மத்திய சிறைச்சாலை, லாகூர்,
நவம்பர், 1930
அன்புள்ள சகோதரனுக்கு,
தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறையறைகளில் என்னைத்தவிர தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் கைதிகள் பலர் இருக்கின்றனர். எப்படியாவது தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிவிட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே பிரார்த்தனை. ஒரு வேளை அவர்களுள் நான் ஒருவன் மட்டுமே என்னுடைய கொள்கைகளுக்காக தூக்குமரத்தை ஆரத்தழுவும் பெரும் பேறை அடையப்போகும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் மனிதனாக இருக்கலாம்.
நான் அக மகிழ்வோடு தூக்குமேடையில் தாவியேறுவேன். இலட்சியத்திற்காக தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்யும் புரட்சியாளர்களின் நெஞ்சுரம் எப்படிப்பட்டது என்று இந்த உலகத்திற்குக் காட்டுவேன்.
நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும். உலகத்தின் சிரமங்களில் இருந்து தப்பிச் செல்வதற்கானதொரு வழியாக மரணம் இருக்கக் கூடாது. எதிர்பாராத வகையில் தூக்குமரத்தில் இருந்து தப்பிய புரட்சியாளர்கள், தாம் இலட்சியத்திற்காக தூக்குமரத்தை தழுவக்கூடியவர்கள் மட்டுமல்ல, இரகசியமான அழுக்கடைந்த சிறையறைகளில் செய்யப்படும் மிக மோசமான சித்திரவதைகளையும் தாங்கக் கூடியவர்கள் என்பதை இந்த உலகிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.
உன்
பகத்சிங்.
ஆதாரம்: ”தியாகி. பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” சிவவர்மா, 1986 வெளியீடு.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram