நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை

பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடுமுழுவதும் அக்டோபர் அல்லது நவம்பரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி  அங்கு “சிறப்பு தீவிர மறு ஆய்வு” (Special Intensive Revision – SIR) என்ற பாசிச நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன்மூலம், பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு ஏதுவாக, சிறுபான்மையினர், பெண்கள் என 65 இலட்சம் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது தேர்தல் ஆணையம். மேலும், சிறப்பு தீவிர மறு ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 80,000 வாக்காளர்கள் போலி மற்றும் தவறான முகவரியில் பதிவு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இதற்கு அம்மாநில மக்கள், எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தற்போது இப்பாசிச நடவடிக்கையை நாடுமுழுவதும் விரிவுபடுத்தத் தேர்தல் ஆணையம் ஆயுத்தமாகியுள்ளது.

சிறப்பு தீவிர மறு ஆய்வு என்பது இதற்குமுன் அம்மாநிலத்தில் தீவிர மறு ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து தங்களது இந்திய குடியுரிமையை நிரூபித்து அதன்மூலம் வாக்காளர் தகுதியை நிரூபிப்பதாகும்.

சான்றாக, தமிழ்நாட்டில் 2002-இல் தீவிர மறு ஆய்வு நடத்துப்பட்டுள்ளது.  எனவே 2002-இல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களுடைய வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டியிருக்கும். நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் 2002 – 2004 ஆண்டுகளுக்கு இடையில்தான் தீவிர மறு ஆய்வு நடந்துள்ளது.


படிக்க: குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்


அதேபோல், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வுப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது கவனிக்கத்தக்கது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பா.ஜ.க., தற்போது தேர்தல் ஆணையத்தின் துணையுடன் சிறப்பு தீவிர மறு ஆய்வு என்ற பெயரில் வாக்காளர் பட்டியலைக் காவிமயமாக்கியும், மோசடிகளை அரங்கேற்றியும் வெற்றிபெற முயல்கிறது.

பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.

ஆரம்பத்தில் பீகாரில் இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை நடைமுறைப்படுத்தும்போது தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இப்போது வாய் திறக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடி குறித்துப் பேசிவரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட இப்பிரச்சினையை பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காகத்தான் பயன்படுத்துகிறார். பாசிசமயமாகிவரும் இத்தேர்தல் கட்டமைப்பிற்குள்ளேயே ‘நியாயமான தேர்தலை’ நடத்தி பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. மக்களையும் நம்பவைக்க முயல்கின்றன.

உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர மறு ஆய்விற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், “தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு உறுப்பு என்பதால் அது ‘தேர்தல் பணி’யை மேற்கொள்வத் தடுக்க முடியாது” என்று கூறி சிறப்பு தீவிர மறு ஆய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது.

எனவே, தேர்தல் கட்டமைப்பு பாசிசமயமாகி வருவதை அம்பலப்படுத்தி பாசிச கும்பல் தேர்தலில் பங்கேற்பதைத் தடை செய்யும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே தற்போதைய உடனடி தேவையாக உள்ளது.


அகதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க