திருவாரூர் நகராட்சி கட்டபொம்மன் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், சாலை ஓரமாக ஊர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு நிதி வேண்டி பொதுமக்கள் சார்பாக பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு அருகில் திட்டச்சேரி போலீசு ஆய்வாளர் மகாலட்சுமி என்பவர் வாங்கிய புதிய வீட்டின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்பணிகளுக்கு பேனர் இடையூறாக இருப்பதாகக் கூறி மகாலட்சுமியின் அக்கா மகன் கிஷோரும் அவரது நண்பரும் உள்ளூர் இளைஞர்களை வழிமறித்து பேனரை அகற்றுமாறு ஆகஸ்ட் 24 அன்று கூறியுள்ளனர். உள்ளூர் இளைஞர்களோ, “அதை கோவில் நிர்வாகத்திடம் சொல்லுங்கள். எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
உடனே, போலீசு ஆய்வாளர் மகாலட்சுமி, அவரது அக்கா மகன் கிஷோர், மகாலட்சுமியின் சகோதரர் முருக இளங்கோவன், அவரது மனைவி ஆகியோர் இணைந்துகொண்டு, “போலீசு நாங்களே சொல்றோம். கோவில் நிர்வாகத்திடம் பேச வேண்டுமா? பற பயலுகளுக்கு பேனர் கேக்குதா?” என சாதிய மனநிலையோடும் போலீசு அதிகாரத் திமிரோடும் இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இப்பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கு வந்துள்ளார். ஆனால், கிஷோர் அவரையும் சாதிய ரீதியில் இழிவாகப் பேசியதையடுத்து புருஷோத்தமனுக்கும் கிஷோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உடனிருந்த உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே கைகலப்பாகியுள்ளது. இதனால் கிஷோரும் அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அத்தெருவிற்குள் புகுத்த தாலுக்கா போலீசு எந்தவித விசாரணையுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் நால்வரை அராஜகமாகக் கைது செய்தனர்.
முன்னதாக, ஊர் பொது மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் சார்பாக மகாலட்சுமி, அவரது சகோதரர், சகோதரர் மனைவி ஆகியோர் மீது தாலுக்கா போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சாதிய மனநிலையோடு நடந்து கொண்டதுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்த போலீசு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வழக்கைத் துளியும் கண்டுகொள்ளாத போலீசுதுறையினர் ஒருதலைபட்சமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசின் கைது நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “சாதி பெயரைக் கூறி எங்களை இழிவுபடுத்திய நபர்கள் மீது பி.சி.ஆர். வழக்குப் பதிய வேண்டும்”, “கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.
ஆனால், மக்கள் சாலை மறியல் செய்து பொது மக்களுக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி போலீசு போராட்டம் நடத்துவதற்குரிய மக்களின் உரிமையைக் காலில் போட்டு மிதித்தது. மேலும், அதிகாலை 4 மணியளவில் தெருவிற்குள் புகுந்து, 16 வயது சிறுவன் உட்பட மூன்று ஆண்களையும் நான்கு பெண்களையும் அடாவடித்தனமாகக் கைது செய்தது.
“புருஷோத்தமன் என்பவர் உன் கணவன்தானே. அவன் எங்கே என்று கூறி, அவன் வரும்வரை நீ போலீசு நிலையத்தில்தான் இருக்க வேண்டும்” என்று பெண் போலீசுகள் கவுன்சிலர் புருஷோத்தமனின் மனையிடம் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவரை நைட்டியோடு குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றுள்ளனர்.
படிக்க: திருவாரூர்: பருத்தி விவசாயிகளின் அவலநிலை
போலீசின் அடாவடித்தனமான கைது நடவடிக்கையை அறிந்து, வி.சி.க., மக்கள் அதிகாரக் கழகம், வளரும் தமிழக கட்சி, சி.பி.எம்., அம்பேத்கர் மக்கள் நல சங்கம் உள்ளிட்ட புரட்சிகர-ஜனநாயக அமைப்புகள், கட்சிகளின் தோழர்கள், தலைவர்கள் போலீசு கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர். பெண்களைக் கைது செய்ததைக் கண்டித்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஜனநாயக சக்திகளிடம் கைது செய்த மக்களை அனுப்புவதாகக் கூறிவிட்டு நயவஞ்சகமாக அவர்களை விடுவிக்காமல் ஒடுக்கி வருகிறது போலீசு.
மேலும், புருஷோத்தமன் உட்பட இரண்டு பேரை ஒப்படைத்தால்தான் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்போம் என்று பட்டியலின மக்களை வைத்து பகடைக்காய் ஆடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவர் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவர்களை ரிமாண்ட் செய்துள்ளது.
போலீசானது தொடக்கத்திலிருந்தே இப்பிரச்சினையைச் சரி செய்யும் நோக்கத்திலிருந்து இவ்விவகாரத்தை அணுகவில்லை. சாதாரண, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி போலீசை கேள்வி கேட்கலாம் என்ற சாதியத் திமிரோடும், அதிகாரத் திமிரோடும்தான் நடந்து வருகிறது.
போலீசுதுறையை சார்ந்த மகாலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மக்களைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தினர். அதற்கெதிரான சுயமரியாதை உணர்விலிருந்தே மக்கள் எதிர்வினையாற்றினர். மகாலட்சுமியின் சாதி புத்தி மற்றும் பொறுப்பின்மையின் விளைவாகவே, மக்களுடன் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. ஆனால், இதனை தீர விசாரிக்காமல் பட்டியலின மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது போலீசு.
இவ்விவகாரத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் தமிழ்நாடு போலீசு ஈடுபட்டு வருகிறது. போலீசுதுறையில் சாதிவெறி, அதிகாரத் திமிர் ஊறிப்போனவர்களே திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளனர். இதனால்தான், கவினை ஆணவப்படுகொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படவில்லை. காரணம் போலிசுதுறை முழுவதிலும் ஆதிக்கச் சாதி வெறியர்களைத் திட்டமிட்டே போலிசுதுறை முழுவதும் குவித்துவருகின்றனர்.
இவ்வாறு அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள சாதிவெறியர்களையும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களையும் களையெடுப்பதற்கான போராட்டத்தை நாம் கட்டியமைக்க வேண்டும்.
எனவே, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்! ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்! என முழுங்குவொம்.
களச்செய்தியாளர்,
திருவாரூர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram