தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு கொண்டுவரும் கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டங்களை பதிவிடாமல் தவிர்ப்பது அல்லது அரை நிமிட செய்தி பதிவாக வெளியிடுவது என திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றன. ஆனால், அக்டோபர் 6 அன்று மட்டும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக குறைந்தது மூன்று போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கல்லாங்காட்டில் 278 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் அமைப்பதற்கானப் பணியில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மிகப்பெரிய சமவெளிப் பகுதியான கல்லாங்காட்டைதான் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மேடுப்பகுதியான கல்லாங்காட்டில் பெய்யும் மழையே கண்மாய்களிலும் குளங்களிலும் நிரம்பி சுற்றுவட்டார மக்களின் விவசாய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இங்கு சிப்காட் அமைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதுடன் கல்லாங்காட்டின் பல்லுயிர் சூழலும் அழிக்கப்படும்.
எனவே, கல்லாங்காடு சிப்காட் திட்டத்திற்கு சுற்றுவட்டாரத்திலுள்ள 18 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “ஏற்கெனவே, தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்கள் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக சிப்காட் அமைந்தால் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களும் பழங்கால கோவில்களும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் மதுரை ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் எதிப்புப் போராட்டத்தைப் போன்று தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 8 அன்று சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக “டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழு” தலைமையில் 18 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சென்ற மக்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி 500-க்கு மேற்பட்ட மக்களை அடாவடியாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளது மேலூர் போலீசு.
ஆலங்குளம் சோலார் மின் நிலைய எதிர்ப்பு போராட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தில் தனியார் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். “ஆலை அமைந்தால் எங்களின் விலைநிலங்கள் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். வெப்பச்சலனம் அதிகரித்து மக்களுக்கும் உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இப்பகுதியில் சோலார் நிறுவனம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்பதை அம்பலப்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 6 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கள்ளத்திகுளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்காததால் மக்கள் விரக்தியடைந்தனர்.
இதனையடுத்து, 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஐந்து பேர் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். பின்னர் அவர்களை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும், போராடிய மக்கள் மீது தீயணைப்பு வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தை கலைத்தும், 80-க்கும் மேற்பட்டோரை அராஜகமாக கைது செய்தும் போராட்டத்தை ஒடுக்கியுள்ளது.
அந்தியூர் வனப்பகுதியை பாதுகாக்கும் போராட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டி ஈச்சம்பாறை, புதுக்காடு, காந்தி நகர், தென்னம்பட்டி, ரெட்டக்காடு உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள 1,600 விவசாய நிலங்களுக்கான பட்டாக்களை நிபந்தனைப் பட்டாவாகவும் சில நிலங்களுக்கான மதிப்பை பூஜ்ஜிய மதிப்பாகவும் வருவாய்த் துறையினர் முறைகேடாக மாற்றியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் கிராம மக்கள், தங்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலத்தின் மீதான பூஜ்ஜிய மதிப்பை நீக்கக் கோரியும் நிபந்தனைப் பட்டாக்களை இரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், தி.மு.க. அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருகிறது.
இந்நிலையில், அரசின் கவனத்தினை ஈர்ப்பதற்காக அக்டோபர் 6 அன்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் கருப்பு கொடி கட்டிக்கொண்டு பேரணியாகச் சென்றுள்ளனர். ஆனால், மந்தைப் பகுதி அருகே விவசாயிகளின் பேரணியை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும், விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் அவர்களை ஒடுக்குவதற்காக அப்பகுதியில் போலீசு குவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்காகவும் மக்கள் போராடும் போது அதனை போலீசை கொண்டு ஒடுக்குவதையும் ஊடகங்கள், ஐ.டி. விங்-கள் மூலம் திசைதிருப்புவதையும் தி.மு.க. அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் பா.ஜ.க. எதிர்ப்பு மற்றும் கவர்ச்சிவாத அரசியலின் மூலமே 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. அரசு கனவு காண்கிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க உழைக்கும் மக்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களும் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளும் முன்னுக்கு வருவதை தி.மு.க. அரசால் தடுக்க முடியாது.
மேலும், உழைக்கும் மக்களின் இக்கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்காமல் பாசிச எதிர்ப்பு என்று பேசுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. எனவே, மக்களின் இப்போராட்டங்களை வெற்றியடையச் செய்ய வேண்டியது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் தார்மீகக் கடமையாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram