காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!

டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.

டிரம்ப்-நெதன்யாகுவின் 20 அம்சத் திட்டம் முன்மொழியப்பட்ட போதே இக்கட்டுரை வெளிவந்திருக்க வேண்டும். தாமதமாக வந்திருப்பது வருத்தத்திற்குரியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி, தைவான், இலத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகெங்கும் போராட்ட அலை ஓங்கி வீசிவருகிறது. இந்த நிர்ப்பந்தத்தின் விளைவாக, ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா-இஸ்ரேலும், பாலஸ்தீனத்தின் உண்மையான விடுதலையை அங்கீகரிக்காமல், அதன் தேச விடுதலையை அடக்கி ஒடுக்கி, பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டுமென தீவிரம் காட்டுகின்றன. இந்த முடிவானது எந்தவகையிலும் காசா பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்பதை இக்கட்டுரை ஆழமாக விளக்குகிறது.

அதன் பொருட்டு, இக்கட்டுரையின் முதல் பகுதியானது, அண்மைக் காலமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய முக்கியமான சம்பவங்களை எடுத்துக் காட்டுவதுடன், அவற்றை அவர்கள் கையாண்ட அணுகுமுறையையும் விரிவாக எடுத்துரைக்கிறது. இக்கட்டுரையின் பிற்பகுதியானது, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா-இஸ்ரேல் ஆதரவு நாடுகள் முன்வைக்கும் திட்டங்களின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறியை அம்பலப்படுத்துகிறது.

இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, இக்கட்டுரை நீண்டதாக அமைந்திருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

– வினவு

***

காசா மீதான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வாக்கில், டிரெம்ப் – நெதன்யாகு இருவரும் இணைந்து, காசா போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்களைக் கொண்ட, “காசா அமைதி ஒப்பந்தம்” என்ற திட்டத்தை முன்மொழிந்தனர். இதனை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் ஹமாஸ் ஏற்கவேண்டும்; இல்லையேல் இதற்கு மேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார், தொடர்ந்து மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து பிணையக் கைதிகளைவிடுவிப்பது போன்ற ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும் பிற விசயங்கள் பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டுமெனத் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. நேற்று இக்கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில், அந்தப் பேச்சுவார்த்தை நேற்று காலை எகிப்தில் தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது.

டிரம்ப்-நெதன்யாகுவின் இந்த முன்மொழிதலானது, அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக, ஐ.நா.வில் கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக, பணிந்து வந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பேச்சுவார்த்தையின் முடிவுகள் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நமக்கு விடை தெரிய வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

சர்வதேச ஊடகங்களின் மேற்கண்ட கூற்றுகள் உண்மையா?

இது, அமைதி ஒப்பந்தமா?

இது, இரு தரப்புகளையும் சமமாக அணுகுகிறதா?

இது, நடைமுறையில் சாத்தியமானதா?

போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் எழுகின்றன.

டிரம்ப்-நெதன்யாகு கும்பல் பணிந்துவிட்டதா?

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நாம் மீண்டும் ஒருமுறை கவனிக்க வேண்டும்.

காசாவை முற்றிலும் ஆக்கிரமிக்கப் போவதாகவும் ஒரு பேரழிவுப் போரைத் தொடுக்கப் போவதாகவும் நெதன்யாகு ஆகஸ்டு முதல் வாரத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, காசாவின் மிச்சமீதமிருக்கும் கட்டிடங்களைத் தகர்ப்பதற்காக நேரடியாக இராணுவம் களமிறக்கப்பட்டது. காசா நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் சில நிமிடங்களுக்கு முன்னதாக அறிவித்துவிட்டு, அடுக்குமாடி கட்டிடங்களை பீரங்கிகளைக் கொண்டு ஏவுகணைகளைக் கொண்டும் தகர்க்கத் தொடங்கியது, இஸ்ரேல் இராணுவம்.

இக்கொடூரமான தாக்குதலின் விளைவாக, மக்கள் மேலும் அதிக அளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஜூலை மாதம் வரை, மக்கள் குடியிருப்புகளின் மீது தாக்குதல் தொடுப்பது மட்டுமின்றி, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்று வந்தது. தற்போதோ, முகாம்களில் கூட மக்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படாமல், விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் காசா நகரில் இருந்து வெளியேறி, ஜோர்டான் எல்லையில் குழுமினர்.

இந்நிலையில், ஹமாஸ் இயக்கத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை தனது போர் ஓயாது என நெதன்யாகு அமைச்சர்கள் முன்னிலையில் கொக்கரித்தார். அதனையே நாட்டு மக்களுக்கும் அறிவிக்கச் செய்தார். ஹமாஸ் மக்களுடன் மக்களாக கலந்துள்ளது, ஜோர்டான் எல்லையில் இருக்கும் மக்கள் மத்தியிலும் ஹமாஸ் இருக்கிறது, அதனால், ஜோர்டானின் அப்பகுதிகள் மீதும் தாக்குதல் தொடுக்குப்படும் என வெறிப் பிடித்து கத்தினார்.

பிணையக் கைதிகளை மீட்பதற்கான எந்த முயற்சியும் இல்லாமல் ஹமாஸைத் தாக்குவதை, அழிப்பதில் மட்டுமே நெதன்யாகு குறியாக இருப்பதை எதிர்த்து, இசுரேலில் நெதன்யாகுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. இவை நெதன்யாகு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இஸ்ரேல் தயாராக இல்லை.

மக்கள் போராட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகிவரும் ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தன.

முதலில் பிரான்ஸ், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, பல நாடுகளும் அடுத்துத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகத் தெரிவித்தன. செப்டம்பர் மாத இறுதியில் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவது என்ற வகையில் இந்நாடுகளின் செயல்பாடுகள் அப்போது இருந்தன.

000

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை நெதன்யாகுவைப் “போர்க்குற்றவாளி” என்றும், காசா மீது நடத்தப்படுவது ”இனப்படுகொலை” (Genocide) என்று வரையறுத்திருந்தது. இதற்கு முன்னதாக, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர்க்குற்றங்கள் இழைத்தவர் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது.

இந்த மாதிரியான எதிர்ப்புகள், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகளை நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியிருந்தாலும், இவை எந்தவகையிலும் பாலஸ்தீனத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை.

செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதிவாக்கில், அமெரிக்காவிற்கும் ஹமாஸுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த, கத்தார் நாட்டின் தலைநகரில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அங்கு தங்கியிருந்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து அத்துமீறித் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். மத்தியஸ்தம் செய்துவரும் தங்கள் நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கத்தார் கண்டித்ததுடன், இதற்கு இஸ்ரேலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

ஆனால், கத்தார் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக, அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேலிய அதிபருக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில்தான் இந்த தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கும் என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டிரம்ப்போ தனக்கு இந்த தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது என்றார். இஸ்ரேலின் இச்செயலைத் தான் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது, மத்தியஸ்தம் செய்யும் நாட்டின் மீதான தாக்குதலே. இனி, மத்தியஸ்தம் எதுவும் தேவையில்லை என்ற வகையில்தான் இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதற்குப் பின்னர், அமெரிக்காவின் நிர்பந்தத்தால், இஸ்ரேல் கத்தார் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியது; இனி, கத்தார் மீது யார் தாகுத்தல் தொடுத்தாலும் அது அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்று அமெரிக்கா கத்தாருக்கு நேட்டோ நாடுக்குரிய அந்தஸ்த்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலைமையானது, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீன விடுதலையை அங்கீகரிக்காமல், அமெரிக்கா-இஸ்ரேல் நோக்கத்திற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதை அப்பட்டமாக வெளிக்காட்டிவிட்டது. ஈழவிடுதலைப் போராட்டத்தில், நார்வேயின் பாத்திரித்தை, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலைமையில் கத்தார் ஆற்றிவருவதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

000

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காசா போர் ஓராண்டை நெருங்குவதை ஒட்டி, ஐக்கிய நாடுகள் பொது சபையில், இஸ்ரேலுக்கு கெடுவிதிக்கப்பட்டது; அதில், இஸ்ரேல், ஓராண்டுக்குள் காசாவை விட்டும், ஆக்கிமிரத்த பகுதிகளைக் கைவிட்டும் வெளியேற வேண்டும், மேற்குகரையில் நடக்கும் அத்துமீறல்களைக் கைவிட வேண்டும் போன்றவை முக்கியமான அம்சங்களாகும். ஆனால், இந்த ஓராண்டுக்குள் இஸ்ரேல் இந்த ஐ.நா. தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.

இதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்கில், 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகள் போரை உடனடியாக நிறுத்தக் கோரியும் இசுரேலை காசாவை விட்டு வெளியேறக் கோரியும் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. வழக்கம் போல, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு இந்த தீர்மானத்தை முறியடித்தது.

ஐ.நா.வில் கொண்டுவரப்படும் எந்த தீர்மானங்களையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிப்பதில்லை. இந்நிலையில், அங்கு தீர்மானங்களைக் கொண்டுவருவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வளர்ந்துவரும் போராட்டங்களில் இருந்து மக்களைத் திசைத்திருப்பவும், அமெரிக்காவிற்கு சில நெருக்கடிகளைக் கொடுத்து தங்களது நோக்கத்தை ஈடேற்ற முயற்சிக்கின்றனவே அன்றி, இவை, காசா இனப்படுகொலையைத் தடுக்க விளையவில்லை என்பதே உண்மை.

000

இதேகாலத்தில், செப்டம்பர் 16 அன்று, இஸ்ரேலின் சிறந்த திரைபடங்களுக்கு விருது வழங்கும் “ஓப்ஹீர்” (Ophir) விழாவில், “ஹயாம்” (The Sea – கடல்) என்ற பாலஸ்தீன மக்களின் துன்பங்களை விளக்கும் திரைப்படம் முதல் பரிசு பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கியவர் ஓர் இஸ்ரேலியர். திரைப்படத்தின் கதை முழுவதும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அட்டூழியங்களை விளக்கும் திரைப்படமாகும். தற்போது சிறந்த திரைப்பட விருதை பெற்றுள்ள இத்திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போருக்கும் நெதன்யாகுவிற்கும் எதிராக இருக்கும் மக்களின் உணர்வை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

அக்டோபர் 7, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய இரண்டாம் ஆண்டு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து இஸ்ரேலில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவிட்டன. பணயக் கைதிகளை விடுதலை செய்வது, காசா போருக்காக மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வாட் வரியைக் குறைப்பது, பாலஸ்தீனியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால், பல தொழில்கள் வேலைக்கு ஆள் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலைமை, பொருளாதார நிலைத்தன்மை இன்மை, அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு போன்றவை எல்லாம், இந்த அக்டோபர் 7-ஆம் தேதியை நெருங்கும் சூழலில், மக்களைக் கொதிநிலைக்குக் கொண்டுவந்துள்ளன.

ஒருபுறம் ஐ.நா. மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன; இன்னொருபுறம் சொந்த நாட்டில் மக்களின் கடுமையான எதிர்ப்புகள். இவ்வாறு பல நெருக்கடிகளை நெதன்யாகு கும்பல் எதிர்க்கொண்டு வருகிறது.

000

இந்நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி, ஐ.நா. பொதுச்சபையில், பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீன தனிநாடு கோரிக்கையை ஆதரித்தன. நெதன்யாகு பேசத் தொடங்கியதும், அவையில் இருந்து பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்து, நெதன்யாகுவின் உரையைப் புறக்கணித்தனர். இது, அந்த அளவிற்கு உலக மக்களால் வெறுக்கத்தக்கவராக நெதன்யாகு அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் இத்தாலி தலைநகர் ரோமில் லட்சக்கணக்கானவர்கள் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசா மீதான போரை நிறுத்துமாறு முழக்கங்களை எழுப்பினர். இது ஐரோப்பா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அக்டோபர் 3 அன்று இத்தாலியின் போலோக்னா நகரில் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் இஸ்ரேலை எதிர்த்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தும்பர்க் உள்ளிட்ட 470-க்கும் மேற்பட்டவர்கள் காசாவை நோக்கி மேற்கொண்ட பயணமானது, ஐரோப்பிய நாடுகளின் மக்களைப் போராட்டக் களத்திற்கு இழுத்துவருவதில் முக்கியப் பங்காற்றியது.

இந்நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி முதலாகவே தும்பர்க் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் ஆழ்கடலில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் தும்பர்க்கைக் கைது செய்தது மட்டுமின்றி, அவர் மீது கொடுமையான தாக்குதலை அரங்கேற்றி சித்தரவதை செய்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. காசாவின் மக்களுக்கு நேரும் அடக்குமுறைகள்தான், காசாவிற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கும் என்று இஸ்ரேல் காட்டி வருகிறது.

தும்பர்க்கை விடுதலை செய் என்ற போராட்டங்களும் காசா மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் முழக்கங்களாக மாறியுள்ளது.

000

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் 20 அம்சத் திட்டங்கள் கொண்ட காசா அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்டு வந்திருப்பதானது, சர்வதேச அளவில் மக்களின் போராட்டங்களால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாகும். மக்கள் போராட்டங்களால் அமெரிக்கா-இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால், அவர்கள் 20 அம்சத் திட்டத்தை முன்வைத்ததைக் காட்டி, இது ”அமைதி ஒப்பந்தம்”, ”நடுநிலை ஒப்பந்தம்” என்பது போல சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

இதைப்போலவே, காசா மீதான போரை நிறுத்தவும் நெதன்யாகுவைப் போர்க்குற்றவாளியாக கைது செய்யவும் சென்ற வாரம் உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பலையை சமாளிக்க, ஏகாதிபத்திய நாடுகள் “பாலஸ்தீனத்தைத் தனிநாடாக” அங்கீகரிக்கும் தீர்மானத்தை முன்னிலைக்குக் கொண்டுவந்தன.

இந்த நோக்கத்திலிருந்து, சவுதி மற்றும் பிரான்சும் இணைந்து ஐ.நா. சபையில் கொண்டுவந்த “நியூயார்க் பிரகடனத்தில்” பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டத்தை முன்வைத்தன. இதனை அமெரிக்கா, இஸ்ரேல் தவிர பிற நாடுகள் அங்கீகரித்தன, மேலும் பல நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பதாகவும் அறிவித்தன.

ஆனால், அரபு நாடுகளின் நிர்பந்தத்தால், டிரம்பும் நெதன்யாகுவும் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட ஏற்றுக்கொண்ட வகையில்தான் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

ஆனால், உண்மை இதற்கு நேரெதிரானது.

ஒரு நோக்கம்,
இரண்டு முன்மொழிதல்கள்

ஹமாஸ் இல்லாத பாலஸ்தீனம் என்பதுதான் ஐரோப்பிய நாடுகளின் முன்மொழிதலாகும். இது ஐ.நா. மன்றத்தில் பெருபான்மை நாடுகளால் ஏற்கப்பட்டதாகும். இதும் பாலஸ்தீனம் தனிநாடாக இருப்பதை அங்கீகரிக்கிறது. அந்தவகையில், இது இனப் படுகொலைக்கு எதிரான ஒரு தொடக்கமாக சித்தரிக்கப்பட்டது. இதனைத்தான், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்காமல் நிராகரித்தன.

ஆகையால், தற்போது டிரம்ப்-நெதன்யாகு முன்வைத்திருப்பது ஓர் ‘எதிர்’ முன்மொழிதலைப் போலச் சித்தரிக்கப்பட்டாலும், இது அந்த வரிசையில் ‘இரண்டாவது’ முன்மொழிதலாகும்.

இரண்டு முன்மொழிதல்களும் ஹமாஸை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் என்றும் காசா பகுதியை இராணுவமயமாக்க வேண்டுமென்றும் கோருகின்றன. இரண்டு முன்மொழிதல்களும் இஸ்ரேலின் அனுமதியுடன், சர்வதேசப் படை காசாவிற்குள் நுழைய வேண்டுமென்று கூறுகின்றன. இதன் மூலமாக, இப்பிரதேசத்தை புதிய நிர்வாகத்திற்கு மாற்றுவதை உறுதி செய்கின்றன.

இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்பது, டிரம்ப்-நெதன்யாகு திட்டமானது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை என்பதாகும்.

மேலும், இரண்டு முன்மொழிதல்களுக்கும் ஒற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. அது இவை இரண்டும் பாலஸ்தீனத்திற்கான ஜனநாயகத்தை நிராகரிக்கின்றன; பாலஸ்தீனம் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்பதுதான் இவற்றின் நோக்கமாகும். பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளது கொள்கையின் உண்மையான தன்மையும் இதுதான்.

அதாவது, அங்கீகரிக்கப்பட்ட அரசு – ஐரோப்பிய முன்மொழிதல் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி – அமெரிக்க முன்மொழிதல், பெயர்கள்தான் வெவ்வேறானவையே தவிர, கருத்துகள் அனைத்தும் ஒன்றே. அது, பாலஸ்தீனத்திற்கு ஜனநாயகம் கிடையாது என்பதே.

மொத்தத்தில், இவை இரண்டும், இஸ்ரேலுக்கு ஆதரவான சதித் திட்டங்களாகும். இவை, 1967-இல் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைகள் தற்போது மேலும் பல மடங்கு குறுக்கப்பட்டதைப் பற்றிப் பேசவில்லை; பாலஸ்தீனம் என்பதை, தற்போது குறுக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளான ஒரு பிரதேசமாகக் கருதுகின்றன. இந்த எல்லைகளுக்குள்ளாகவே,, பாலஸ்தீனத்தின் தேசிய விடுதலை முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

விந்தை என்ன தெரியுமா?

ஐரோப்பிய முன்மொழிதலான ”நியூயார்க் பிரகடன”த்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்த அரபும் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளும் டிரம்ப்-நெதனயாகு திட்டத்தை வரவேற்கின்றன.

இவ்வாறு, அவர்கள் அறிவிப்பதற்கு முன்னதாக, ஹமாஸின் கருத்துகளை கேட்பதற்கு கூட தயாராக இல்லை. இந்நாடுகளின் இச்செய்கையானது, ”நியூயார்க் பிரகடன”த்தை முன்வைத்தவர்களின் உள்ளகிடக்கையை வெளிக்கொணர்ந்துவிட்டது.

அமைதி ஒப்பந்தம் என்றால், அது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.

ஆனால், மேற்கண்ட இரண்டு முன்மொழிதல்களிலும், இசுரேல் தரப்புக்கான தீர்வுகள் மட்டுமே உள்ளன. பாலஸ்தீனத்திற்கு எதுவும் இல்லை. துருக்கி, கத்தார், எகிப்து, சவுதி அரேபியா ஆகிய அனைத்து நாடுகளும் இந்த விசயத்தில், பாலஸ்தீன மக்களின் விருப்பம் என்ன என்ற அக்கறையற்றவை.

இவர்களுக்கு இஸ்ரேலுடனான உறவுகள், தொழில்கள் மீண்டும் துளிர்விட வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். இவர்கள் யாருக்கும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவதைப் பற்றி கவலை இல்லை.

இவர்களது தொழில்களைத் தொடர வேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்கின்றனர். அதனால்தான், அவர்கள் பாலஸ்தீனத்தின் உரிமைகள் குறித்து பேசுவதில்லை.

‘அமைதி ஒப்பந்தங்’களின் கடந்த காலம்

2024 ஜூலையில் ஜோ பைடன் காசாவின் போர் ‘முடிவுக்கு’ கொண்டுவரப்பட வேண்டுமென்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். இஸ்ரேலியர்கள் இந்த போர்நிறுத்தத்தை ஏற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்போதிருந்து பல போர் நிறுத்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இஸ்ரேலியர்கள் ஒப்புக்கொண்டதாக, வாய்வழியாக கூறப்பட்டன.

இந்த முன்மொழிதல்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், அவை, நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையாகும்.

இவற்றில் ஒரு முன்மொழிதலை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. மார்ச் மாதத்தில், அவர்களது பணயக் கைதிகளில் பெரும்பகுதியினர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், தன்னிச்சையாக இஸ்ரேல் மீண்டும் குண்டு வீசத் தொடங்கியது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், ஜோ பைடனால் இஸ்ரேலுக்கு வழங்கப்படாமல் இருந்த ஆயுதங்களை, டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலுக்கு வழங்கியது. அதில் 2,000 பவுண்டு வெடிகுண்டுகளும் அடங்கும்.

இவ்வாறு, ஒவ்வொரு முறையும், அமைதிக்கான முன்மொழிதல்கள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் முரண்பாடு இருப்பது போன்ற ஊகங்களை அமெரிக்க ஊடகங்கள் பரப்புகின்றன. போர் நிறுத்தத்தை அமெரிக்கா கோருவதாகவும் இஸ்ரேல் அதனை மறுப்பதாகவும் நடக்கும் இந்த நாடகத்தை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த நாடகங்களின் ஒரு பகுதியாகத்தான், “அமைதி ஒப்பந்தங்கள்” எனும் முன்மொழிதல்கள் முன் தள்ளப்படுகின்றன.

இதைப்போலவே, ஈரான் மீது, இஸ்ரேல் ”12 நாள் போரை” நடத்திய போதும், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் முரண்பாடு இருப்பது போலவும் டிரம்ப் நெதன்யாகுவைத் திட்டியது போலவும் கண்டித்தது போலவும் செய்திகள் பரப்பப்பட்டன. அவை எல்லாம் நாடகங்களே என்று ஒரு சில நாட்களிலேயே அம்பலப்பட்டு போயின.

முன்மொழிதல்கள், சண்டைகள், அதிகாரப் போட்டிகள், சதுரங்க விளையாட்டுகள், ஆயுத உதவிகள் என இவை சுழற்சி அடிப்படையில் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. இத்துடன், ஹமாஸுக்கு ‘இறுதி’ எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.

அவர்களைப் பொருத்தவரை, காசாவை அழித்து ரியல் எஸ்டேட் அமைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ”டிரம்ப்பின் காசா” என்ற செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட வீடியோ அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியது.

இதனால்தான், ஒருபக்கம் சர்வதேச நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாதவர் போலவும் பின்னர், அடிபணிந்தது போலவும் நெதன்யாகும் நாடகமாடிக் கொண்டே இருந்தாலும், காசா மீதான இராணுவத் தாக்குதல்கள் மட்டும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு காரணம், காசாவை முற்றிலுமாகக் கைப்பற்றி, அதனை ரியல் எஸ்டேட்டாக மாற்ற வேண்டுமென்பதைத் தவிர வேறில்லை.

முன்மொழிதல்களின் மொழி:
பயங்கரவாதத்திற்கான இலக்கணம்

கார்ப்பரேட் ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்திகள், டிரம்ப்-நெதன்யாகு கும்பலும் ஐரோப்பிய கும்பலும் முன்வைத்திருக்கும் முன்மொழிதல்கள் ஏதோ போர் நிறுத்தத்திற்கானது, அமைதி பேச்சுவார்த்தைக்கானது என்ற தோற்றத்தை பலருக்கும் ஏற்படுத்துகின்றன.

உண்மையில், ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என்ற மனநிலையை மக்களிடம் விதைத்துவிட்டு, அதிலிருந்து இந்த கேள்வியை எழுப்பும் போது, மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, ஹமாஸ் பணிந்துவர வேண்டுமென்ற உணர்வு மக்களுக்கும் முன் வந்துவிடுகிறது.

“பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கிறோம்” என்று ஜரோப்பிய நாடுகள் தெரிவித்த போது, பல நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் என்று கருதப்படும் இயக்கங்கள், கட்சிகள் கூட, இந்த முழக்கத்தை எதிரொலித்ததை நாம் பார்க்க முடியும்.

ஆகையால், இது, ஏகாதிபத்தியவாதிகள் எப்போதும் கபட வேடதாரிகள் என்பதை மறந்துவிடுவதால், மறக்கடிக்கப்படுவதால் வரும் மனநிலையாகும். இதனை கார்ப்பரேட் ஊடகங்கள் திட்டமிட்டே செய்கின்றன.

இருக்கட்டும், ஏகாதிபத்தியவாதிகள் அமைதியை விரும்புவதாக சொல்வதன் மொழியை நீங்கள் புரிந்து கொள்வது கடினமானது அல்ல. அவர்களைப் பொருத்தவரை தேச விடுதலையை, மக்கள் விடுதலையைக் கோருபவர்கள் “பயங்கரவாதிகள்”. இலங்கையில் விடுதலைப் புலிகள், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இப்படி பல அமைப்புகளை அவர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, சில நாட்களுக்கு முன்பு, வெனிசுலாவின் அதிபர் மதுரோவின் தலைக்கு விதித்திருந்த விலையை அமெரிக்கா அதிகரித்து அறிவித்தது. அமெரிக்காவைப் பொருத்தவரை, அவரும் பயங்கரவாதி!

பல நாடுகளில் ஆட்சியைக் கவிழ்க்க இவர்களால் உருவாக்கப்பட்ட கைக்கூலிகள்தான், தாலிபான், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகள். இவை, இவர்களுக்கு எதிராகத் திரும்பாத வரை அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டால், அவையும் பயங்கரவாத அமைப்புகள். இதுதான், ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துள்ள பயங்கரவாதத்திற்கான ‘இலக்கணம்’.

இந்த இலக்கணத்தின் அடிப்படையில்தான் இரண்டு முன்மொழிதல்களும் அமைந்திருக்கின்றன.

முன்மொழிதல்களின் மொழி
கட்டுப்படுத்துவதும் கட்டுப்படுத்தாததும்

சரி, இரண்டு முன்மொழிதல்கள் முன்வைக்கும் திட்டத்தின் பிற அம்சங்களைப் பார்ப்போம்.

முதலில், இந்த முன்மொழிதல்கள் அனைத்தும் பாலஸ்தீனத்தைக் கட்டுப்படுத்துபவையாக இருக்கின்றன. மிக சில, மட்டுமே இஸ்ரேலைக் கட்டுப்படுத்துபவையாக இருக்கின்றன. ஆகையால், இவை ஒரு தலைப்பட்சமானவை.

எனினும், இஸ்ரேல் ஒரு ரௌடி நாடு. அது, ஒப்புக்கொள்ளும் எந்த விதிகளையும் நடைமுறைப்படுத்தாது. இதுதான் இதுவரையிலான அனுபவம். ’அமைதியின் காவலர்களான’ இந்த ஏகாதிபத்தியங்கள் யாரும் இஸ்ரேலின் ஒப்பந்த மீறல்களைக் கண்டிக்கப் போவதில்லை, கட்டுப்படுத்தவும் போவதில்லை.

இந்த பின்னணியில் இருந்து இவர்கள் முன்மொழியும் திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

முக்கியமாக, காசாவில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஹமாஸ் தயாராக இருப்பதாகவும் போருக்குப் பிறகு அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தாது என்றும் ஹமாஸ் பலமுறை பேச்சுவார்த்தைகளில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.

ஏற்கெனவே மேற்குக் கரையில் இருக்கும் ”பாலஸ்தீன ஆணைய”த்தின் (Palestinian Authority) கட்டுப்பாட்டில் கூட காசாவை வைக்கப் போவதில்லை என்று கூறுகின்றன. தற்போது இருக்கும் பாலஸ்தீன ஆணையமே, அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளது. இது, இஸ்ரேலின் துணை ஒப்பந்ததாரர் (சப் காண்ட்ராக்டர்) போலத்தான் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் கூட காசாவை வைக்க முடியாது என்பதன் பொருள் என்ன?

பாலஸ்தீனத்தில் இனி, காசா என்ற பகுதியே இருக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால், இதன் மூலமாகத்தான், ஹமாஸை அதிகாரத்தில் இருந்து நீக்குவது அவர்களுக்கு எளிதான காரியமாக அமையும் என்று கூறுகிறார்கள். உண்மையில், பிரச்சினையைத் தலைகீழாகக் காட்டுவதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

டிரம்ப்-நெதன்யாகு திட்டம்:
அமைதியை நிலைநாட்டுதலும்
சர்வதேசப் படைகளின் கண்காணிப்பும்

எனினும், டிரம்ப்-நெதன்யாகு திட்டமானது, இந்த பாலஸ்தீன ஆணையம் காசாவை ஒரு போதும் கட்டுப்படுத்தாது என்று உறுதி கூறுகிறது. இதன் பொருள், காசா என்பது இனி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்பதாகும். மேலும், பாலஸ்தீன நாடு என்று கருதுவதற்கு வழிவகை செய்யும் எந்த வடிவங்களையும் நிராகரிக்கும் இஸ்ரேலின் நோக்கத்திலிருந்து முன்வைக்கப்படுவதுமாகும்.

அதாவது, இஸ்ரேல் தனது தலைமையில், பாலஸ்தீனத்தை நிர்வகிக்க சில வல்லுநர்களை அமைத்துக் கொள்ளும், இந்த வல்லுநர்களின் செயல்பாடுகள், விதிகள் எதுவும் தெளிவாக வரையறுக்கவில்லை. அவ்வளவுதான்.

இதற்கு பெயர், காசாவை முற்றிலும் இஸ்ரேலுக்கு அடிமைப்படுத்துவதல்லவா? அதன் பின்னர், அங்கு என்ன நடந்தாலும் வெளி உலகத்திற்கு தெரிய வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இதுதான், டிரம்ப்-நெதன்யாகு திட்டம் ‘அமைதி’யை உருவாக்கும் முறையாகும்.

சரி, போருக்கு பின்னர், பாலஸ்தீன ஆணையம் காசாவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், காசா பகுதிக்குள் இருக்கும் வல்லுநர்களைக் கொண்டே காசாவை ஆட்சிபுரிய முடியும். ஆனால், தற்போது இருக்கும் வல்லுநர்கள் ஏதாவது ஒரு வகையில் ஹமாஸுடனோ பாலஸ்தீன ஆணையத்துடனோ தொடர்பு உடையவர்களாக இருப்பர். அதைக் தவிர்க்க இவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கும்.

அவர்கள், நாட்டை நிர்வகிக்கும் வல்லுநர்களாகவோ அனுபவம் இல்லாதவர்களாகவோ இல்லாமல், இராணுவ அதிகாரிகளாக இருந்தால், இந்த உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் எப்படி நாட்டை (இப்பிராந்தியத்தை) நிர்வகிப்பார்கள்?

ஆகையால், காசாவை நிர்வகிக்க வேண்டியவர்கள் காசாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதன் விளைவுகள் மிக மோசமானவையாக அமைந்துவிடும் அல்லவா? இவர்கள் அரேபியர்களையும் காசாவைச் சேராத பாலஸ்தீனியர்களையும் இந்த நிர்வாகத்திற்குள் கொண்டுவந்தால், அதுவும் நிலைமையை மோசமாக்கிவிடும் அல்லவா? இது, காசா அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டது என்று பொருள் அல்லவா?

அமெரிக்கா, ஜரோப்பிய மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஓர் உண்மையில் இருந்துதான், அவர்கள் முன்வைக்கும் இந்த இரண்டு முன்மொழிதல்களும் உருவாகின்றன.

அது என்னவெனில், அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாலஸ்தீன ஆணையமும் ஹமாஸும் பாலஸ்தீன சமூகத்தில், அதன் நிர்வாகத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட, நன்கு வளர்ந்த அமைப்புகளாகும். இந்த உண்மையை மறுப்பதானது, மனித உடலில் இரத்தத்தின் பங்கை மறுப்பது போன்றதாகும்.

000

பணயக் கைதிகளை ஒப்படைப்பது குறித்து, இவர்களது திட்டம் எப்படி இருக்கிறது?

டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தின் அடிப்படையில், 72 மணிநேரத்திற்குள் ஹமாஸ் வசம்  உள்ள இஸ்ரேலிய கைதிகளையும் அவர்களின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும். இது, ஹமாஸ் வசம் இருக்கும் பணயக் கைதிகள் மொத்தமும் ஆகும். அதன் பின்னரே இஸ்ரேல் தன்வசம் உள்ள எந்தவொரு பாலஸ்தீனியரையும் விடுவிக்க முன்வரும்.

இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேலானது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 250 பாலஸ்தீனிய கைதிகளையும் 15 காசாவாசிகளின் உடல்களையும் சேர்த்து 1,700 காசா பணயக்கைதிகளை மட்டுமே விடுவிக்கும்.

ஆனால், இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 10,000-க்கும் அதிகம். இஸ்ரேல் வசம் இருக்கும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்கள் நூற்றுக்கணக்காகும்.

இதன் பொருள் என்ன?

இந்த திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கு ஹமாஸிடம் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டதாகும். இதற்குப் பிறகு, இஸ்ரேல் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இஸ்ரேல் மக்கள் போராட்டங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்றும் தெரியாது.

அதன் பின்னர், ஹமாஸை நிராயுதபாணியாக்குவதைத் தொடங்குவார்கள். சர்வதேச தலையீட்டுப் படை இப்பணியைச் செய்யும். இஸ்ரேலின் குற்றச் செயல்பாடுகள் எதையும் தடுக்க வக்கற்ற சர்வதேச நாடுகளின் படை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

போர் தொடுத்து காசா மக்களைக் கொன்றவர்கள், ஹமாஸ் தேடுதல் வேட்டையை நடத்துவார்கள், காசாவின் மேல் பகுதி கட்டிடங்களை எல்லாம் இடித்துத் தள்ளியவர்கள், அதன் பூமிக்கு அடியில் இருக்கும் பகுதிகளை எல்லாம் அகழ்ந்தெடுப்பார்கள். காசாவை முற்றிலுமாக, தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள். இதுதான், சர்வதேச தலையீட்டுப் படையின் செயல்பாடாக இருக்கும்.

இதற்கு சாட்சி வேண்டுமா?

சிரியாவில் நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாருங்கள். சிரியாவில் தற்போதைய நிர்வாகம் இஸ்ரேலுடன் வெளிப்படையாக ஒத்துழைத்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் இன்னும் தெற்கில் ட்ரூஸ் (Druze) சிறுபான்மைக் கிளர்ச்சிப் படையை ஆதரித்து, அது விரும்பும் போதெல்லாம் அந்நாட்டின் மீது குண்டுவிசித் தாக்குகிறது.

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த மீறல்களை இஸ்ரேல் செய்துள்ளது. சர்வதேச நாடுகள் இவை எதையாவது தடுத்துள்ளனவா? இல்லை.

சர்வதேச தலையீட்டுப் படை என்பது, காசாவை முற்றிலும் அடிமையாக்குவது, அதன் இரத்தமான ஹமாஸை உறிஞ்சி எடுப்பதுதான்.

இதற்கு மேல், இவர்கள் சொல்லும் “மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நெறிமுறை” என்னவாக இருக்கும் என்பதை இவர்கள், பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு இப்போது செய்துவருவதைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

இதற்காகத்தான், இத்திட்டத்தில், காசா மக்கள் விரும்பினால், காசாவில் இருந்து வெளியேறலாம் போன்ற அம்சங்களையும் சேர்த்துள்ளார்கள்.

மேலும், டிரம்ப்-நெதன்யாகு திட்டமானது, காசா மறுகட்டமைப்பின் போது பாலஸ்தீனியர்கள் எங்கு வாழ்வார்கள், இன அழிப்பு நடைபெறாது என்பதற்கான உத்தரவாதங்கள் என்ன, மக்களுக்கு காப்பீடு தீர்வுகள் வழங்கப்படுமா, இஸ்ரேலிய மீறல்களைத் தடுக்கவோ, தண்டிக்கவோ வழிவகைகள் என்ன என்ற எந்த உறுதியோ முன்மொழிதலோ இதில் இல்லை. அப்படியெனில், இந்த டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தின் நோக்கம் என்ன?

ஆயுதச் செலவுகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவது.

பாலஸ்தீனியர்களின் அனைத்துவித எதிர்ப்புகளையும் கைவிடச் செய்து, சரணடையச் செய்தல்; அதன் மூலமாக, காசாவின் ஒவ்வொரு பகுதிகளையும் கைப்பற்றி விழுங்குவதற்கான தங்களது நேரத்தையும் போர்ச் செலவுகளையும் மிச்சப்படுத்திக் கொள்ளுதல்… இதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

இறுதியாக, “பாலஸ்தீன நாடு என்று ஒன்று இருக்காது” என்று இரத்த வெறிப்பிடித்த நெதன்யாகு தொடர்ந்து கொக்கரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுதந்திரமாக சுற்றித்திரியும் போர்க்குற்றவாளியான அவர், எந்த நாட்டினாலும் தடுக்கமுடியாத போர்க்குற்றங்களைத் தொடர்ந்து செய்துவரும் அவர், “பாலஸ்தீனத்தில் இன அழிப்பையும் இனப் படுகொலையையும் தடுத்து நிறுத்துவார்” என்று நீங்கள் நம்ப வேண்டும்.

அதனைத் தவிர, டிரம்ப்-நெதன்யாகு திட்டம் கோருவது வேறொன்றும் இல்லை.

இறுதி நோக்கம், காசா மட்டுமல்ல
பிராந்திய மேலாதிக்கம்
அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

டிரம்ப்-நெதன்யாகு இருவரும் காசா குறித்து பேசும் போதெல்லாம், ஈரான் பற்றி பேசுகின்றனர். இது, ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ஏற்கனவே, “ஜோர்டானில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் மத்தியில் ஹமாஸ் ஒழிந்திருக்கிறது, அங்கேயும் தாக்குதல் தொடுப்போம்” என்று நெதன்யாகு பேசியதை நாம் கவனிக்க வேண்டும்.

இதன் பொருள், “ஈரான் வழியிலான எதிர்ப்பு அச்சை” அனைத்து வகையிலும் முறிப்பதாகும். இந்த ஈரானிய வழியான எதிர்ப்பை நெதன்யாகு, இஸ்ரேலுக்கான ”சாபம்” என்று குறிப்பிடுகிறார். இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவதன் பொருள், இப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான்.

அதனால், டிரம்ப்-நெதன்யாகு திட்டமானது, லெபானின் உந்துதலினால், ஹெல்புல்லாவை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதாவது, காசாவில் ஹமாஸுக்கு முடிவு கட்டப்படும் போது, ஹெஸ்புல்லாவிற்கும் முடிவு கட்டப்பட்டுவிடும், அதன் மூலமாக, ஈரான் மீதான தாக்குதலுக்கு வழிவகை செய்யப்பட்டுவிடும்.

மொத்தத்தில், இப்பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது, ஈரான் இஸ்லாமிய குடியரசு ஆகும். அதனை அழித்து அப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தொடக்கம்தான், ”காசா அமைதி” திட்டமாகும்.

ஆகையால், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஈரான் ஆகியோருக்கு இங்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று போரில் ஊன்றி நிற்பது, இன்னொன்று, சரணடைந்து, இஸ்ரேலிய மேலாதிக்கத்திற்கு வழிவகை செய்வது.

இவ்வாறாக, ஹமாஸை வீழ்த்தப்பட்டால், அது வீழ்ந்துவரும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான திசையை மாற்றி, அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கான வழியைத் திறந்துவிடும் என்பது அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்பாகும்.

ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பார்ப்புகள்
தகர்த்தெறியப்பட வேண்டும்

இங்கே, பாலஸ்தீன பத்திரிக்கையாளர் ஒருவரின் புகழ்பெற்ற வரிகளை நினைவுப்படுத்துவோம்.

“இது,
ஒருவனின் காலடியில்
இறப்பதைவிட சிறந்தது”

ஆம், போராடுவது, போராடுவது, போராடுவது மட்டுமே.

நம்மிடம் இருக்கும் ஏக்கம் என்ன? பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை நிறுத்திவிட வேண்டும் என்பது மட்டுமே. நாம் பாலஸ்தீன பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு சிரமப்படுகிறோம். அதனால், மக்கள் கொல்லப்படுவது மட்டும் விரைவாக நிறுத்தப்பட வேண்டுமென்ற மனநிலைக்கு பலியாகிறோம். இதனால், ஏதாவது ஓர் அமைதி ஒப்பந்தம் வந்துவிடாதா என்று எதிர்ப்பார்க்கிறோம்.

ஆனால், “ஓநாய்கள்தான் அமைதி ஒப்பந்தங்களை முன் தள்ளுகின்றன” என்பதை புரிந்துகொள்ள சிரமப்படுகிறோம்.

இந்த சிரமமானது, நமது செயலின்மையில் இருந்து வருகிறது. நாம் உத்தரவாதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் இருந்து பிறக்கிறது.

காசாவை நெருங்கிய போது, கிரேட்டா தும்பர்க் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது குறித்து, அவர்களது சக போராளிகள், ”எங்கள் கண் முன்னே குட்டி கிரேட்டாவை அவள் தலைமுடியால் இழுத்து, அடித்து, இஸ்ரேலியக் கொடியை முத்தமிடும்படி வற்புறுத்தினார்கள். மற்றவர்களுக்கு எச்சரிக்கும் விதமாக அவளுக்கு கற்பனை செய்யக் கூடிய அனைத்து சித்திரவதைகளயும் செய்தார்கள்” என்று டிவிட் செய்துள்ளார்கள்.

கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தும்பர்க் பேசிய காணொளி டிவிட் மூலமாக உலகம் முழுவதும் பரவியது, இதோ அந்த காணொளியில் தெரிவித்த கருத்து,

“நான் இஸ்ரேலைப் பார்த்து பயப்படவில்லை,
மனிதநேய உணர்வை இழந்துவிட்ட
ஒரு உலகத்தைப் பற்றி
நான் பயப்படுகிறேன்”

ஆம், டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.

விடுதலை உணர்வு நமக்கு வேண்டும், ஜனநாயக உணர்வு நமக்கு வேண்டும், ஹமாஸ் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதோ, தடுக்கப்படுவதோ நமது போராட்டங்களின் மூலமாக பதிலளிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் போராடுகிறார்கள், நாமும் குரல் கொடுப்போம்.

காசா மீதான போரை நிறுத்து! போர்க்குற்றவாளி நெதன்யாகுவைக் கைது செய்! இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, காசா மறுவாழ்வுக்கு உத்தரவாதம் செய்! ஹமாஸ் இல்லாத பாலஸ்தீன தனிநாடு என்பதை நிராகரிப்போம்! என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

ஆகையால், காசாவிற்கான நமது குரல்களை உயர்த்துவோம், அவை, விண்ணைக் கிழித்து இடி முழக்கங்களாகட்டும்!


தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க