திருநெல்வேலி:
நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து “பாசிச இஸ்ரேல் அரசே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!” என்கிற தலைப்பில் அக்டோபர் 4 அன்று நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தோழர் பாளை செய்யது தொகுத்து வழங்கினார். மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க-வின் நெல்லை மாநகர துணைச் செயலாளர் அப்துல் கையூம், காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் காளை ரசூல், தமிழ் புலிகள் கட்சியின் பாளை தொகுதி மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஷஹீது Dr.பழனிபாபா பாசறையை சார்ந்த M.E அகமது உசைன் ஆலிம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பை சார்ந்த கோட்டூர் கலீல், தோழர் அய்யாவழி ராமலட்சுமி பாலமுருகன், திராவிட வெற்றிக் கழக நிறுவனர் சரவணன், MMMK மாநில துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஜான், மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் ஆகியோர் கலந்துகொண்டு பாசிச இஸ்ரேலுக்கு எதிராக தமது கண்டன குரல்களை பதிவு செய்தனர்.
ஷஹீது Dr பழனிபாபா பாசறையை சார்ந்த அப்துல் ஹமீது நன்றியுரை வழங்கினார்.
ஆதித் தமிழர் பேரவை கட்சி, MPM ட்ரஸ்ட், அய்யாவழி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், ஜனநாயக சக்திகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் கின்ஷன் கண்டன முழக்கங்களை எழுப்ப, ஜனநாயக சக்திகள் முழக்கமிட்டனர். சுற்றியிருந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன உரைகளை உன்னிப்பாக கவனித்து ஆதரவளித்தனர்.
தலைமை உரையில் தோழர் தாளமுத்து செல்வா பேசும்போது, காசாவில் யூத மதவெறி இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள்மீது நடத்திவரும் இனப்படுகொலையின் கொடூரங்களை விரிவாக விளக்கிப் பேசினார். பாசிஸ்டு நெதன்யாகு அரசுக்கு மோடி அரசு வழங்கிவரும் ஆதரவையும் அதானியின் நிறுவனம் இனப்படுகொலைக்கு டிரோன்களை வழங்கிவருவதையும் குறிப்பிட்டுப் பேசினார். அவர், “இந்தியாவில் மணிப்பூர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், காஷ்மீரில் கார்ப்பரேட்டுகளுக்காக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் கலவரம் தூண்டப்பட்டு பிளவுபடுத்தப்படுகிறார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கிராமங்களை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை பாசிச மோடி அரசு கொண்டுவந்தது. அந்தமான் நிக்கோபார் கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக அழிக்கப்பட காத்திருக்கிறது. அதானியின் லாப வெறிக்காக இஸ்ரேலுக்கு டிரோன்களை அனுப்பி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்க மோடி அரசு உதவி செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக நடத்தப்படும் பாசிச மோடி அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து நாம் களமிறங்க வேண்டும். அதுதான் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு இத்தகைய ஆர்ப்பாட்டங்களே சரியான எதிர் நடவடிக்கையாக இருக்கும்” என்பதை வலியுறுத்தி ஆவேசமாகத் தனது உரையை முன்வைத்தார்.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பை சார்ந்த கோட்டூர் கலில் தனது உரையில், பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்து பேசியதுடன், “பாலஸ்தீன மக்கள் ஓர் நாள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள். அந்த நாள் விரைவில் வரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் காளை ரசூல் அவர்கள், இந்திய விடுதலைக்கு காங்கிரஸ், அபுல் கலாம் ஆசாத் பங்கு பற்றி குறிப்பிட்டு பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திலும் அதை வீழ்த்த உறுதியேற்போம் என்று பேசினார்.
அய்யாவழி ராமலட்சுமி பாலமுருகன் தனது உரையில், “காசாவில் எமது சொந்தங்களான இஸ்லாமிய மாமா, மாமிகள், குழந்தைகளை குண்டு வீசிக் கொல்வதை பாசிச இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும். அமெரிக்கா – இஸ்ரேலுக்கு துணைபோகும் பாசிச மோடி அரசு அந்த ஆதரவை திரும்பபெற வேண்டும் எனவும் அய்யாவழி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
காசா மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் தோழர் சரவணன் தனது உரையில் வலியுறுத்தி பேசினார்.
MMMK மாநில துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஜான் பேசும்போது, “காசாவில் மருத்துவமனைகளில், குடியிருப்புகளில் கொத்துக் கொத்தாக குண்டுகள் வீசப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். ஒரு குழந்தை மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதை சாப்பிடவா என அழுது கொண்டே கேட்கிறது. காசாவில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் பாசிச மோடி அரசால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். காசாவுக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகளில் மக்கள் இன்று களம் இறங்கி இருக்கின்றனர். நாமும் அவர்களோடு இணைந்து இந்த போரை நிறுத்த களமிறங்க வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
தமிழ் புலிகள் கட்சியின் பாளை தொகுதி மாவட்ட செயலாளர் தமிழ்மணி பேசும்போது, “காசாவில் 65,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசு அதற்கு துணை போகிறது. இந்திய அரசு இஸ்ரேலுடனான இராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்ய வேண்டும். அதானியின் டிரோன்களை அனுப்பி காசா மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். இந்த அன அழிப்புப் போரை நிறுத்த உலக நாட்டு மக்களோடு நாமும் களமிறங்க வேண்டும்” என்பதை முன்வைத்தார்.
ஷஹீது Dr பழனிபாபா பாசறையின் M.E அகமது உசைன் ஆலிம் பேசுகையில், “ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், காசாவில் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்தான் உலகிலேயே மிகவும் பயங்கரமான அரசு. இதை கண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
தி.மு.க-வின் நெல்லை மாநகர துணைச் செயலாளர் அப்துல் கையூம் பேசும்போது, “காசாவில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதை கண்டித்தும், தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் பதிவிட்டார். ஆனால், மோடியோ இப்போர் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போர் என்று பதிவு செய்கிறார். இஸ்ரேல் அரசுக்கு டிரோன்களையும் ஆயுதங்களையும் அனுப்பி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை நிற்கிறார். இஸ்ரேல் அரசையும் பாசிச மோடி அரசையும் நாம் வேரறுக்க வேண்டும்” என தனது உரையில் முன் வைத்து பேசினார்.
மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் தனது உரையில், “காசா மக்கள் மீது பாசிச இஸ்ரேல் அரசு இன அழிப்பு போரை தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோல் இந்தியாவில் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், மணிப்பூர் இனக் கலவரங்கள் என இந்தியாவில் இன, மதக் கலவரங்களை பாசிச மோடி அரசு தூண்டிவிடுகிறது. தமிழ்நாட்டில் சாதி ரீதியான மோதல்களை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ கும்பல் திட்டமிட்டு தூண்டிவிடுகிறது. அதற்காக ஆதிக்க சாதி சங்கங்களை கையில் எடுக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மக்களை பிளவுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டையும் பாசிச கும்பல் கூறு போட்டு வருகிறது. இஸ்ரேல் அரசும் அமெரிக்க ட்ரம்ப் கும்பலும் இணைந்து காசா மீதான போரை தீவிரப்படுத்தி வருவதற்கு பாசிச மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது. உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து உலக நாட்டு மக்களோடு கைகோர்த்து இக்கும்பலை வீழ்த்த முன்வர வேண்டும்” எனப் பேசினார்.
காசாவுக்கு எதிரான பாசிச இஸ்ரேலின் இன அழிப்புப் போரை எதிர்த்து உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிர்ப்புக் குரல்களோடு மேலப்பாளையத்தில் ஒலித்த இந்தக் குரலும் இரண்டறக் கலந்து காசா மக்கள் மீதான போரை நிறுத்த பங்களிப்பு செய்யும் என்கிற நம்பிக்கையோடு கூட்டம் நிறைவுற்றது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605
***
விருத்தாசலம்
கடந்த அக்டோபர் 6 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் “இந்திய பாலஸ்தீன மக்களின் நட்புறவு கழகம்” சார்பாக காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ராமர் தலைமை ஏற்க, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வரவேற்பு உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் தோழர் முகமது பஷீர், தோழர் அஹ்மது, தோழர் ராம்குமார், தமிழ்தேச மக்கள் முன்னணியின் தோழர் ராஜேந்திரன், தோழர் தீபக் மற்றும் பல தோழர்கள், ஜனநாயக சக்திகள் முன்னிலையில் கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன. தி.மு.க., காங்கிரசு, ம.தி.மு.க., சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ. எம்எல் லிபரேசன், பி.எஸ்.பி., இந்திய குடியரசு கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்த வேண்டும்; ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்; பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசிய பொருளாதாரம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களை உடனே இரத்து செய்திட வேண்டும்; இன அழிப்பு போர் குற்றவாளி நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்; மோடி அரசு இஸ்ரேல் உடனான இருதரப்பு முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:
- பாசிச இஸ்ரேலே! பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!
- ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
- உலகம் முழுவதும் உள்ள நாடுகளே! பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை உடனே ரத்து செய்யுங்கள்!
- இன அழிப்பு போர் குற்றவாளி பாசிச நெதன்யாகுவை கைது செய்து மக்கள் மத்தியில் தண்டிக்க வேண்டும்!
- இந்திய அரசே, பாசிச மோடி அரசு இஸ்ரேல் உடனான இருதரப்பு முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்!
தோழர் அசோக்குமார்,
மக்கள் அதிகாரக் கழகம்,
விருதை நகர செயலாளர்,
கடலூர் மாவட்டம்.
9443849915.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram