இராஜஸ்தானில் மதமாற்ற தடை மசோதா: சிறுபான்மையினர் மீதான சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்

‘கர்வாப்சி’ (‘இந்து’ மதத்திற்கு மாற்றுவது) எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச நடவடிக்கைக்கு விலக்களித்துள்ள இம்மசோதா, இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாசிச பா.ஜ.க. அரசு, புதிய மதமாற்ற தடைச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கர்வாப்சி’ (‘இந்து’ மதத்திற்கு மாற்றுவது) எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச நடவடிக்கைக்கு விலக்களித்துள்ள இம்மசோதா, இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

இராஜஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைப்பெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், “இராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை மசோதா, 2025”-ஐ பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இம்மசோதாவில், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் என பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைப்பெற்ற இராஜஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில், “இராஜஸ்தான் அரசு பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய மசோதாவை கைவிடுகிறது. செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து நடைபெறவுள்ள இராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மிகவும் கடுமையான விதிகளுடன் புதிய மசோதா அறிமுகப்படுத்தபடும்” என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்தது. மேலும், இப்புதிய மசோதா அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் இராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்தார்.

இம்மசோதா குறித்து இராஜஸ்தான் சட்ட அமைச்சர் ஜோகராம் படேல் கூறுகையில், “மதமாற்றம் பற்றி மசோதாவில் குறிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள், வற்புறுத்தல், மோசடி வழிமுறைகள், தேவையற்ற செல்வாக்கு, கட்டாயப் பிரசங்கம், தூண்டுதல் மூலமும், திருமணம் அல்லது பிற ஏமாற்று வழிமுறைகள் மூலமும் ஒருவரை மதம் மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும். இச்சட்ட மசோதாவில் ‘மதமாற்று’ என வரையறுக்கப்பட்டுள்ளதற்கு மட்டுமே இவ்விதிகள் பொருந்தும். ஒருவர் தமது சொந்த மதத்திற்கு மீண்டும் திரும்புவார் என்றால், அது ‘கர்வாப்சி’ ஆகும். அவை இந்த விதிகளின் கீழ் பொருந்தாது” என்று தெரிவித்தார்.

‘கர்வாப்சி’ என்பது சங்கப்பரிவாரக் கும்பலால் ‘வீடு திரும்புதல்’ என குறிப்பிடப்படுகிறது. அதாவது, இஸ்லாம், கிறித்தவம் மற்றும் பிற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாற்றப்படுவதை சங்கி கும்பல் இவ்வாறு குறிப்பிடுகிறது. “அனைத்து இந்தியர்களும் முதலில் இந்து. ஆகையால் ‘வீடு திரும்புதல்’ அவசியமானது” என்று பொய் பிரச்சாரம் செய்துவரும் சங்கி கும்பல், இந்தியாவின் பல மாநிலங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை இந்து மதத்திற்கு மாறும்படி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. உண்மையில், மதமாற்றம் என்ற பெயரில் சங்கி கும்பல்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு மட்டும் இம்மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


படிக்க: உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்


மேலும், சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு திருமணம் செய்யப்பட்டால், அதுபோன்ற திருமணமங்கள் செல்லாது என அறிவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சட்டத்தின் படி இக்குற்றத்திற்கு பிணை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை இது காக்னிசபல் (Cognizable) வழக்காக, அதாவது மாஜிஸ்ட்ரேடின் அனுமதியோ வாராண்டோ இல்லாமல் போலீசுக்கு கைது செய்யும் அதிகாரம் வழங்கும் வழக்காக பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றுவதாக ‘லவ் ஜிகாத்’ பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது பாசிசக் கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இம்மசோதாவை சட்டமாக்குவதன் மூலம் இத்தாக்குதலை சட்டப்பூர்வமாக்கத் துடிக்கிறது.

மேலும், கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் பல்வேறு குற்றங்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்புதிய மசோதாவில் 14, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சில வழக்குகளில் ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், முந்தைய மசோதாவில் அதிகபட்ச அபராதமாக ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.50 இலட்சமாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. குழுவாக மக்கள் மதமாற்றத்தில் ஈடுப்பட்டால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 இலட்சம் அபராதமும் வசூலிக்கப்படும்; ஒருவர் தொடர்ந்து இக்குற்றங்களில் ஈடுப்பட்டால் ஆயுள் தண்டனையும் ரூ.50 இலட்சம் அபராதமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதமாற்றத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது சட்டவிரோத நிறுவனத்திடமிருந்தோ நிதியுதவி பெற்றால் குறைந்தபட்சம் 10 வருட சிறை தண்டனையும் ரூ.20 இலட்சம் அபராதமும் வசூலிக்கப்படும் என்றும் அதிகபட்சம் 20 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இச்சட்டத்தின் படி குற்றம் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளின் விசாரணை அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும். மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை இருக்காது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீன் வழங்குவது குறித்து அரசாங்கத்தின் தரப்பை கேட்டப் பிறகே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்” என படேல் கூறினார்.

“இக்குற்றங்களில் ஏதோ ஒரு நிறுவனம் ஈடுப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படும்; அந்நிறுவனத்திற்கு அரசு சார்பாக வழங்கும் நிதியும் நிறுத்தப்படும். இதுபோன்ற செயல்பாடுகள் ஏதோ ஒரு வளாகத்திற்குள் நடைப்பெற்றால் அவை பறிமுதல் செய்யப்படும். மேலும், சொத்தின் உரிமையாளர் அதன் உரிமத்தை இழந்துவிடுவார். இதன் விளைவாக, சொத்து அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். இதனால், அச்சொத்தை இடிக்கவோ அல்லது பயன்படுத்திக் கொள்ளவோ அரசால் முடியும்” என படேல் தெரிவித்தார்.

இவற்றின் மூலம், இஸ்லாமிய-கிறிஸ்தவ மக்களின் சொத்துக்களை அழித்தோ, பறித்தோ அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கும், அவர்களை சிறைக் கொட்டடியில் முடக்கி ஒடுக்குவதற்கும் பாசிச பா.ஜ.க. துடிக்கிறது என்பது அம்பலமாகிறது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!


இஸ்லாமிய-கிறித்தவ சிறுபான்மை மக்கள் மதமாற்றம் செய்வதாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அப்பொய்யின் அடிப்படையில் கலவரம் செய்வதும் கூட பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் இயல்பாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பிராத்தனை நடைபெறும் கிறித்தவ தேவாலாயங்களுக்குள் அத்துமீறி, அங்கு மதமாற்றம் செய்வதாகக் கூறி காவிக் கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” கோசமிடுவது, வன்முறையில் ஈடுபடுவதை தொடர்ச்சியாக காண்கிறோம். மத மாற்றம் செய்வதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பின்னர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் நிகழ்வுகளானது பாசிச கும்பலின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது.

ஆனால், இராஜஸ்தானில் சட்டவிரோத மதமாற்ற தடை மசோதாவை கொண்டுவருவதன் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல் நிகழ்த்தும் கலவரங்களுக்கு பா.ஜ.க. அரசு சட்ட அங்கீகாரம் வழங்குகிறது. பாசிச பா.ஜ.க. அரசு இதனை அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தும் என்பதே எதார்த்தமாகும்.

இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப அரசமைப்பை மறுவார்ப்பு செய்துவரும் பாசிச பா.ஜ.க-வின் ஓர் அங்கமாகவே இந்த சட்ட மசோதவை பார்க்க வேண்டியுள்ளது. பெருவாரியான மக்கள் போராட்டங்கள் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது என்பதே கள எதார்த்தமாகும்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க