தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையை உலுக்கிய உரிமைக் குரல்!

தூய்மைப் பணியாளர்களின் இத்துணை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சிவிட்டு, தற்போது குறைந்தக் கூலிக்கு இராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் முறையின் கீழ் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

“தூய்மைப் பணியை தனியார்மயமாக்காதே”, “பணி நிரந்தரம் செய்”, “தி.மு.க. அரசே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று”, “இராம்கி நிறுவனத்திற்கு விலை போக மாட்டோம்”. இவை சென்னை மண்ணின் பூர்வகுடிகள், மாநகரத்தின் மையத்திலுள்ள ரிப்பன் கட்டடத்தை முற்றுகையிட்டு, ஓங்கி முழங்கிய உரிமை முழக்கங்கள்.

சென்னை மாநகரத்தின் பரபரப்பான பெருந்திரளை அரசியல்படுத்திய, ஆளும் அரசையும், திட்டமிட்டே புறக்கணித்த கார்ப்பரேட் கைக்கூலி ஊடகங்களின் மௌனத்தையும் உடைத்த, சாதிய பொது சமூகத்தை சலனப்படுத்திய, அரசியல் சக்திகளுக்கு நம்பிக்கையூட்டிய தூய்மைப் பணியாளர்களின் உறுதிமிக்க இப்போராட்டமானது ஒரு வரலாற்றுப் பதிவு.

தி.மு.க. அரசின் நெருக்கடிகள், சூழ்ச்சிகள், மழை, வெயில் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு 13 நாட்கள் உறுதியாக போராடிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் நீண்ட நெடிய பின்னணியையும் அவர்களது முழக்கங்களின் ஆழத்தையும் அறிந்துகொள்வது அவசியமானது.

தூய்மைப் பணியாளர்களின் உறுதிமிக்க போராட்டமும்
தி.மு.க. அரசின் அடக்குமுறையும்

சென்னை மாநகராட்சியின் ஐந்து (இராயபுரம்) மற்றும் ஆறாவது (திரு.வி.க. நகர்) மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்தான், தங்களுடைய உறுதியான போராட்டத்தின் மூலம் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர்கள்.

இந்த ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் மட்டும் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NULM) கீழ் 2,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். சுமார் 15 ஆண்டுகளாக மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்தும் இவர்கள், தற்போதுவரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.

இதற்கெதிராக, தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி இவ்விரு மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜூலை 18-ஆம் தேதியன்று ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களின் தூய்மைப் பணியை இராம்கி குழுமத்திற்கு கீழ் வரும் “எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் லிமிடெட்” (MSW Solutions Limited) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்த்து 10 ஆண்டுகளுக்கு ரூ. 276 கோடிக்கு ஒப்பந்தம் போட்டது தி.மு.க. அரசு.

தி.மு.க. அரசின் திட்டமிட்ட வன்முறை

இந்த இரண்டு மண்டலங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8,000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியத் தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு கள, சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் ரூ.22,000 வரை ஊதியம் பெறத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இராம்கி நிறுவனமோ ரூ.16,950 மட்டுமே மாதச் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் காப்பீடு, வைப்பு நிதி பிடிக்கப்பட்டு ரூ.14,000 மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் இத்துணை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சிவிட்டு, தற்போது குறைந்தக் கூலிக்கு இராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் முறையின் கீழ் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம், மனு கொடுப்பது என பல வழிகளில் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தைத் துளியும் மதிக்காத சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஜூலை 31-ஆம் தேதி ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கைபேசியில் அழைத்து, ”நீங்கள் நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம், வந்தால் தனியார் நிறுவனத்தின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து அடாவடித்தனமாக நடந்துகொண்டது.

இதன் பிறகுதான் தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரிப்பன் கட்டடம் முன்பு எல்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் தலைமையில் தொடர்ச்சியாக 13 நாட்கள் போராடினார்கள்.

ஆனால், தொழிலாளர்களின் அமைதியான போராட்டத்தை, அவர்களின் கோரிக்கைகளை துளியும் பொருட்படுத்தாமல், மிகவும் அராஜகமான முறையில் தி.மு.க. அரசு நடந்துகொண்டது.

சென்னை மேயர் பிரியா, “அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 11 மண்டலங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது. நாங்கள் இரண்டு மண்டலங்களைத்தான் மாற்றுகிறோம்” என தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசினார்.

மற்றொருபுறம், “தேர்தல் வாக்குறுதி எண் 285-இன் படி பணி நிரந்தரம் வழங்கு” என முழக்கமிட்டு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதிக்கத் திமிருடன், “பணி நிரந்தரம் செய்வதாக நாங்கள் எங்கே வாக்குறுதி கொடுத்தோம் காட்டுங்கள்” என கூசாமல் பொய் பேசினார்.

மேலும், போராடும் தொழிலாளர்களுடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலம் போராட்டக் களத்தில் இருக்கும் பெண்களிடம் போராட்டத்தில் இருந்து வெளியேறச் சொல்லி பேரம் பேசுவது, மிரட்டுவது என கிரிமினல்தனமாக பல வழிகளில் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்து, அம்பலப்பட்டுப் போனது தி.மு.க. அரசு.

போராடுகின்ற பெண் தூய்மைப் பணியாளர்களை கழிவறைக்கு கூட அனுமதிக்காமல், ரிப்பன் கட்டட வாயிலை அடைத்தது. இரவு உணவைத் தடுப்பது, மின் விளக்குகளை அணைத்து மிரட்டுவது, போலீசை குவித்து பீதியூட்ட நினைத்தது என தி.மு.க. அரசின் பல்வேறு அடக்குமுறைகளைக் கடந்து உறுதியாக போராடினர் தூய்மைப் பணியாளர்கள்.

நாளுக்கு நாள் மாணவர்கள், மக்கள் மத்தியில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. இனிமேலும், தொழிலாளர் போராட்டத்தை அனுமதித்தால் முழுமையாக அம்பலப்பட்டு விடுவோம் என்று தி.மு.க. அரசு அஞ்சியது. அதனால், தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் மூலம் தூய்மைப் பணியாளர் போராட்டம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும், பொது ஒழுங்கை பாதிப்பதாகவும் போலியாக சித்தரித்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுக்கச் செய்தது. இதற்காகவே காத்திருந்ததுபோல், உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தக் கூறி அநீதியாக தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 13-ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கான போலீசை குவித்து அமைதியாக போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது தி.மு.க. அரசு. பெண்கள் என்றும் பாராமல் போலீசு அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை செலுத்தியது. போராடிய பெண்களின் ஆடைகளை கிழித்து, மார்பகங்களில் கைவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்களை திட்டமிட்டு தாக்கியது. போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால், பலருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டது. பல்வேறு தொழிலாளர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சைக்கூட அளிக்காமல் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றது. இரவோடு இரவாக திட்டமிட்ட அரசு வன்முறையின் மூலம் போராடிய தொழிலாளர்களை குப்பைகளைப் போல அப்புறப்படுத்தியது தி.மு.க. அரசு.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பிரித்து அடைத்து வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல், போராடியவர்களின் கைப்பேசிகள் பறிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மறுநாள் ஆகஸ்ட் 15 ‘சுதந்திர தினம்’ என்பதால், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி அலைக்கழித்தது போலீசு.

அடக்குமுறையின் மூலம் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அடக்கி, அந்த அழுகுரல் ஓய்வதற்குள், தி.மு.க. அரசு அமைதியாக கொண்டாடத் துடித்த சுதந்திர தினம் யாருக்கானது? என்ற கேள்வியை நாம் இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.

கொலைகார இராம்கி போன்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கா? ஒடுக்கப்பட்ட, மண்ணின் பூர்வகுடி மக்களுக்கா?

தனியார்மயமாக்கத்திற்கு எதிராக
தொடரும் போராட்டம்

தூய்மைப் பணியை தனியார் – கார்ப்பரேட் மயமாக்குவதற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய போராட்டத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் என்.யூ,எல்.எம். திட்டத்தின் கீழ் நேரடியாக மாநகராட்சியால் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியும் மாநில அரசு 40 சதவிகித நிதியும் அளித்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எஃப். / ஈ.எஸ்.ஐ. (PF/ESI) பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுவது கிடையாது. இத்திட்டமே அரசின் திட்டமிட்ட சுரண்டல்தான். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேல் என்.யூ,எல்.எம். கீழ் பணி புரிந்தால், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில்தான் பெருவெள்ளம், பேரிடர் காலம், கொரோனா நெருக்கடி என எல்லா காலங்களிலும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காத நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள்.

ஆனால், சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையில் இறங்கி, தூய்மைப் பணியாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கியது, அன்றைய அ.தி.மு.க. அரசு.

2020-இல் சென்னை மாநகராட்சியின் ஏழு மண்டலங்களின் தூய்மைப் பணியை ஸ்பெயின் நாட்டின் உர்பெசர் மற்றும் இந்திய நிறுவனமான சுமீட் இணைந்த உர்பெசர் – சுமீட் (Urbaser – Sumeet) என்னும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 447 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் அளித்தது. அதற்கான துவக்க விழா அ.தி.மு.க. அரசால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதற்கடுத்து, 2021 பிப்ரவரியில் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட “இராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் லிமிடெட்” (Ramky Enviro Engineers Ltd) என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மேலும் நான்கு மண்டலங்களின் தூய்மைப் பணிக்கு டெண்டர் அளித்தது, அ.தி.மு.க. அரசு.

இவ்வாறு மொத்தம் 11 மண்டலங்களில் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் பணியாற்றிவந்த 12,000 தொழிலாளர்களும் ஒரு சில மாதங்களில் படிப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர்.

ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த தொடக்க காலங்களில் எட்டு மாதங்களாக வேலையில்லாமல், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. அரசு இழைத்த அநீதி பேரிடியாக இருந்தது. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

ஆனாலும் தூய்மைப் பணியாளர்கள் சோர்ந்து போகவில்லை, அ.தி.மு.க. அரசின் துரோகத்திற்கு அடிபணியவும் இல்லை.

உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய போர்க்குணத்துடன், வைராக்கியமும் சுயமரியாதையும் மேலோங்கிய தூய்மைப் பணியாளர்களான பெண்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2020 அக்டோபர் முதல் 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் வரை மண்டல வாரியாக மாநகராட்சி அலுவலங்களிலும், ஒருங்கிணைந்த முறையில் ரிப்பன் கட்டடத்திற்கு அருகிலும் தொடர்ச்சியாக காட்டுத்தீ போல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பரவிக்கொண்டிருந்தது.

இச்சூழலில்தான், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். 10 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்த 12,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக உயர்நீதிமன்ற வழக்கின் முடிவிற்கு காத்திராமல் பணி நிரந்தரம் வழங்கக் கோரியும் தி.மு.க. பெயரில் மாநகராட்சி ஆணையருக்கு 19.01.2021 தேதியிட்ட ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அதிலும், குறிப்பாக இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தூய்மைப் பணியாளர்களுடன் களத்தில் நின்று ரிப்பன் மாளிகையில் மனு கொடுத்ததோடு, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முழங்கினார். தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் உறுதி செய்யப்படும் என வாக்குறுதியளித்தது.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. என்.யூ.எல்.எம். திட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 11 மண்டலத்தைச் சேர்ந்த 12,000 தொழிலாளர்கள் தங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் நேரில் சந்தித்து முறையிட முயன்றனர். ஆனால், அவர்களை நேரில் சந்திக்கக்கூட தி.மு.க. அமைச்சர்கள் தயாராக இல்லை.

அதன் பிறகு, செனாய் நகர், அண்ணா நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் எட்டு மாதங்களுக்கும் மேல் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக, ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் அனைத்து மண்டலத் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து தங்களை மீண்டும் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் இணைத்திட வேண்டும் என்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் அனைவராலும் கவனம் பெற்றது. அப்போதும் தி.மு.க. அமைச்சர்களோ, முதல்வரோ தூய்மைப் பணியாளர்களை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. அதிகாரிகளையும் போலீசையும் வைத்து மிரட்டினார்கள். ஆனால், அதன் பின்னரும் தனித்தனியாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட 12,000 தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்யாமல் தூய்மைப் பணியாளர்கள் முதுகில் குத்திய தி.மு.க. அரசு, புதிதாக அரசாணைகள் 152, 10, 139 ஆகியவற்றை வெளியிட்டு தூய்மைப் பணிகளை உள்ளடக்கிய பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தனது குறுகிய சுயநலமான வெறும் தேர்தல் கதகதப்பிற்காக தி.மு.க. செய்த இந்த துரோகம் 13 நாட்கள் நடந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பட்டவர்த்தனமாக தோலுரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்திற்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தூய்மைப் பணியாளர்களை தெருவில் நிறுத்திவிட்டு, அவர்களது போராட்டத்தை பற்றி தரம் தாழ்ந்த, கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புகிறது, தி.மு.க. அரசு. மறுபுறத்தில், இராம்கி என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நற்சான்றிதழ் கொடுப்பதற்கு தி.மு.க. அரசு போராடுகிறது. நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இராம்கி நிறுவனத்தை ஒரு பன்னாட்டு நிறுவனம் என வாழ்த்தி பேசுகிறார். தி.மு.க. அரசின் இந்த சாதிய – வர்க்க விசுவாசத்தின் துர்நாற்றம் நம்மை மூச்சுத் திணற செய்கிறது.

கொலைகார இராம்கி நிறுவனத்தின் பிடியில்
தூய்மைப் பணியாளர்கள்

கழிவு நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பு, கழிவு – ஆற்றல் போன்றவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனம், இந்த நிறுவனத்திற்கு கீழ் செல்வதால் ஊதிய உத்திரவாதம், பணிப்பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என இராம்கி நிறுவனத்தை தி.மு.க. அரசு தூக்கிப்பிடிக்கிறது.

ஆனால், தென் தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தின் சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களை பலிவாங்கிய, கருப்பை பாதிப்பு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் ஆகிய பாதிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான மக்களை உட்படுத்திய ஒரு கொலைகார நிறுவனம்தான் இந்த இராம்கி நிறுவனம்.

2006-ஆம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சுழி வட்டத்தை அடுத்துள்ள அ.முக்குளம் ஊராட்சியில் இராம்கி நிறுவனத்தின் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையம் (Common Bio-Medical Waste Treatment Facility – CBMWTF) செயல்பட்டு வந்தது. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து சுமார் 2,646 சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளை சேகரித்து சுத்திகரிக்கும் பணியை செய்து வந்தது. இதில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியும், அனுமதியை மீறி அண்டை மாநிலங்களிலிருந்தும் மருத்துவக் கழிவுகளை மறைமுகமாக கொண்டுவந்து சுத்திகரிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், விதியை மீறி 12 ஆழ்துளை போர்கள் போடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. ஒருபுறம் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகை காரணமாக அப்பகுதிகளில் கால்நடைகள் தொடர்ச்சியாக இறக்க ஆரம்பித்தன. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஐந்து முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு கூட டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டிய கொடிய நிலை உருவானது.

பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆலையை மூட வேண்டும் என 12 கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். மக்கள் இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டத்தால் 2013 ஜூன் 26-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆலையை சோதனையிட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபணமானது. இதற்கு இராம்கி நிறுவனம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாவட்ட நிர்வாகம் 2013 ஜூலை 4 அன்று ஆலையை மூடியது.

அதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்து மீண்டும் ஆலையை இயக்க அனுமதி பெற்ற இராம்கி நிறுவனம், தற்போதுவரை சட்டப்பூர்வமாக 20 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் சொந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். ஏராளமானோர் மருத்துவமனைக்கு அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக மடிந்துக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களை கொண்ட துணை நிறுவனங்கள் மூலம் காண்ட்ராக்ட் எடுத்து இராம்கி நிறுவனம் இயங்கி வருகிறது. ஹைதராபாத்தில் ஜவஹர் என்ற பகுதியில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான குப்பை கிடங்கில் பலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுள்ளது. தற்போது கூட ஆந்திராவில் இந்த இராம்கி நிறுவனத்தை நடத்திவரும் அயோத்ய ராமிரெட்டியை ரூ.143 கோடி நில மோசடி வழக்கில் சி.பி.ஐ. பிரதான குற்றவாளியாக இணைத்திருக்கிறது.

குறிப்பாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இராம்கி நிறுவனம் தூய்மைப் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து இயக்கி வந்தபோது, பத்து ஆண்டுகளாக தொழிலாளிகளிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். (PF) தொகையான ரூ.300 கோடியை வங்கியில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு, 2021-ஆம் ஆண்டு மாநகராட்சியால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இராம்கி நிறுவனம் ஊழல், மோசடிகள் நிறைந்த கொலைகார கொள்ளைக்கார நிறுவனம் என்பதை நன்கு அறிந்திருந்தும் தி.மு.க. அரசு இராம்கி நிறுவனத்திற்கு தூய்மைப் பணியாளர்களை தாரைவார்க்கத் துடிப்பது அவர்களை புதைக்குழியில் தள்ளுவதற்குச் சமம்.

000

பொய் பிரச்சாரங்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அவதூறுகள், சூழ்ச்சிகள், அடக்குமுறைகள் என ஆளும் தி.மு.க. அரசின் எல்லா தகிடுதத்தங்களையும் முறியடித்து கொலைகார இராம்கி நிறுவனத்திடம் விலைப்போக மாட்டோம் என தங்களது பணி நிரந்தரக் கோரிக்கைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தனியார்மயத்திற்கு எதிரான பொதுக் கருத்தை பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாடெங்கும் வஞ்சிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் மையமான கோரிக்கையை மழுங்கடிக்கவும், மடைமாற்றவும் தொடர் முயற்சிகள் நடக்கின்றன.

சான்றாக, இரவோடு இரவாக அரசு வன்முறை மூலம் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்திவிட்டு காலையில் தூய்மைப் பணியாளர்களை அழைத்து உணவுப் பரிமாறுவது போன்று கீழ்த்தரமான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. 2016–இல் முக்குளத்தில் இராம்கி நிறுவனத்திற்கு எதிராக போராடிய தற்போதைய நிதித்துறை அமைச்சர் தென்னரசு மூலமாகவே தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. “பணிநிரந்தம் செய்யக் கூடாது” என சாதி ஒழிப்பையும், பணி நிரந்தரக் கோரிக்கையையும் எதிர்நிலைப்படுத்தும் விதமாக விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இவையெல்லாம், ஆளும் தி.மு.க. அரசு, தூய்மைப் பணி கார்ப்பரேட்மயம் எனும் தன்னுடைய கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. கார்ப்பரேட்டுகளின் நலனுக்கேற்ப சென்னை உட்பட அனைத்து நகரங்களையும் மறுகட்டமைப்பு செய்துவரும் தி.மு.க. அரசு, அதன் ஓர் அங்கமாக தூய்மைப் பணியை கார்ப்பரேட்மயமாக்குவதிலும் தீவிரமாக உள்ளது.

ஆனால், இதற்காக தூய்மைப் பணியாளர்களும் ஓய்ந்துவிடப் போவதில்லை. “காண்ட்ராக்ட் முறையை இரத்துச் செய்! மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்காதே! தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்!” என்ற இலக்கை அடையும் வரை தூய்மைப் பணியாளார்கள் போராட்டங்கள் தொடரும். போராடும் தூய்மைப் பணியாளர்களோடு துணைநிற்போம்!


பூபாலன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க