9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

0

திய உயர்வு, நிலுவை ஒய்வூதியத்தை வழங்குதல் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் ஒய்வூதியர்களும் கடந்த  ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் பணியாற்றிவரும் தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், ஆட்சிகள் மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் மற்றும் ஒய்வூதியர்கள் நல அமைப்பின் தலைமையில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பாக ஒன்பதாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


படிக்க: சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!


இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன:

  • 2023 ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • 24 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும்.
  • ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பணியில் இருக்கும் ஊழியர்கள் பெறுகின்ற அகவிலைப்படியை ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.
  • 7-வது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்.
  • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
  • போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குதல் மற்றும் தனியார் ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று பல்லவன் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை, போலீசைக் கொண்டு கைது செய்து மண்டபங்களில் அடைத்து போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டது. ஆனால், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்திற்கு பணிந்த தி.மு.க. அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர். 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 1.137 கோடி ரூபாய் ஓய்வுக்கால பலன்களை வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், தங்களது பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


படிக்க: லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்


போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போராட்டத்திற்கு போதிய ஊடக வெளிச்சம் கிடைக்கப்பெறவில்லை.

குறிப்பாக, தி.மு.க. அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற ’நோக்கத்தில்’ பல்வேறு துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதில் போக்குவரத்துத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதை முன்னின்று செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில், அரசு போக்குவரத்து கழகத்திற்கு பதிலாக, கார்ப்பரேட்கள் மூலம் மின்சாரப் பேருந்துகளை வாங்கியுள்ள தி.மு.க. அரசு அதனை  இயக்குவது, பராமரிப்பது போன்றவற்றையும் கார்ப்பரேட்டுகளிடமே தாரைவார்த்துள்ளது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், அரசு-தனியார்-கூட்டு முறையின் மூலம் பேருந்து நிலையங்களை கட்டி அதனை பராமரிப்பதை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்க உள்ளது.

இவ்வாறு, போக்குவரத்துத்துறையை முற்றிலும் கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்திலிருந்தே போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. எனவே தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க. அரசின் கார்ப்பரேட் திட்டத்திற்கும் எதிராகவும் போராட வேண்டும்.

மறுபுறம், இந்த கார்ப்பரேட்மயமாக்கத்தால் ’மகளிர் விடியல் பயணம்’, பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை, சாதாரணக் கட்டண பேருந்துகள் போன்றவை எல்லாம் ஒழித்துக்கட்டப்படும் என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டங்களில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க