செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில், நடிகர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசலில் 40 பேர் இறப்பு, 100-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சியின் கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு இவ்வளவு பேர் இறந்திருப்பது இதுதான் முதல்முறை என ஊடகங்கள் குறிப்பிட்டன.
கூட்ட நெரிசலில் இறந்தவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் தாம். கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் என்பதால், இளைஞர்கள் பலரும் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கும் சூழலில், பெண்களும் குழந்தைகளும் மிதிப்பட்டு இறந்துள்ளனர்.
செப்டம்பர் 13-ஆம் தேதி, திருச்சியில் விஜய் சாலைக் காட்சி (ரோடு ஷோ) பல மணிநேரம் நடத்தப்பட்டது. அப்போதே, விஜயின் சனிக்கிழமை கூட்டங்களில் கூட்டநெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அதன் கோர முகத்தைத்தான் இப்போது கரூரில் பார்த்துள்ளோம். அந்தவகையில், இது விஜய் கட்சியினரால் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை!
000
தனது ரசிகர்கள் தன்னைக் காணத் துடிக்கும் உணர்ச்சியைத் தக்கவைக்கும் உணர்வுடன் தான், விஜயின் அரசியல் பிரச்சாரமும் அரசியல் நடவடிக்கைகளும் கட்டமைக்கப்படுகின்றன.
அவரால் குறிப்பிடப்படும் அரசியல் மாநாட்டில் கூட, சினிமா பாணியில் சேட்டைகள் செய்வது, “வாட் அங்கிள்”, “நோ அங்கிள்” என விட்டேத்தித்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, மொன்னையான விசயங்களையே கடுமையான விமர்சனங்களைப் போல பேசுவது, 10 நிமிடம் எழுதி வைத்துக் கொண்ட உரையில், பலமுறை தவறுதலாகப் பேசுவது, “சாரி” என்று சொல்வது போன்ற பல அரைவேக்காட்டுத்தனங்கள் நிறைந்துள்ளன.
இத்துடன், காலையிலிருந்து குடிநீர் இல்லாமல், உணவு இல்லாமல் காத்திருக்கும் மக்களை காக்க வைக்கும் அவலமும் அரங்கேறுகின்றன.
ஆனால், இவை எவையும் அவரைக் காண வரும் ரசிகர் கூட்டத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. விஜயைப் பார்க்க வேண்டும். இதுதான், அவர்களது ஒரே நோக்கம். அதற்காக கும்பல் கும்பலாக புறப்பட்டு வருகின்றனர். வருபவர்கள் பெரும்பாலும் விடலைப் பருவத்தினர். இவர்களில் பாதிபேர் வீட்டுக்குத் தெரியாமல் வருகின்றனர்.
இக்காரணங்களால், விஜயைப் பார்த்தவுடன் இந்தக் கூட்டம் புறப்பட்டு விடுகிறது. இதனை மதுரை மாநாட்டில் நன்கு காண முடிந்தது. மேலும், கவர்ச்சிவாத போதைக்கு அடிமையாகியிருக்கும் இக்கூட்டமானது, போகும் போது தனக்குக் கிடைத்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்திவிட்டு செல்கிறது. இதனால், விஜய் கூட்டங்களுக்கு இருக்கைகள் (சேர்) கொடுக்க முடியாது என தமிழ்நாட்டின் ஒப்பந்ததாரர்கள் கூறிவிட்டதால், மதுரை மாநாட்டிற்கு கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டுவரப்பட்டன.
ஆனால், இக்கூட்டத்தின் அராஜகங்களை கட்டுப்படுத்துவதற்கு விஜய் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மாறாக, தன்னைக் காணவரும் ரசிகர்களிடம் ஏறியிருக்கும் கவர்ச்சி போதை குறையாமல் பார்த்துக் கொள்வதுதான் விஜய் அரசியல் நடவடிக்கைகளின் உள்ளடக்கமாக உள்ளது. இதனால், அவர் பொதுவெளியில் எங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வருவதில்லை. அவ்வாறு வந்தால், ரசிகர்களுக்கு அவர் மீது இருக்கும் கவர்ச்சி மோகம் குறைந்துவிடும் என்பதுதான் இதன் காரணம்.
இதற்கேற்பதான், விஜய் சனிக்கிழமை கூட்டங்களும் கட்டமைக்கப்படுகின்றன. கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட நேரத்தில் இருந்து 7 மணி நேரம், 8 மணி நேரம் காலதாமதமாக வருவது, மக்கள் அனைவரும் காணும் வகையில் திறந்தவெளி வாகனத்தில் சாலைக் காட்சி (ரோட்-ஷோ போல) வராமல், மூடிய வாகனத்தில் வருவது, மிக நீண்ட நேரம் தனக்குப் பின்னாலேயே அந்தக் கூட்டத்தை இழுத்துவருவது, அதன் பின்னர், தான் கொண்டுவந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்களுக்குக் “காட்சி” அளிப்பது என்பதுதான், விஜய் பிரச்சார யுக்தியாகும்.
இப்பிரச்சாரத்திற்கு போலீசு அனுமதிக்கவில்லை என்றால், அது தி.மு.க. அரசு இவருக்கு எதிராக செய்யும் சதி என்று பேசுவது, இவரது இழிந்த தற்குறி அரசியலின் வெளிப்பாடாகும்.
தான் கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமல், கார்ப்பரேட்மயமாக்கப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் தி.மு.க., விஜயைக் கண்டு அஞ்சுகிறது. இதனால், விஜய் தமது அரசையும் ஸ்டாலின், உதயநிதியையும் தாக்கும் வாய்ப்புகளைத் தவிர்க்க முயற்சிக்கிறது. இதுதான், விஜய் தொடர்பான தி.மு.க.வின் முதன்மையான அணுகுமுறையாக உள்ளது.
விஜயின் முதன்மையான அரசியல் என்பது, தி.மு.க.வைத் தாக்குவதுதான். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால், தி.மு.க.விற்கு எதிரான எடப்பாடியின் விமர்சனங்களை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை; எடப்பாடியால் தி.மு.க. ஆதரவு வாக்குகளைப் பிரிக்கவும் முடியாது.
இந்நிலையில், புதிய வரவான விஜய், தி.மு.க. எதிர்ப்பு அரசியலைப் பேசுவதாலும் அவரிடம் சினிமா கவர்ச்சி இருப்பதாலும் விஜயைப் பார்த்து தி.மு.க. அஞ்சுகிறது.
எடப்பாடியைப் போல, விஜய் பா.ஜ.க.வை ஆதரிக்காமல், பா.ஜ.க.வைக் ’கொள்கை எதிரி’ என்று சொல்வதன் மூலம், எதிர்ப்பதுபோல சவடால் அடிக்கிறார். அரசியலற்ற இளந்தலைமுறையினருக்கு, பா.ஜ.க. எதிர்ப்பு சக்தியாக தன்னை அடையாளம் காட்டுவதற்கு இது போதுமானது என்பதை விஜய் புரிந்து வைத்துள்ளார்.
இதனால், தனக்கு ஆதரவாக இருக்கும் அரசியலற்ற இளந்தலைமுறை ஆதரவு தனக்கு சரிந்துவிடும் என்று தி.மு.க. கருதுகிறது.
எனவே, விஜயின் சனிக்கிழமை கூட்டம் முடிந்தால், அந்தக் கூட்டத்தில் விஜய் முன்வைத்த விமர்சனங்கள், விஜய் அணுகுமுறைகளுக்கு பதில் சொல்வதே, செப்டம்பர் 13-க்குப் பிந்தைய தி.மு.க.வின் முன்னணி தலைவர்களின் முக்கிய பணியாகிவிட்டது.
இத்துடன், மூன்றாண்டுகள் வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகளை வழங்குவது, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில், திரைப்படப் பிரபலங்களை அழைத்துப் பேசவைப்பது, இளையராஜாவுக்கு விழா எடுப்பது, பாரதரத்னா விருது வழங்க கோருவது என திரைப் பிரபலங்களைக் கொண்டு கவர்ச்சியைக் காட்டுகிறது.
000
இந்த பின்னணியில்தான், கரூரில் விஜயின் சனிக்கிழமை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலையும் அதில், தி.மு.க.வின் அணுகுமுறையையும் பார்க்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைப் பயன்பத்தி, தேர்தல் ஆதாயத்தை அடையும் வகையில், தி.மு.க. பல முயற்சிகளை மேற்கொண்டது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உடனடியாக ஓடோடி கரூருக்குச் சென்றனர்; இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணம் உடனடியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதே சுறுசுறுப்பை, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும், கவின் ஆணவப் படுகொலைக்கும் முதல்வரோ, துணை முதல்வரோ காட்டவில்லை என்பதுடன், கரூருக்கு தி.மு.க. காட்டிய ஆர்வத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கூட்ட நெரிசல் விபத்து நடந்துவிட்டது, மக்கள் இறந்துவிட்டனர் என்பதைவிட, விஜயை ஓரங்கட்டுவதற்கும் தமது ஆட்சிக்கு எதிராக மக்களிடம் எழுந்துவரும் அதிருப்தியைத் திசைத்திருப்புவதற்கும் தி.மு.க. தனக்குக் கிடைத்த வாய்ப்பாக இதனைக் கருதுகிறது.
இறந்தவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். யாரும் மேட்டுக்குடியினர் அல்ல. ஆனால், தனது முகத்தைப் பார்க்க வந்து உயிரைத் துறந்தவர்களைப் பார்க்கக் கூட வராமல், விஜய் ஓடி ஒளிந்து கொண்டார். அவர்களது கட்சியினர் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தனக்கு இந்த ரசிகர் கூட்டம் வாக்களிக்கும் என்பதுதான், விஜயின் இழிவான கார்ப்பரேட் அரசியலாகும். அந்த அளவிற்கு தனது கட்சியை ரசிகர் மன்றமாகவே வைத்துக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதி பங்கீட்டைத் தராமல், புயல் வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதியைக் கொடுக்காமல் தமிழ்நாடு மக்களை வஞ்சித்துவரும் பாசிச மோடி அரசு, கரூரில் இறந்தவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிக்கிறது. தேர்தல் நேரப் பிணங்கள் என்பதைத் தாண்டி இதற்கு வேறெந்த காரணமும் இல்லை.
மொத்தத்தில், நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும். அந்தவகையில், விஜய் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
விஜயின் கவர்ச்சி அரசியலுக்கு, தி.மு.க.வின் போலியான சனாதன எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலும் கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோத அரசியலும் வாய்ப்புகளை வழங்குகிறது. தி.மு.க.வின் இந்த பிழைப்புவாத அரசியல் அடிப்படையில் இருந்துதான், விஜய் கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தடுக்காமல், விபத்து நடந்த பின்னர், அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், தி.மு.க. அரசும் அதற்கு உடந்தையாக இருந்து சட்டப்பூர்வ கடமைகளைச் செய்யத் தவறிய கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் போலீசு கண்காணிப்பாளர் ஆகியோரும் தண்டிக்கப்பட வேண்டும்.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram