இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!

சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இராணுவத்தில் சேர மறுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது காசாவை மொத்தமாக அழிக்கத் துடிக்கும் நெதன்யாகுவிற்கு ஒரு புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் மீது இன அழைப்பை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. அக்டோபர் 2023 முதல் இப்போது வரை ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அரசு ஈவிரக்கமின்றி கொன்று வருகிறது. இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேலான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 18,000-க்கும் மேல் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது மேலும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

காசா முழுவதும் பஞ்சமும் பட்டினியும் திட்டமிட்டே திணிக்கப்படுகிறது. உணவு, மருத்துவம், இருப்பிடம் போன்ற மனித வாழ்விற்கு அடிப்படையான எல்லா தேவைகளையும் காசாவின் மக்களுக்கு மறுத்து வருகிறது இனவெறி இஸ்ரேல் அரசு. மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புகள், நிவாரணப் பொருட்கள் வழங்குமிடங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக, குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கி பாலஸ்தீனத்தை மொத்தமாக அழித்தொழிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இஸ்ரேல் பிரதமர் பாசிஸ்ட் நெதன்யாகு. அமைதியான அழகான நாடாக இருந்த பாலஸ்தீனத்தின் மக்கள் இன்று உயிர் பிழைக்க வேண்டி நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு காசாவை அழித்து ஒழிக்க துடிதுடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசு, தன் சொந்த நாட்டு மக்களின் நெருக்கடிகளை அலட்சியப்படுத்துகிறது. தொடர்ந்து நீடித்துக்கொண்டே வரும் போரால் இஸ்ரேல் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. போர் செலவுகள் மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 200 மில்லியன் டாலர் அளவு ஏற்படுகிறது (வால் ஸ்ட்ரீட் ஜர்னல் – wall street journal) என்று கணக்கிடப்படுகிறது. இதனால் அதிக வரி விதிப்பு, விலைவாசி உயர்வு என்று பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், இது எதையும் இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளாததால் இஸ்ரேல் மக்களிடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இராணுவ வீரர்களிடையே அதிருப்தி சற்று அதிகமாகவே உள்ளது.


படிக்க: பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் 


இஸ்ரேலின் இந்த இன அழிப்பின் தொடக்கத்தில் சுமார் 3,60,000 ரிசர்வ் வீரர்களும் (Reservist soldiers) ஒரு லட்சம் புதிய வீரர்களும் இஸ்ரேல் இராணுவப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வரலாற்றில் இராணுவப் படையில் அதிக பேரை சேர்த்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த இன அழிப்பின் தொடக்கத்தில் இஸ்ரேல் இராணுவப்படை விடுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரேல் இராணுவத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இஸ்ரேல் அரசை நம்பியும் அது ஊட்டிய தேச வெறியின் காரணமாகவும் இப்போரில் ஈடுபடுவது தங்களின் நாட்டிற்கு தாங்கள் செய்யும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு என்று கருதினர்.

ஆனால், தற்போது இந்த நிலை மாறிக்கொண்டே வருகிறது. காசாவை மொத்தமாக அழித்தொழிக்க வேண்டும்; அதற்கு மாற்றாக புதிய பல திட்டங்களைச் செய்யப் போகிறோம் என்று நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து 40,000 இராணுவ வீரர்களை இஸ்ரேல் இராணுவப் படையில் சேர்ந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் 2020-க்குள் 90 ஆயிரம் வீரர்களை  படையில் இணைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் இராணுவப்படை திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்த எண்ணிக்கையில் இராணுவப்படையில் இணைந்து கொள்ள தம்மை முன்னிறுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இராணுவ தளபதிகள் இராணுவ வீரர்களை படையில் சேர்ப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இராணுவ படை விரிவாக்கம் தற்போது 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவப்படை கூறுகிறது. ஆனால், இஸ்ரேலின் பத்திரிகையாளரான கான், இது 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளது என்று அம்பலப்படுத்துகிறார்.

இராணுவப்படையில் சேர மறுப்போரில் 1.5 சதவிகிதத்தினர் மனிதநேய காரணத்தினால் படையில் சேர மறுக்கின்றனர். ஆனால், மீதமுள்ள பெரும்பான்மையானோர் இப்போரின் மீது ஏற்பட்டுள்ள சலிப்பின் காரணமாகவும், இஸ்ரேல் அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவும், இரு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்தும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்க முடியாமல் போனதாலும் இப்போரை வெறுக்கின்றனர். இராணுவ வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போய் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

உயர்கல்வியை முடித்தவுடன் கட்டாயமாக 18-36 மாதங்கள் இஸ்ரேல் இராணுவப் படையில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் இஸ்ரேலில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். “ஒரு நாட்டை மொத்தமாக அழித்தொழிக்க முனையும் இத்திட்டத்திற்கு நாம் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது நமது கடமை; இந்த மனிதாபிமானமற்ற கொடூர அரசுக்கு வேலை செய்வதை மறுக்க வேண்டும்” என இஸ்ரேல் இராணுவப் படையில் இணைந்து கொள்வதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.


படிக்க: பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்


மேலும், இராணுவத்தில் இணைய மறுத்த ஒருவர், “இராணுவத்தில் இணைந்து கொள்ள மறுப்பது இந்த நாட்டிற்கு நாம் செய்யும் துரோகம் அல்ல. அதுவே இந்த நாட்டை நாம் காக்கும் வழி” என்று கூறியுள்ளார்.

இதே போல, 1982-ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவம் லெபனான் மீது போர் தொடுத்த போது, பெரியளவில் இராணுவப் படையினர் இராணுவத்தில் இணைவதற்கும் போரில் ஈடுபடுவதற்கும் மறுப்பு தெரிவித்தனர். இன்றைய நிலையில், அதனை விட பன்மடங்கு அதிக எதிர்ப்பை இஸ்ரேல் அரசின் மீது இராணுவ வீரர்கள் காட்டி வருவதாக இருக்கிறது. இது இஸ்ரேல் அரசுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்துவரும் இப்போரின் சூழல் இஸ்ரேல் மக்களிடையே ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் மக்கள் இந்த போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில், இஸ்ரேலின் ஊடகவியலாளர்கள் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் 61 சதவிகித இஸ்ரேல் மக்கள் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கை காசாவை பெருமளவு பாதிப்பதோடு இஸ்ரேலின் மக்கள் மீதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தே இப்போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேல் மக்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

மேலும், இஸ்ரேலில் இந்த இன அழிப்புக்கு இதுவரை மௌனம் சாதித்து வந்த ஐ.நா., மக்கள் போராட்டங்கள் காரணமாக “இஸ்ரேல் நடத்துவது ஒரு இனப்படுகொலை” என்று தற்போது அறிவித்துள்ளது. மேலும், மக்களிடையே வெடித்தெழும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்கில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தாங்கள் இன அழிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் தங்களைப் பற்றி தவறான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் காசா மீதான இன அழிப்பை நியாயப்படுத்தி வருகிறார். தனது இனவெறியையும் நெருக்கடியையும் தீர்த்துக்கொள்வதற்காக போரை நடத்துவதில் முனைப்புக் காட்டி, தன் சொந்த நாட்டு மக்களின் நெருக்கடிகளை இஸ்ரேல் அரசு உதாசீனப்படுத்துகிறது.

இத்தகைய சூழலில், இஸ்ரேலிய இளைஞர்கள் இராணுவத்தில் பணியாற்ற மறுப்பது இஸ்ரேல் அரசிற்கு அவர்கள் காட்டும் மிகப்பெரும் எதிர்ப்பாகும்.

உலகம் முழுவதிலும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மக்கள் குரல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற மக்கள் போராட்டங்களின்மூலம் இந்த இனவெறி இஸ்ரேல் அரசை போரை நிறுத்த நிர்ப்பந்திக்க முடியும். உலகம் முழுவதிலும் இது போன்ற மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைந்த  வகையில் கட்டி எழுப்ப வேண்டும். அனைத்து நாடுகளின் மக்களும் மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக தொடர்பையும் துண்டிக்குமாறும் இந்த இன அழிப்பை நிறுத்தக்கோரியும் தங்களது அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க