சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.

0

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்; உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் சங்கம் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை 313-இல், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு, அங்கண்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக்கி காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் சத்துணவுப் பணியாளர்களின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு அவர்களை வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் சங்கம் (Tamil Nadu Noon Meals Employees Association – TNNMEA) சார்பில் ஊழியர்கள்  போராடி வருகின்றனர்.

அங்கன்வாடிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிவரும் நிலையில், அதனை காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும்; ஓய்வு பெறும் நாளில் சத்துணவு அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சம் ரூபாயும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்; காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, 63,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் எழிலகம் வளாகத்தில் கருப்பு உடையணிந்து இரண்டு நாள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


படிக்க: மதுரை தே.கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!


போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சி.ஐ.டி.யு. துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், “ஐந்து ஆண்டு பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு 35,000 ரூபாய் ஓய்வூதியம் தரும்போது, 35 ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வெறும் 2,000 ரூபாய் தருவதும், 9,000 ரூபாய் கூட தர மறுப்பது நியாயமா? தனியார் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளிக்கு 8 லட்சம் ரூபாயை பணிக்கொடையாக சி.ஐ.டி.யு. பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க அரசு மறுக்கலாமா?” என தி.மு.க. அரசை நோக்கி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். வாக்குறுதி அளித்தபடி, சத்துணவு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜெசி, “சத்துணவு ஊழியர்களை அரசு பாராமுகமாக நடத்துகிறது. மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். தனியார் முகமையை தவிர்த்து, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட சத்துணவு ஊழியர்கள் மூலமே காலை உணவுத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசின் கார்ப்பரேட் சேவையையும் அம்பலப்படுத்தினார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், தனியார் நிறுவனத்தின் மூலம் காலை உணவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகிறது, ’திராவிட மாடல்’ என மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க. அரசு.

குறிப்பாக, தி.மு.க. அரசு கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாகத்தான் ஆசிரியர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் சத்துணவுப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் ‘சமூக நீதி’ ஆட்சி நடப்பதாகப் பெருமை பீற்றிக்கொண்டு, போராடுகின்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

எனவே, தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற ஆசிரியர்களும் சத்துணவுப் பணியாளர்களும் மாணவர்களுடன் இணைந்து தி.மு.க. அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே, தி.மு.க. அரசை நிர்ப்பந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதை நோக்கி நகர்த்த முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க