கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை (Gaza City) யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.
காசா நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மக்கள் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசுவது; இராணுவப் படைகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டே முன்னேறுவது; டாங்கிகள் மூலம் குடியிருப்புகளை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து அம்மக்களை அச்சுறுத்தி வெளியேற்றி வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
காசா நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேலிய இராணுவப் படைகள், நகரின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை நோக்கி முன்னேறி வருகின்றன. இதற்காக நகரின் ஷேக் ரத்வான் மற்றும் டெல் அல்-ஹவா பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன் விளைவாக, செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காசா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அம்மக்கள் பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியிலுள்ள காசா நகரத்திலிருந்து, எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக காசா நகரத்தை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேலால் காசா மீது தொடுக்கப்பட்டுவரும் இந்த இனப்படுகொலைப் போரில் 65,000-த்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க உலக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram