பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார். மனிதத் தன்மையற்ற இக்கொடூரச் சம்பவம் இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில் மிகுந்த வேதனையுடன் பேசும் ஹாமா பர்வீன், “நான் காலை 9 மணிக்கு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டேன். எனக்குப் பிரசவ வலி இருந்த போதிலும் பெண் மருத்துவர் இஸ்லாமிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமாட்டேன் என்று எனக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டார். நான் படுக்கையில் படுத்தேன். ஆனால் மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். என்னை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அனுப்ப வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கூறினார்” என்று இந்து மதவெறியின் கொடூர முகத்தையும் தனக்கு நேர்ந்த அவலத்தையும் அம்பலப்படுத்தினார்.
மேலும், “இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று பாகுபாடு பார்க்கிறீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனாலும் அவர் என்னைப் புறக்கணித்தார்” என்று இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட மருத்துவர் குறித்து கர்ப்பிணி பெண் பர்வீன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு காணொளியில் அவரது கணவர் அர்மான், “மருத்துவர் அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்தார். ஆனால், என் மனைவி உட்பட இரண்டு இஸ்லாமிய பெண்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டார். அவர் வேண்டுமென்றே அவர்களைத் தவிர்த்துவிட்டார்” என்று தன்னுடைய மனைவிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாசிச கும்பலின் இந்துமதவெறி – இஸ்லாமிய வெறுப்பு அரசியல், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கின்ற பெண்ணிற்கு கூட சிகிச்சையளிக்க மறுக்கும் அளவிற்கு மனிதர்களை மனிதத்தன்மையற்ற மிருகங்களாக மாற்றி வருகிறது எனும் அபாயத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.
இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே இஸ்லாமிய மக்கள் மீது தொடர் தாக்குதலை பாசிச கும்பல் நடத்தி வருகின்றது. தற்போது இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர் மறுத்துள்ள நிகழ்வையும் அதிலிருந்தே பார்க்க வேண்டியுள்ளது. பாசிச கும்பல் அமைக்க விரும்புகின்ற இந்துராஷ்டிரத்தில், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே இச்சம்பவத்தின் மூலம் காவி கும்பல் அறிவிக்கிறது.
மேலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீது தினந்தோறும் மதவெறித் தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. தலித் மற்றும் சிறுபான்மைப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram