“கல்விதான் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான அடித்தளமும் கருவியும் ஆகும். தவிரவும் நவீமையமாக்கல், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியனவும் கல்வியினாலேயே சாத்தியமாகும்” எனக் கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை விளக்கப் படுத்தியுள்ளது. எனவே வெறும் வேலைக்கானது என்பதாக மட்டும் கல்வியைச் சுருக்க முடியாது; சுருக்கக் கூடாது.
கல்வி என்பது விரிந்த பொருள் கொண்டது. விடுதலை எனும் பொற்கதவைத் திறக்கும் சாவி, கல்வி. அது விழுமியங்களின் கருவூலம். ஒரு நாட்டின் வரலாற்று அடையாளம். அதனால்தான் கல்வியின் இலக்குகள் அறிவும் பண்பும் என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டார்.
நிகழ்காலப் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதோடு, எதிர்கால முன்னேற்றத்தையும் அது கருக்கொண்டுள்ளது. இதையே பிரேசிலியக் கல்வியாளர் பாவ்லோ பிரெய்ரி விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்குமானதுதான் உண்மையான கல்வி என வரையறுக்கிறார். சமூக அநீதிகளுக்கு எதிராகச் செயல்படும் “மாற்றத்திற்கான கல்வி” (Transformative education) என்பதை அவர் பரிந்துரைத்தார். எனவே எத்தகைய கல்வி அறிக்கைகளும் இத்தகைய கருதுகோள்களை இலக்குகளாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தத்துவ வெளிச்சத்தில் 2025 ஆகஸ்டு திங்களில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கொள்கை அறிக்கையை மக்கள் கல்விக் கூட்டியக்கம் திறனாய்வுக்கு எடுத்துக்கொண்டு முன்வைக்கும் அறிக்கை இது.
* இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மாநிலத்திற்கென்று தனியாகக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு முதன் முதலாக வெளியிட்டதை கூட்டியக்கம் வரவேற்கிறது.
* இக்கொள்கை அறிக்கையிலுள்ள தடையற்ற தேர்ச்சி வழங்கும் நடைமுறை, உடற்கல்விக்குத் தனியாகப் பாடத் திட்டம், கலைத்திட்டத்தில் கூடுதலாகக் கலை வடிவங்கள் சேர்க்கப்பட்டது, இருமொழிக் கொள்கை போன்ற கூறுகள் வரவேற்கத்தக்கன.
* கல்விக் கொள்கை உயர்கல்விக்கு இல்லாமல், பள்ளிக் கல்விக்கு மட்டும் என வெளியிட்டிருப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. யார் யாரெல்லாம் இந்தக் கல்விக்கொள்கையை வடிவமைத்தனர் என்ற தகவல் கூட இடம் பெறவில்லை என்பதும் வியப்பே!
* நமது மாநிலக் கல்விக் கொள்கை தனது தொலைநோக்குப் பார்வையாகக் கொடுத்துள்ள முதல் இயலிலேயே நமது அரசுப் பள்ளிகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளையும் வெற்றிப் பள்ளிகளையும் முன்வைக்கிறது. இது நமது மாநிலத்தில் பின்பற்றப்படும் சமச்சீர் கல்வி என்ற கருத்தியலையே சிதைப்பதாக உள்ளது. சமூக நீதியைக் குலைக்கும் வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை மட்டுமே உட்கட்டமைப்பு மற்றும் பல வகைகளில் தரம் உயர்த்துகிறோம் என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது சமவாய்ப்பு முறைக்கு எதிரானது. 2020 தேசியக் கல்விக் கொள்கையின் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கும் தமிழ்நாட்டின் மாதிரிப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அனைத்துப் பள்ளிகளுக்கும் எல்லா வகையான வசதிகளையும் ஏற்படுத்தித் தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் வழங்கத் திட்டமிடல் வேண்டும். அதுவே கல்வியை சனநாயகப் படுத்தும் நடவடிக்கையாக அமையும்.
* கலைஞர் முன்னெடுத்த சமச்சீர் கொள்கையின் அடிப்படையில் பொதுப்பள்ளிக் கல்விமுறை செயல்படுத்தப்பட வேண்டும். கூடவே அருகமைப் பள்ளிகள் எனும் உலகளாவிய அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும்.
* மார்ச் 2024-ன்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 58,800 க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் 1.16 கோடி மாணவர்களையும், கிட்டத்தட்ட 3 இலட்சம் ஆசிரியர்களையும் கொண்டுள்ளது என ஒரு கணக்கீடு இந்தக் கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ளது. அதில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த தனித்தனியான விவரங்கள் ஏதுமில்லை. அரசுப் பள்ளி நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ற கணக்கீடுகளும் தரப்படவில்லை.
* நம் மாநிலத்தில் அரசுத் தொடக்கப்பள்ளிகளின் வளாகத்திற்கு உள்ளேயே முன் மழலையர் வகுப்புகள் / மழலையர் வகுப்புகள் வேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகின்றனர். தொடக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு இது முக்கியக் காரணம். ஆனால் அது பற்றிய எந்தக் கருத்தும் இங்கு இடம் பெறவில்லை. மழலையர் கல்வி குறித்து மாநிலக் கல்விக் கொள்கையில் எங்கும் பேசாதது வருத்தத்திற்குரியது.
* மழலையர் கல்வி தமிழ் வழியில் மட்டுமே கட்டாயம் இருக்க வேண்டும். ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளைப் படிப்படியாக மூட வேண்டும். அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் மழலையர் பள்ளிகளுக்குப் புதிதாக அனுமதி அளிக்கக் கூடாது.
* இக்கல்விக் கொள்கையில் பெரும்பாலும் SLAS / PARAKH தேர்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்திட்டங்களை முன்வைக்கிறது அரசின் கொள்கை அறிக்கை, ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மதிப்பீடு இந்த தேசிய அமைப்புகளின் ஒற்றைமய மதிப்பீட்டால் மட்டுமே முடிவு செய்வது சிறிதுகூட ஏற்புடையதாகாது. களச் சூழலில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை (CCE) தோல்வி அடைந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாது, மதிப்பீட்டுச் சீர்திருத்தம் என்ற இயலில் மீண்டும் CCE மதிப்பீட்டையே குறிப்பிட்டுள்ளது முறையல்ல. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வகுப்பறைகளில் எந்த அளவிற்குப் பின்பற்றப்படுகிறது? ஏன் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரும்போது கூட எழுதப் படிக்கத் தெரியாமலும் அடிப்படைக் கணக்குத்திறனோ மொழித்திறனோ இல்லாமலும் இருக்கின்றனர்? என்பதற்கான காரணம் குறித்தெல்லாம் இக்கல்விக் கொள்கை பேசவில்லை. மாறாக, மின்னிய மதிப்பீடுகளை ஆசிரியர் மேற்கொள்வார்கள் என்றும், SLAS / PARAKH மதிப்பீட்டை மட்டுமே பேசுவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
* தற்பொழுது பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்களே. ஆனால் அவர்களைப் பொருட்படுத்தாமல் வானவில் மன்றங்கள் குறித்துப் பெருமை பேசுகிறது கல்விக் கொள்கை. இது பொருளற்றது. அதற்கு மாற்றாக அறிவியல் வகுப்புகளை ஆய்வகக் கட்டமைப்பு வசதியுடன் முழுமையாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
* மின்னியல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கிராமப் பகுதிகளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான பள்ளிகளில் மாணவர்கள் அமர்வதற்குத் தரமான பெஞ்சுகளோ, ஆசிரியர்கள் அமர நாற்காலிகளோ கிடையாது மேசைகளும் கிடையாது என்பதுதான் எதார்த்தம். அவற்றை முழுமையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும்.
* மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகளும் கூடப் பல பள்ளிகளில் இல்லை. நிலைமை இப்படி இருக்க, இணைய வசதிகளுடன் கூடிய பள்ளிகள் 85% மாணவர்களுக்கான கணினி/ கைக்கணினி வசதி 78% என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது கல்விக் கொள்கை. இதில் எத்தனை சதவீதப் பள்ளிகளில் இணைய வசதியைப் பயன்படுத்தத் தனியாக ஆசிரியர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். எனவே இணைய வசதிக்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
* இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் திறன்கள் மற்றும் எண்மக் கல்வியறிவு என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு மணற்கேணி செயலியையும், கல்வித் தொலைக்காட்சியையும் முன்வைக்கிறது கல்விக் கொள்கை. உலக நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இங்கு மாணவர்கள் பெற வேண்டிய உயர் திறன்கள், பாடப் பொருள், கற்பித்தல் முறை இவை குறித்தான எவ்வகைப் புதிய முயற்சிகளும் இல்லாமல், வெறுமனே இணையவழிக் கல்வியை முன் வைப்பதை மாணவர்கள் நலனுக்கு எதிரானதாகத்தான் பார்க்க முடிகிறது.
* உள்ளூர் வளங்கள் சார்ந்த பண்பாடு, வரலாறு குறித்த பாடப் பொருள்களைத் தருவது குறித்தோ,ஆசிரியர் மாணவர் உறவு குறித்தோ, கற்பித்தல் முறைகளைப் பற்றியோ கல்விக் கொள்கையில் எந்தத் தெளிவும் இல்லை. ஏற்கனவே மாணவர்கள் சந்தித்து வரும் பாடச் சுமையைக் குறைத்து, உள்ளூர் வளம் மற்றும் வரலாறு சார்ந்த பாடப் பொருள்கள் அறிமுகம் செய்வதை உறுதியளிக்க வேண்டும்.
* பெண்கல்வி குறித்தோ அதன் முக்கியத்துவம் குறித்தோ எந்தக் கருத்தும் இடம் பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பெண்கள் கல்வி பெறுவதில் ஏராளமான சிக்கல்கள் நிலவி வருகின்றன. கிராமங்கள், மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினப் பெண் குழந்தைகள் எனப் பலதரப்பட்ட பிரிவினரிடையே பெண்கல்வி இன்னும் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. அதற்கான காரணங்களோ அவற்றை மீட்டுப் பெண் குழந்தைகளின் கல்விக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களோ இக் கல்விக் கொள்கையில் முன்வைக்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
* தமிழ்நாட்டின் மொழிப்பற்றையும் இங்கு மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் ஒப்பிடும்போது, கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கை என்று ஓரிரு வரிகளில் மட்டுமே குறிப்பிட்டுள்ளது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
* குழந்தையின் கற்றல் கற்பித்தலில் தாய் மொழி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கும், அவர்கள் மனித மாண்புகளைப் பெறுவதற்கும் தாய்மொழி வழிக் கல்வி அத்தனை முக்கியமானது. ஆனால் தாய்மொழிப் பாடம் குறித்தோ தாய்மொழி வழிக் கற்றல் குறித்தோ எந்த வகையான கருத்துகளும் இந்த மாநிலக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு, கடந்த 13 ஆண்டு காலமாகத் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிற்று மொழியாக அறிமுகம் செய்ததால், அதற்குரிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படாததால் விளைந்துள்ள மோசமான கல்விச் சூழல் குறித்து இதில் எந்த ஆய்வும் இல்லை. மாணவர்கள் அடைவுத்திறன் குறைந்து, கல்வியின் தரம் குறைந்துள்ளதற்கு இந்தப் பயிற்று மொழி மிக முக்கியமான காரணம். அந்நிய மொழியில் கல்வி கற்பது மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதன் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் மாணவனால் கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை என்பது எங்குமே பதிவு செய்யப்படவில்லை. இதற்கான ஆய்வும் இதில் இல்லை.
* தாய்த்தமிழ்ப் பள்ளிகள் குறித்து இக்கல்வி அறிக்கை பொருட்படுத்தவே இல்லை என்பது கவலை அளிக்கிறது. தமிழகத்திலுள்ள 18 தாய்த் தமிழ்ப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு தாய்த் தமிழ்ப் பள்ளியாவது நிறுவப்பட வேண்டும்.
மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
* தாய்மொழியை ஒரு மொழிப் பாடமாகக்கூடப் படிக்காமல் பட்டம் பெறும் இழிவான நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால், தமிழகத்தில் உள்ளது. எனவே தமிழ் ஒரு பாடமொழியாக 1 முதல் 12 வகுப்பு வரையில் கட்டாயமாக்கப்பட வேண்டும். இது கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
* கேந்திரிய வித்யாலயம் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாகக் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது பரிந்துரை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அது இக்கொள்கை அறிக்கையில் இடம் பெற வேண்டும்.
* ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் செய்யப்படுவது பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது, பள்ளி மேலாண்மைக் குழு வழியாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது, அலுவலகப் பணியாளர்கள் நியமனம் குறித்துப் பேசாதிருப்பது, தூய்மைப் பணியாளர்கள் நியமிக்காமல் இருப்பது ஆகியன கவனத்தில் கொள்ளப்படாமல் இந்தக் கல்விக் கொள்கை எழுதப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.
* ஆசிரியர்கள் நியமனத்தில் TET தேர்வு ஏற்கனவே பல குழப்பங்களை விளைவித்து வருகிறது. ஆசிரியர் பயிற்சி பெற்று பணிக்காகக் காத்திருப்போர் ஆசிரியராவதற்குத் தேவையான தகுதியைப் பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேவையில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு அவசியம் இல்லை. அதே போல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்கள் உட்பட மேலே குறிப்பிட்ட எந்தத் தரப்பினருக்கும் டெட் அவசியம் இல்லை எனும் போது, அரசு ஆசிரியர்கள் நியமனத்துக்கு மட்டும் டெட் தேர்வை ஒரே தகுதியாக வைப்பதைத் தவிர்க்கக் கல்விக் கொள்கை பரிந்துரைத்திருக்கலாம்.
* அரசுப் பள்ளிகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பதவி உயர்வு கூட இல்லை. அதற்குக் காரணமான டெட் தேர்வை வைத்து நீதிமன்ற வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்தெல்லாம் எவ்வித ஆய்வும் இல்லை. அதற்கான தீர்வுகளும் இல்லை, இந்தக் கல்விக் கொள்கையில். ஆகவே பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்த வேலை வாய்ப்பு அலுவலகம் வழியான நடைமுறையையே ஆசிரியர்கள் நியமனத்தில் பின்பற்ற வேண்டும் என்று கல்விக் கொள்கையில் இடம் பெறச் செய்திருக்கலாம்.
* மாநிலக் கல்விக் கொள்கை முழுவதும் ஆன்லைன்/செயலி/எமிஸ் இவற்றை முன்வைத்தே தீர்வுகளை வகுத்திருக்கிறது இதையேதான் தேசியக் கல்விக் கொள்கை 2020 உம் பேசுகிறது. EMIS செயலியை ஆசிரியர்கள் அன்றாடம் அப்டேட் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் நிர்வாகச் சிக்கல்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் கல்விக் கொள்கை. கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கும் நிர்வாக அழுத்தங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.
* உடற் கல்விக்காகத் தனியாகப் பாடத்திட்டம் வகுத்துள்ள இக்கல்விக் கொள்கையை வரவேற்கிறோம். ஆனால் அதே வேளை தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருக்கிறது, எத்தனை பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள் என்ற தரவுகள் எதுவும் தரப்படவில்லை. பல ஆயிரம் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்பதை வெளிப்படையாகக் கல்விக் கொள்கை ஒப்புக் கொள்ளவும் இல்லை.
* கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தடையற்ற தேர்ச்சியை வழங்கும் நடைமுறை வரவேற்கத்தக்கது என்றாலும் பள்ளிகளில் வகுப்புக்கு ஏற்ற திறன்களைப் பெறாமல் வயதுக்கேற்ப வகுப்பில் அமர வைக்கும் நடைமுறை மட்டுமே பின்பற்றப் படுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது பற்றிய எந்த விளக்கமும் கல்விக் கொள்கையில் இடம்பெறவில்லை.
* கற்றல் இடைவெளி குறித்துப் பேசும் கல்விக் கொள்கை, மாணவர்களின் கற்றல் இடைவெளிக்குக் காரணம் என்ன? ஏன் ஏற்பட்டது? கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை மட்டும் இன்னும் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் இல்லை. அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கொரோனா காலத்தைத் தவிர்த்து பிற காரணங்கள் குறித்தான எந்தத் தரவுகளும் கல்விக் கொள்கை முன்வைக்கவில்லை.
* ஒட்டுமொத்த மாணவர்கள் வளர்ச்சி, அறிவு மேம்பாடு இவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், வெறும் வேலைக்காரர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களை அணுகியுள்ளது மாநிலக் கல்விக் கொள்கை. தற்போது நமது பள்ளிகளில் நிலவும் சாதியப் பிரச்சனைகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் களைய எந்தவிதக் கருதுகோளும் மாநிலக் கல்விக் கொள்கையில் தரப்படவில்லை.
* காவிமயமாக்குதல் என்பது தேசியக் கல்விக் கொள்கை 2020 – இன் ஒரு முக்கியக் கூறாகும். அதற்கு மாற்றான அணுகுமுறை மாநிலக் கல்விக் கொள்கையில் எங்குமே காணப்படவில்லை. குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டம் உயர்த்தி பிடிக்கக்கூடிய முக்கிய உரிமையாகிய மதச்சார்பின்மை குறித்து எந்த இடத்திலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
* இறுதி இயலில் CSR நிதி குறித்தும் நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி குறித்தும் முன்னாள் மாணவர்கள் ஈடுபாடு குறித்தும் விரிவாகப் பேசப்படுகிறது. ஆனால் கல்வி கொடுப்பது அரசின் கடமை. தனியார் அமைப்புகளிடம் கையேந்துவதும் சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பில் விடப்படுகிறது. கற்பித்தல் பணியில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற பள்ளித் தேவைகளுக்குப் பிறரிடம் கையேந்தும் நிலையில் விடப்படுவது ஏற்புடையதாக இல்லை. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை வளப்படுத்தும் வேலையை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கல்விக் கொள்கை பேசினால் ஏற்புடையதாக இருக்கும்.
* அதே போல் நீட் தேர்வு எதிர்ப்பு பற்றி எதுவும் பேசாதது வியப்பாக உள்ளது. கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற கொள்கையைக் கூடப் பேசாதது ஏனோ?
* கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய கலை வடிவங்கள் என்று காட்சிக் கலை, நிகழ்த்துக் கலை, நாட்டுப்புறக் கலை, மின்னியல் கலை, புகைப்படக் கலை ஆகியவற்றைக் கொண்டு ஒரு பட்டியலை இணைத்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் ஏற்கனவே இங்கு கலை ஆசிரியர்கள் பல வருடங்களாக நிரந்தரமாக நியமிக்கப்படவேயில்லை. ஓவியம், தையல் ஆகியவற்றுக்குப் பல ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கலை ஆசிரியர்கள் நியமனம் குறித்தும், இக்கலையைக் கற்பித்தலோடு தொடர்பு படுத்தும் கட்டமைப்புகள் குறித்தும் விரிவாக எதுவும் பேசப்படவில்லை. சுற்றுச் சூழல் கல்வி குறித்தும் கூட முழுமையாக எதுவும் பேசவில்லை என்பது வருந்தத்தக்கது.
* TN -SPARK என்ற செயற்கை நுண்ணறிவு , எந்திரவியல், இணையவளக் கருவிசார் கல்வித்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்துப் பேசுகிறது கல்விக் கொள்கை. இது மிக உயர்ந்த நோக்கமாக இருந்தாலும், நம்மிடம் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாததைக் காணும் பொழுது, இவையெல்லாம் வெற்று வார்த்தையாகவே தோன்றுகிறது.
* மாணவர்கள் தொழிற்கல்வி பெறுவதையும், தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் கொண்டு வருவதையும் அதிகமாகப் பேசும் கல்விக் கொள்கை மாணவர்கள் பெறவேண்டிய 21 ஆம் நூற்றாண்டின் திறன்களுக்கு உரிய வாய்ப்புகளைச் சமமாக வழங்குவது குறித்து எதுவும் பேசவில்லை.
* பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவம், சாதிமறுப்பு போன்றவற்றை வலியுறுத்தும் அதே வேளை உடலுழைப்பின் மேன்மையையும் வலியுறுத்தும் கூறு இணைக்கப்பட வேண்டும்.
* பெருகிவரும் ஆணவ கொலைகளை தடுக்கும் வண்ணமும் ஆணவக் கொலைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஆணவக் கொலை புரிந்தவர்கள் சட்டப்படி அனுபவிக்கும் தண்டனைகளை பற்றிய விரிவான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய சட்டங்களை தொகுத்து பாட புத்தகங்களில் இணைக்க வேண்டும்.
* சாதி என்றால் என்ன, சாதியின் தோற்றம், அதன் வளர்ச்சி, மதத்திற்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு, சாதிப் பிரச்சினையால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள், சாதிப் பிரச்சனைக்கான தீர்வு என சாதியைப் பற்றிய விரிவான செய்திகள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
* ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டால், 10 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கடுமையாக பாதிக்கப் படுகிறது. எனவே புதிதாகத் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. நிலவும் தனியார் பள்ளிகளைக் காலப்போக்கில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.
* பள்ளிகளில் நூலக வகுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் நிர்வாக நோக்கில் நூலக வகுப்பு , வாரம் ஒரு முறை மாணவர்களுக்குத் தரப்பட்டாலும் முறையான வாசிப்பு வசப்பட இங்கு வாய்ப்புகள் இல்லை. ஆகவே நூலக வாசிப்பு மிக முக்கியமாக வலியுறுத்தப்பட வேண்டும்.
* பள்ளி மாணவர் தேர்தல் நடத்தப்பட்டு, சனநாயக விழுமியங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
* + 1/+2 வகுப்புகளில் Spoken English வகுப்புகளை முறைப்படுத்த British Council போன்ற அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதே போல் ஆங்கில மொழியைக் கற்பிக்க ஆங்கிலப் பட்டதாரிகளைத் தனியே நியமிக்க வேண்டும்.
* தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளையைக் கடுமையாகக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் இருப்பது போல் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளின் வரவு செலவு, தணிக்கை செய்யப்பட வேண்டும்.
* கோத்தாரிக் கல்விக் குழு அறிக்கை கல்வி அதிகாரிகளை (DEO / CEO) கூடுதலாக நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதால், அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
* பள்ளிக்கல்வித் துறையில் உயர் அதிகாரிகளாக IAS பிரிவினரை எக்காரணம் கொண்டும் நியமிக்கக் கூடாது. பள்ளிக்கல்வித் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்களையே மாநில அளவிலான அதிகாரிகளாகப் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
* நிர்வாகத்தின் முகங்களும் கண்காணிப்புக் குழுக்களும் ஒவ்வொரு இயலிலும் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வித்துறை மட்டுமல்லாமல் தொடர்பற்ற அனைத்துத் துறையினரும் பார்வையிட்டுக் கண்காணித்துக் குழப்பங்களை விளைவிப்பதோடு, அவர்கள் நினைத்தபடியெல்லாம்
செயல்திட்டங்களை வகுத்து உண்மையான கற்றல் – கற்பித்தலை நீர்த்துப் போகச் செய்து வருகின்றனர். அவை குறித்த எந்த விளக்கங்களும் இங்கு தரப்படவில்லை. இவை தவிர்க்கப் பட வேண்டும்.
* பள்ளிப் பேருந்துகள் இயக்குவதை ஐந்து கிலோ மீட்டருக்குள் என எல்லை வரையறுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வரவும், திரும்பப் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்லவும் வசதியாகப் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும்.
* 2016 ஏப்ரல் 26 அன்று உயர்நீதிமன்றம் பள்ளிகள் குறித்துப் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறைப் படுத்த வேண்டும். 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதைச் செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதை மாநிலக் கல்விக் கொள்கை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* தேசியக் கல்விக் கொள்கை 2020 வரைவு அறிக்கை நானூற்று ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அது இந்திய நாட்டின் பள்ளிக்கல்வி குறித்த சிக்கல்களைத் தெளிவாகப் பேசியது. மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை தீர்வுகளைத் தராது போனாலும், சிக்கல்களைப் பேசியதோடு இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் பல செய்திகள் அதில் இடம் பெற்றிருந்தன என்பதை நாம் நன்கு அறிவோம். ஆகவேதான் அதை நாம் எதிர்த்தோம். மாணவர் விரோதக் கல்விக் கொள்கையாகவே தேசியக் கல்விக் கொள்கை 2020 அமைந்திருந்தது. அதே வழியில் நமது மாநிலக் கல்விக் கொள்கையும் தனியார் மயத்தை ஊக்குவித்துப் பொதுக் கல்வியை அழிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதைக் காண முடிகிறது.
அதே போல் தமிழ்நாடு கல்விச் சூழலில் தற்போதிருக்கும் சிக்கல்கள் குறித்து எந்த ஆய்வும் இதில் வெளிப்படவில்லை. மாறாக பின்பற்றப்படும் நலத் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசுவது உண்மையான கல்விக் கொள்கையாகி விடாது என்பதை நாம் உணர வேண்டும்.
* அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.
தனியார்மயம், காவிமயம் போன்றவற்றை வலியுறுத்தும் தேசியக் கல்வி 2020 – லிருந்து முற்றிலும் மாறுபட்டு, பொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளிமுறை, தாய்மொழி வழித் தரமான இலவசக் கல்வி முறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்ட கல்வி அறிக்கைதான் இப்பொழுது தேவைப் படுகிறது. எனவே தமிழகம் முழுவதுமுள்ள கல்வியாளர்கள், ஆசிரியர் இயக்கங்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பல்துறை விற்பன்னர்கள் எனப் பலரையும் கலந்தாய்வு செய்து மேம்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் தமிழ்நாடு அரசை வேண்டுகிறது.
மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக அறிக்கையை வெளியிட்டவர்கள்:
ஒருங்கிணைப்பாளர்கள்
பேரா. இரா.முரளி
பேரா. வீ.அரசு
பேரா. ப.சிவகுமார்
கல்வியாளர் கண. குறிஞ்சி