் கூறி மதுரை போலீசு திரையிடலுக்கு தடை விதித்தது.
இதனை மக்கள் அதிகாரக் கழக மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி கும்பல் தனது அரசியல் ஆதாயத்திற்காக, திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து அங்கு ஆடு, கோழி பலியிடும் வழிபாட்டு உரிமையை தடை செய்துள்ளது.
இதனைக் கண்டித்து மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாகவும், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் சார்பாகவும் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், சட்டப் போராட்டம் நடத்தியும் வருகின்றோம்.
இப்படியான சூழலில், இப்பிரச்சினைக்கு தொடர்புடைய சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டதற்கான அடையாளங்களையும், மத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களையும் ஆவணப்படுத்தும் விதமாக, “பரமசிவமும் பாஷாவும்” என்ற இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு நேற்று திரையிடல் செய்து வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தொடர்ச்சியாக சங்கி கும்பலுக்கு சாதகமாக செயல்பட்டுவரும் மதுரை போலீசு ஆவணப்படத்தை திரையிடத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி கும்பல் நச்சு பிரச்சாரத்தின் மூலம் திருப்பரங்குன்றம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் தோல்வியுற்றது.
திருப்பரங்குன்றத்திலோ, மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலோ அல்லது தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ இப்பிரச்சினையை வைத்து கலவரம் நடத்துவதும் மக்களை திரட்டுவதும் அக்கும்பலுக்கு சாத்தியமில்லாமல் போனது.
அதன் பின்பு வேறு வழியில்லாமல் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக்கொண்டு, திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரை வீரனை வைத்து ஆடு, கோழி பலியிடுவதை சட்டவிரோதமாகத் தடை செய்தது. அது மட்டுமல்லாமல் மெல்ல மெல்ல சிக்கந்தர் தர்காவுக்கு செல்லும் மக்களை (இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களையும்) அங்கு செல்ல விடாமல் தடுத்து போலீசை வைத்து ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி முடக்கி வருகிறது.
அப்போதும் கூட, “எங்களுக்கு மட்டும் ஏன் வழிபாட்டுக்கு அனுமதியை மறுக்கிறீர்கள்” என்று இஸ்லாமிய மக்கள் கருதவில்லை, இரண்டு தரப்பு மக்களின் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என்றுதான் கருதுகின்றனர்.
இப்படி ஒவ்வொரு நடவடிக்கையிலும் மத ஒற்றுமையின் அடையாளமாக இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம், அப்பகுதி இஸ்லாமிய – இந்து மக்களின் நேரடி அனுபவத்தையே ஆவணப்படமாக தயாரித்துள்ளோம்.
மலைக்கு மேல் ஆடு உரிக்கும் குடும்பத்தை சேர்ந்த 71 வயதான பரமசிவமும் சிக்கந்தர் தர்காவின் நிர்வாகத்துடன் தொடர்புடைய 68 வயதான பாஷாவும்தான் இந்த ஆவணப்படத்தின் கதாநாயகர்களாக உள்ளனர். இவர்கள் சிக்கந்தர் தர்காவில் மதநல்லிணக்க பண்பாட்டின் நடமாடும் சாட்சியாக நம்முன்னே நிற்கின்றனர்.
நீதிமன்ற விசாரணையில் சிக்கந்தருக்கு சாட்சியாக பரமசிவன் வந்து நிற்கிறார்.
எனவே, இந்த ஆவணப்படம் வெளியே வந்தால் சங்கிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக சக்திகளே, பொதுமக்களே,
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, பரமசிவமும் பாஷாவும் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் போராட்ட கதையான ஆவணப்படமும் திரையிடுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம், ஆடு, கோழி பலியிடும் உரிமையை பறிப்பதுதான் சங்கி கும்பல், ஆளும் வர்க்கத்தின் மையமான நோக்கம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
எனவே, ஆடு, கோழி பலியிடும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் பொருட்டு நாம் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், ஆடு, கோழி பலியிடும் உரிமை என்பது சிக்கந்தர் தர்காவுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மதுரை மக்கள் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல் உரிமை தொடர்புடையதாகும்.
ஆகையால், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடும் உரிமையை நிலைநாட்டி இந்த சங்கி கும்பலுக்கு நிரந்தரமான ஒரு அடியை கொடுக்க வேண்டும்.
அதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்த்து நிற்பதற்கும், அப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிறந்த சான்றாக அமையும்.
அதனடிப்படையில் இந்த ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடுவோம்!
பட்டித்தொட்டி எங்கும் லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!
இவண்,
தோழர் சிவகாமு,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம் – மதுரை மேற்கு மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram