மீண்டும் பிண அரசியல்
கரூரில் நடந்தது
கூட்ட நெரிசல் மரணங்களாம்.
சரி,
அந்த கூட்டத்தினர் யார்?
அந்த கூட்டம் சேர்ந்தது எப்படி?
மரணித்தார்களே, ஏன், எப்படி?
அடுக்கடுக்கான கேள்விகள்…
ஆளுக்கொரு விளக்கங்கள்
அனைத்திலும் அரசியல் கணக்குகள்.
000
இறந்தவர்கள் யார்?
அவர்கள் அனைவரும்
ஏழை, எளிய உழைக்கும் வர்க்கத்தினர்.
விஜய்க்காக
கட்டவுட் வைத்தவனும்
காவடி தூக்கியவனின் குடும்பமும்…
அவர்கள்தான்
விஜய்க்காக உயிரைக் கொடுத்துள்ளனர்.
தன் தலைவன் காக்கவைத்தான்
ஏழு மணி நேரம்.
குடிக்க தண்ணீர் இல்லை,
மயங்கி விழும் நிலைமை,
ஆனாலும்
தலைவன் முகத்தைப் பார்க்க வேண்டும்
இது, ரசிகனுக்கு ஏற்றப்பட்ட
சினிமா போதை.
மது, கஞ்சா போதைக்கு சிறிது நேரம்
ரசிக போதைக்கு ஆயுள் காலம்.
தன் குடும்பத்தை காவு கொடுத்த பின்னரும்
தலைவனைக் கைநீட்டவில்லை
இது, ரசிகனின் நேர்மை (விசுவாசம்).
தனது ரசிகர்கள் செத்த பிறகும்
வெளியில் தலையைக் காட்டவில்லை
இது,
தலைவனின் ‘நேர்மை’.
கீழ்மட்டத் தலைவர்களோ (தளபதிகளோ),
மருத்துவமனைப் பக்கம்
திரும்பிப் பார்க்கவில்லை,
இது, தளபதிகளின் ‘நேர்மை’
தலைவனின் நேர்மையும்
தளபதிகளின் நேர்மையும்
உணர்த்துவது என்ன?
வெறுப்பு…!
உழைக்கும் வர்க்கங்கள் மீது.
அதுதான்,
கார்ப்பரேட் (ஆளும் வர்க்க) அரசியலின் அரிச்சுவடி!
அதுசரி,
காக்கவைப்பதற்காகவே
காலதாமதமாக வருபவனின்
அரசியல் கணக்கும்,
இந்த கார்ப்பரேட் அரசியலின்
அங்கம்தான்.
இது,
ரசிக போதையை
அரசியல் சூதாட்டத்தில்
மூலதனமாக்கும் கலை.
ஆகையால்,
இது, சினிமாக்காரனின் கார்ப்பரேட் அரசியல்.
000
எல்லாவற்றிற்கும் மதிப்பிருக்கிறது,
தேர்தல் நேரப் பிணங்களுக்கும்தான்.
எனினும்,
இவை, இன்னும் பலமடங்கு விலை உயர்ந்தவை.
அதை, தி.மு.க. உணர்ந்துள்ளது.
ஓடி வந்தார் முதல்வர்,
வெளிநாட்டிலிருந்து வந்தார் துணை முதல்வர்,
அமைச்சர்களோ வரிசையில்,
நிவாரணம் அறிவிக்கப்படுகிறது
சில மணி நேரங்களில்…
ஆனால்,
இந்த உழைக்கும் வர்க்கம்தான்
கள்ளக்குறிச்சியில் காவு வாங்கப்பட்டது
அங்கே இல்லாத அக்கறை
இங்கே வந்தது ஏன்?
இதுதான், பிண அரசியல்!
இது, கார்ப்பரேட் அரசியலின்
இன்னொரு பக்கம்!
பா.ஜ.க. சளைத்ததா என்ன?
தமிழ்நாட்டின்
வரிவருவாயை சுருட்டிய கட்சி.
பார்ப்பனிய எதிர்ப்புணர்வின் கோட்டையான
தமிழ்நாட்டை விழுங்க
வேள்வித் தவம் புரியும் கட்சி.
பேதங்களை விதைத்தும்
தண்டங்களால் தாக்கியும்
தாமரை முளைவிடவில்லையே,
தமிழ்நாட்டில்.
அதனால் இப்போது,
தானங்களை வழங்குகிறது.
அதுதான்,
மோடி அரசின் நிவாரணங்கள்.
இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம்,
காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம்.
கொரானா ஊரடங்கின் போது
ஆக்ஸிஜன் இல்லாமல்
மூச்சு முட்டி இறந்தவர்கள் மீது
வராத இரக்கம்,
கரூர் நெரிசலில்
மூச்சு முட்டி இறந்தவர்கள் மீது
வந்ததற்கு காரணம்
தேர்தல் நேரப் பிணங்கள்தான்.
தேர்தல் நேரங்களுக்கு மட்டுமல்ல,
கலவரங்களுக்கும் பிணங்கள் பயன்படும்,
கோத்ரா பிணங்களை வைத்து
குஜராத் கலவரங்கள்…
இது, சங்கிகளின் பிண அரசியல்.
000
பாசிச எதிர்ப்பை
அரசியல் சூதாட்டத்தில்
மூலதனமாக்கும் கலை,
இது,
திராவிட கார்ப்பரேட் அரசியல்.
எனினும்,
’பொற்கால’ திராவிட ஆட்சியை
’விமர்சிக்கும்’ விஜயைப் பார்த்து
தி.மு.க.விற்கு வியர்ப்பது ஏன்?
விஜய் உளறிய விசயங்களுக்காக
தி.மு.க. அமைச்சர்களும்
ஐ.டி.விங் படைகளும்
மூச்சு முட்ட விளக்கங்கள் கொடுப்பது ஏன்?
திராவிட ஆட்சியின் தோல்விகள்
தி.மு.க.வினரை திக்குமுக்காட வைக்கின்றன.
”பழைய ஓய்வூதியம் கொடு”
போராடுகிறார்கள் அரசு ஊழியர்கள்.
”நிரந்தப் பணி கோடு”
போராடுகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
பத்திரப் பதிவுத்துறை முதல்
பணியிட மாற்றம் வரை
கட்டியம் கூறி வாங்கப்படுகிறது இலஞ்சம்.
பரந்தூர், தட்டான்குளம், சின்ன உடைப்பு,
பொட்டலூரணி, கல்லாங்காடு, கச்சைக்கட்டி…
மக்கள் விரோத,
இயற்கையை அழிக்கின்ற
கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப்
போராடுகிறார்கள் மக்கள்.
நாள் தோறும் அதிகரிக்கின்றன,
சாதிவெறித் தாக்குதல்களும்
ஆணவப் படுகொலைகளும்.
போராடுபவர்கள் மீது பாய்கிறது
போலீசும்
குண்டர் தடுப்புச் சட்டமும்.
ஸ்டெர்லைட் கொலைகார்கள் மீது
கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை,
பகுதிநேர ஆசிரியர்கள்
பணிநிரந்தரம் செய்யப்படவில்லை…
அடுக்கிக் கொண்டே போகலாம்.
கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆகின,
கொதித்துப் போயுள்ளனர் மக்கள்.
அடக்குமுறைகள் அதிகரித்திருக்கின்றன,
அதிருப்தியடைந்துள்ளார்கள் மக்கள்.
மக்களைப் பார்த்து வரவேண்டிய அச்சம்,
விஜயைப் பார்த்து வருவதேன்?
மீண்டும் ‘விடியல்’ ஆட்சியை
விடியாமல் செய்ய
விஜயால் முடியும்,
ஏழை மக்களால்
என்ன செய்ய முடியும்?
இது,
அச்சமும் அலட்சியமும்
ஒன்றாய் இணைந்த
தி.மு.க.வின் கார்ப்பரேட் அரசியல்.
000
விஜய், சினிமா கழிசடை;
இறந்தவர்கள், ரசிக குஞ்சுகளாம்,
இருக்கட்டும்…
ஐம்பதாண்டுகள் ஆட்சி செய்தும்
திராவிட மண்ணில்,
ரசிக குஞ்சுகள் வளர்ந்ததெப்படி?
விஜய் ரசிகர்களையும்
விபத்தில் இறந்தவர்களையும்
அணில்கள் என்று தொடங்கி
வசைப்பாடி முழங்குகிறார்கள்
ஐ.டி.விங் அடியாட்களும்
வாய் வாடகையாளர்களும்.
பொங்கி வழிகிறது
’விழுமிய’ உணர்வு.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
சினிமா கவர்ச்சியை
அரசியல் மூலதனமாக்கி
கட்சியை நடத்தியதுதான், அ.தி.மு.க.
அதன் வழிவந்தவைதான்,
தே.மு.தி.க., ம.நி.ம. …
நேற்றைய கமல், இன்றைய விஜய்.
ஆனால்,
கமலை பக்கத்தில் வைத்துக் கொண்டு
விஜயை விமர்சிப்பதில்
இருக்கும் ’விழுமியம்’ என்ன?
எதிர்த்து நின்றால், மலம்.
பக்கத்தில் வந்தால் சந்தனம்!
இருப்பினும்,
விஜய் அரசியல்,
திராவிட அரசியலின் தோல்வியாம்.
இவ்வாறு கூறுபவர்கள்,
‘நடுநிலை’யாளர்களாம், அறிவாளிகளாம்.
தலைகீழாக நிற்பதால்,
காட்சிகள் தலைகீழாகிவிடுமா என்ன?
திராவிட அரசியலின் அங்கம்தான்,
சினிமா கவர்ச்சி அரசியல்.
000
போர்களில் பலவகை.
வதந்திப் போர்,
செய்திப் போர்.
இது, புதுவகை.
காசுக்குக் கூவும்
கார்ப்பரேட் ஊடகங்களும்
சமூக ஊடகங்களும்
சேர்ந்து கொண்டு மக்களைக் குழப்புகின்றன.
பிணங்களையும் ஓலங்களையும்
முதன்மைப்படுத்தி
விஜய்யை பணிய வைப்பது
ஒரு பக்கம்.
கூட்டத்தையும் நெரிசலையும்
முதன்மைப்படுத்தி
’சதி’ நடந்திருக்குமா என்று
வதந்திகளைச் செய்தியாக்குவது
இன்னொரு பக்கம்.
நடுநிலைப் போர்வையில்
ஒளிந்திருக்கும் ஊடகங்களோ
விஜய்யை தாக்காமல்
ரசிகர்களைக் குற்றவாளியாக்கும்
கொடுமைகள் மறுபக்கம்.
இறந்தவர்கள் யாராக இருந்தாலும்
நாட்டில் எது நடந்தாலும்
டி.ஆர்.பி. உயர வேண்டும்.
அதற்காக மீண்டும் மீண்டும்
ஒளிப்பரப்பப்படுகின்றன,
கரூர் ஓலங்கள்!
000
பிண அரசியலின்
இன்னொரு முகத்தைப் பாருங்கள்.
”யாரும் அரசியலாக்க வேண்டாம்”
எல்லோருக்கும் ஒரே முழக்கம்
சனாதன கட்சிகளுக்கும்
சனாதன எதிர்கட்சிகளுக்கும்.
இப்போது,
விஜய் பகடைக்காய்.
எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம்
உருட்டும் வரை உருட்டவோம்,
நிற்கும் வரைக் காத்திருப்போம்.
அதுவரை,
“யாரும் அரசியலாக்க வேண்டாம்”
”விஜய்யைக் கைது செய்!”
இது, ’விபரீத’ அரசியல்.
அந்த ’விபரீதம்’
பிண அரசியலுக்கு
முடிவு கட்டுவிடும் என்பதே.
அதனால் தான்,
எல்லோரும் ஒன்றாக முழங்குகிறார்கள்,
“யாரும் அரசியலாக்க வேண்டாம்”
எது அரசியல்?
இறந்தவர்கள் யார்,
பிண அரசியல் நடத்துபவர்கள் யார்,
இதனைப் புரிந்து கொள்வதுதான்.
புரிந்து கொண்டால்… சரி!
000
காட்சிகள் நகருகின்றன,
பிண அரசியலிலிருந்து
சதி அரசியலுக்கு.
அரசியல் விமர்சகர்,
நடுநிலையாளர் போர்வையில்,
கூலிக்கு மாரடிக்கும் கும்பல்,
’தி.மு.க.வின் சதி’ என்கிறது.
காலையில் வரவேண்டிய நீ,
ஏன் 7 மணிநேரம் தாமதமாக வந்தாய்
கேள்வியை மடக்குவதற்கு
முன்வருகிறது
சதி அரசியல்.
”எம்.ஜி.ஆர்.யை விசம் வைத்து கொன்றுவிட்டார்”
எதிராளிகளைத்
திக்குமுக்காட வைத்தார் ஜெயலலிதா.
பிண அரசியல் முடிந்தவுடன்,
ஜெயலிலதா தொடங்கிய
சதி அரசியலின் கதை அது.
ஜெயாவின் அரசியல் வாரிசு
எடப்பாடி அல்ல, விஜய்.
இரண்டு நாட்கள் ஓடிவிட்டன…
பதுங்கு குழியில் இருந்து
விஜய் வெளியே வரவில்லை
பதுங்கியிருக்கும் ஐ.டி. விங்குகள்
வெளியே தலையைக் காட்டுகின்றன.
”சதி நடந்திருக்க வாய்ப்பிருக்கு”
இனி,
வீறு கொண்டு எழும்
விஜய் ரசிகர் படை.
நீதி,
இறந்தவர்களுக்காக அல்ல,
விஜயைக் காப்பாற்ற.
இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.
தமிழ்நாடு,
ஆபத்தான அரசியலுக்குள்
மீண்டும் அடியெடுத்து வைக்கும் தருணம்.
சதிகளை வைத்தே
அரசியல் நடத்தும் சங்கிகள்
இனி, ’சதி அரசியலை’ப் பேசக்கூடும்.
”விஜய் கேட்பதில் நியாயமிருக்கிறது”
என அது தொடங்கும்.
எடப்பாடி ஓடிவருவார்.
மோடி முட்டுக்கொடுப்பார்.
எதிர்பாருங்கள்,
’கொள்கை எதிரி’யுடன்
கூட்டு சேர்வதும் நடக்கலாம்.
ஜனநாயகத்தை நேசிப்பவர்களும்
சனாதனத்தை எதிர்ப்பவர்களும்
சிந்திக்க வேண்டும்,
பிண அரசியலை
வேடிக்கைப் பார்க்கப் போகிறோமா,
சதி அரசியலில்
தமிழ்நாடு வீழ்வதை
சகித்துக் கொள்ளப் போகிறோமா?
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram