செப்டம்பர் 19ஆம் தேதியன்று சென்னையில் “பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு” சார்பில் நடைபெற்ற இனப்படுகொலையாளி இஸ்ரேலுக்கு எதிரான பேரணியில் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களோடு கலந்து கொண்டேன்.
கடந்த சில நாட்களாகவே கடும் சளி, இருமல், தலைவலி என்ற போதிலும் கூட இந்தியாவில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான மக்கள் திரள் பேரணி என்பதால் நான் கலந்து கொண்டேன்.
தொடக்கம் முதல் இறுதி வரை எழுச்சிமிகு முழக்கங்கள் விண்ணதிர வைத்தன.
ஒவ்வொருவரும் சொந்த முறையில் தங்கள் உணர்வுகளை இசுரேல், அமெரிக்கா, மற்றும் இனப்படுகொலையை மௌனமாய் இருந்து ஆதரிக்கும் மோடிக்கு எதிராகவும் வெளிப்படுத்தினர்.
குழந்தை பொம்மைகளைப் பிணம் போலக் கையில் தூக்கிக்கொண்டு சிலர் , பாலஸ்தீனக் கொடிகளோடு சிலர், உடல் முழுக்க காயங்கள் போன்று வேடமிட்டபடி பலர், பலவகையான குழுக்கள் வந்தன ஒவ்வொருவரும் ஒவ்வொரு முழக்கங்கள் அத்தனையும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக.
வகை வகையான தட்டிகள். அத்தனையும் பாசிஸ்டுகள் நெதன்யாகு, ட்ரம்ப், மோடிக்கு எதிராக..
கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கடும் மழையிலும் கூட கலையாமல் இறுதி வரை தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து இப்பேரணியை நடத்தியதாக தோழர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
வேத, வர்ண பேதங்களுக்கு எதிராக முதல் குரல் தெற்கிலிருந்து தமிழ்நாட்டிலிருந்து தொடங்கியது.
இந்தியா என்று அறியப்படும் இந்த நாட்டின் முதல் விடுதலைப் போர் தெற்கிலிருந்து அதுவும் தமிழ்நாட்டில் இருந்தே தொடங்கியது.
பாபர் மசூதியை இடித்து கலவரத்தை வடக்கில் சங்கிகள் தொடங்கிய போது தமிழ்நாடு குரல் கொடுத்ததோடு நடைமுறையில் பல போராட்டங்களையும் நடத்தியது.
இதோ இன்றைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து பாலஸ்தீன மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை இறந்து போனவர்கள் 65 ஆயிரத்திற்கு மேல்.
இதுவரை நடந்த அத்தனை போர்களிலும் கூட அத்தனை பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டது இல்லை. கடந்த 11 மாதங்களில் மட்டும் 217 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
காசாவில் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்களில் கண்ணீருடன் கால்களில் கடும் வலியுடன் இரண்டு வயது தங்கையை தோளில் சுமந்தபடி ஆறு வயது சிறுவன் ஓடிக்கொண்டே இருக்கிறான் தன் தாய் நாட்டை தேடி.
இத்தனை நாட்கள் பெயரளவிற்காவது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த ஒன்றிய அரசு, பாசிச மோடி பொறுப்பேற்ற பிறகு இசுரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்பேர் கட்சியின் தலைவர் கூறினார் .
“From the river to the sea, Palestine will be free.”
எவ்வளவு அழகான முழக்கம் மக்கள் மத்தியில் இருந்து உதித்து எழுந்திருக்கிறது.
மழையில் நான் உட்காருவதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பு இருக்கையில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார். அவரது கையில் ஆறு மாத கைக்குழந்தை.
குழந்தை தூக்கத்திற்கும் உணவுக்கும் மாறி மாறி அழுது கொண்டிருக்கிறது. மழை பெய்யும் போதெல்லாம் நான் அவர்களுக்கு குடை பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த இளம் பெண்ணின் உறவினர் அனேகமாக மாமியாராக இருக்கலாம். அவர் கேட்டார் “இந்த மழையில் எதுக்கு குழந்தையை கூட்டிட்டு வந்த?”
“இது மாதிரி அங்க எத்தனை குழந்தைக்கு தினமும் செத்துப் போகுது தெரியுமா? இன்னிக்கு உட்கார்ந்தா என்ன ஆயிடும்?” என்று பதில் அளித்தார் அந்த இளம் பெண்.
அனேகமாக அந்தப் பெண் தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். பேச்சு மொழியில் கொங்கு மணம் வீசியது.
நான் நனைந்தாலும் பரவாயில்லை இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு குடை பிடிப்பது நமது கடமை அல்லவா? என்றபடி அவர்கள் மீது மழை படாத வகையில் நான் குடை பிடித்துக் கொண்டே இருந்தேன்.
இப்படி எத்தனை தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்?
பல தந்தையர்கள், தங்கள் குழந்தைகளிடம் பாலஸ்தீன கொடியைப் பிடிக்க வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவாகவோ அல்லது அமைதியான ஆதரவாகவோ இருக்கின்றன. ஆனால் உலக நாட்டு மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் பக்கம் இருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.
இந்த ஜனவரியில் மகிழ்ச்சியாக அவர்கள் வருகிறார்கள் என்ற கவிதையை எழுதினேன். அதன் இறுதிப் பகுதியை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஒரே ஒரு
ஆலிவ் விதை
முளைக்கும் வரை
ஒரே ஒரு சூரியப்பறவை பறக்கும் வரை
ஒரே ஒரு பாப்பி
பூக்கும் வரை
ஒரே ஒரு பாலஸ்தீன்
இருக்கும் வரை
பாலஸ்தீனமும் இருக்கும்
இது பாலஸ்தீனத்துக்கு மட்டுமல்ல
தேசிய இனமும்
உழைக்கும் வர்க்கமும்
நசுக்கப்பட்ட
ஒடுக்கப்பட்ட எல்லா இடங்களிலும் மீண்டும் தளிர்க்கும்
துளிர்க்கும்
மாபெரும்
மக்கள் சக்தி முன்
ஏகாதிபத்தியங்கள் மண்டியிடும்
மண்டியிட்டே தீரும்.
மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram