குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

0

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள மணிநகரில் “செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி” (Seventh Day Adventist Higher Secondary School) செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று பள்ளி வளாகத்திற்குள் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் இஸ்லாமிய மாணவர் 10-ஆம் வகுப்பு மாணவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அம்மாணவர் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட மதவெறிக் கும்பல், குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரைத் திரட்டி பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் “எந்த இஸ்லாமிய மாணவரையும் பள்ளியில் சேர்க்கக் கூடாது. அனைத்து இஸ்லாமிய மாணவர்களுக்கும் பள்ளி இறுதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்” என்று இஸ்லாமிய வெறுப்பு முழக்கமிட்டது.

சிறிது நேரத்தில் நிலைமை மோசமடைந்த நிலையில், “இந்தப் பள்ளியை எரியுங்கள். ஆசிரியர்களையும் எரியுங்கள். இது அவர்களின் தவறு” என்று அப்பகுதி மக்களைக் கொண்டு பள்ளிக்கு வெளியே மதக்கலவரத்தை உருவாக்க முயன்றது. போலீசோ வன்முறையைத் தடுப்பதற்குப் பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று நேரில் கண்ட அரசியல் ஆர்வலர் பிபின்பாய் காத்வி (Bipinbhai Gadhvi) தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து மதவெறி அமைப்பொன்றின் தலைவரான மகா மண்டலேஸ்வரி ஈஸ்வரி நந்த்கிரி (Mahamandaleshwari Iswari Nandgiri), மணிநகர் பள்ளியில் கொல்லப்பட்ட மாணவர் நயன் சாந்தானியின் (Nayan Santani) மரணத்திற்குப் பழிவாங்குகிறோம் என்று கூறிக்கொண்டு வாளை ஏந்தி மதக்கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.

மகா மண்டலேஸ்வரி ஈஸ்வரி நந்த்கிரி, தர்மேந்திர பவானி

வி.ஹெச்.பி-யின் தர்மேந்திர பவானி இந்தத் தாக்குதலை ‘இஸ்லாமிய சதி’ என்று முத்திரை குத்தியதோடு சண்டையை ஒரு வகையான ‘ஜிஹாத்’ என்று இஸ்லாமிய மாணவர்களை பயங்கரவாதிகள் போன்று பேசியுள்ளார்.


படிக்க: குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்


இச்சம்பவம் நடந்த இரண்டு நாட்களில், ஆகஸ்ட் 21 அன்று, அகமதாபாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வடலியில் “ஷெத் சி.ஜே. உயர்நிலைப் பள்ளி”யில் (Sheth C.J High School) இரு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இந்து மாணவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட காவி கும்பல், பள்ளிக்கு வெளியே பதற்றத்தை உண்டாக்கியது. மணிநகர் பள்ளியில் முழக்கமிட்டதை போன்று இங்கும் அனைத்து இஸ்லாமிய மாணவர்களுக்கும் இறுதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து வி.ஹெச்.பி., பஜ்ரங் தளம், ஏ.பி.வி.பி., அந்தராஷ்டிரிய விஸ்வ இந்து பரிஷத் (Antarrashtriya Vishwa Hindu Parishad), ராஷ்டிரிய பஜ்ரங் தளம் போன்ற காவி கும்பல் பந்த் அறிவித்தன. உள்ளூர் மக்கள் அவர்களுடன் இணைந்து பேரணி நடத்தியுள்ளதன் மூலம் காவி கும்பல் இந்து மக்களிடையே செல்வாக்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.

இதே பள்ளியில் இந்தாண்டு ஜனவரியில், 11-ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவனை இரண்டு இந்து ஆசிரியர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் மாணவனுக்கு பள்ளி வளாகத்திலேயே இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், குரூர எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மாணவனை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர் பள்ளி அதிகாரிகளைச் சந்தித்த போதும், பள்ளி எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்துள்ளது.

இக்கொடூரத் தாக்குதலால் மாணவன் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் தற்போதுவரை மாணவர் வகுப்புக்குச் செல்வதற்கும் தேர்வு எழுதுவதற்கும் மறுத்து வருவதுடன், மாணவர் பள்ளியிலிருந்து வெளியேறுவதற்கான சான்றிதழையும் கொடுக்காமல் மாணவனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

மேலும், மாணவனின் குடும்ப உறுப்பினர் இதுகுறித்து கூறுகையில், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல குழந்தைகளும் ஒரே பள்ளிக்குச் செல்வார்கள். எங்கள் குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள். அதே ஆசிரியர்கள் எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தாலும் அவர்களை யாராலும் இடைநீக்கம் செய்ய முடியாது என்று பெருமையாகப் பேசி அவர்களைக் கேலி செய்கிறார்கள்” என்று மதவெறிபிடித்த ஆசிரியர்கள் குறித்துத் தெரிவித்துள்ளார்.


படிக்க: குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு


ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்து மதவெறி பாசிசக் கும்பல், குஜராத் முழுவதுமுள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே விளையாட்டு நேரங்களிலும் வகுப்பறைகளிலும் ஏற்படும் சண்டைகளை மத மோதலாகச் சித்தரித்து கலவரம் செய்ய முயன்று வருகிறது. இந்து-இஸ்லாமிய மாணவர்களுக்கு இடையிலான சண்டையில் இந்து மாணவனுக்கு காயம் ஏற்பட்டால் அதனை இஸ்லாமியர்களின் திட்டமிட்ட சதி என்று மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்து-இஸ்லாமிய மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதிகளவிலான மாணவர்களையும் இந்து மக்களையும் அணிதிரட்டிக் கொள்வதற்கான ஆயுதமாகவும் மத மோதல்களைப் பயன்படுத்தி வருகிறது.

இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொடுக்கும் பள்ளிகளை தனக்கான மதவெறிக் கூடாரங்களாகவும், தனக்கான மாணவர் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தி வருகின்றது.

இது மட்டுமில்லாமல், என்.சி.இ.ஆர்.டி. (NCERT- National Council of Educational Research and Training) மூலம் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய மக்களின் வரலாற்றையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது, குஜராத் கலவரம் போன்ற இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறியாட்டங்களையும் இருட்டடிப்பு செய்து வருகிறது. இஸ்லாமிய மக்களை எதிரிகளாக, அதாவது கொடிய மன்னர்களாகவும் ஊடுருவல்காரர்களாகவும் சித்தரித்து, மாணவர்களிடையே இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்புணர்வையும் இந்து மதவெறியையும் ஊட்டி மாணவர்களை மனித விழுமியங்களற்ற மிருகங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

சான்றாக, கோவாவில் நடத்தப்பட்ட என்.சி.இ.ஆர்.டி. ஆய்வானது பள்ளிச் சூழல் எவ்வளவு மோசமானது என்பதைக் காட்டுகிறது. கிட்டத்தட்ட 25 சதவிகித பள்ளிகளில் ராகிங்-க்கு எதிரான கொள்கைகள் (anti-bullying policies) நடைமுறையில் இல்லை. அதேவேளையில், மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் சக மாணவர்களால் உடல் ரீதியாகத் தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாசிசக் கும்பலால் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள குஜராத்தில் பள்ளி மாணவர்கள் இந்து மதவெறிக்கு பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராகக் கல்வியாளர்களும் ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும். ஏனென்றால், பா.ஜ.க. ஆள்கின்ற மாநிலங்களில் நடக்கும் மதமோதல்கள் நாளை நாடு முழுவதும் அரங்கேறும் அபாயம் உள்ளது.

ஆதாரம்: தி வயர்


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க