வரலாற்றில் இன்று: அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்

இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.

1951-ஆம் ஆண்டு அன்றைய சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இம்மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.

இந்து மசோதா மீதான விவாதத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சனாதன கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் இஸ்லாமியர்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

“இந்துச் சட்ட மசோதாவை எதிர்ப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதிய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதரிப்பதாகக் கூறிய நேரு பல்டி அடித்தார்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவற்றைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு சமரச யோசனையை முன்வைத்தார். அதனை அம்பேத்கர் ஏற்ற போதிலும், மசோதாவின் அந்த ஒரு பகுதியைக் கூட நிறைவேற்ற முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான், இனியும் தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி செப்டம்பர் 27, 1951 அன்று பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்நிகழ்வானது அம்பேத்கர் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்ததன் துலக்கமான வெளிப்பாடாகும். இக்கட்டமைப்பானது குறைந்தபட்ச சீர்திருத்தங்களைக் கூட செய்வதற்கு அனுமதிக்காத மக்கள் விரோதமானது என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுவதாகும்.

இன்றோ, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச கும்பலின் தலைமையில் நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பு இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்பட்டமான பாசிச சர்வாதிகாரம் அரங்கேறி வருகிறது. இத்தகைய சூழலில், இக்கட்டமைப்பிற்கு மாற்றான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டமைப்பதே இன்றையத் தேவையாக உள்ளது.

செய்தி ஆதாரம்:
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்,
புதிய கலாச்சாரம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க