மேற்குவங்கத்தில் மீண்டுமொரு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.

0

மேற்குவங்கம் மாநிலத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் பகுதியில் ஐ.க்யூ. நகர மருத்துவக் கல்லூரி (IQ City Medical College) உள்ளது. இக்கல்லூரியில் ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்த 23 வயது மாணவி எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று இரவு 8:30 மணிக்கு இவர் தனது ஆண் நண்பருடன் உணவகத்திற்குச் சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் இருவரையும் பின்தொடர்ந்துள்ளது. கல்லூரி அருகில் வந்தவுடன் அக்கும்பல் மாணவியின் ஆண் நண்பரைத் தாக்கியதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, காமவெறி பிடித்த அம்மிருகங்கள் மாணவியை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளன. மாணவியிடமிருந்து ஐந்தாயிரம் பணம், செல்போனை பறித்துக் கொண்டதுடன் இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. அக்கொடூரக் கும்பலிடமிருந்து தப்பித்த மாணவி துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரத்திற்கு எதிராக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, இன்று (12.10.2025) கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பு பவுரி (21), ஃபிர்தோஸ் சேக் (23), சேக் ரியாஜுதீன் (31) மற்றும் ஷேக் சோபிகுல் ஆகிய நான்கு மிருகங்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசு கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் போலீசு, மாணவியின் நண்பர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டில் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கக் கூடத்தில் முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமுள்ள மக்களைக் கொதிப்படையச் செய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் கல்லூரி வளாகத்தின் அருகிலேயே மருத்துவ மாணவிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது மாணவிகள், பெண்களின் பாதுகாப்பின்மையை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.


படிக்க: மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்


இந்தாண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மாணவர் தலைவர் உள்ளிட்டோரால் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் இதனை நிரூபிக்கிறது.

ஆனால், மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசு அரசு, குற்றத்தை மறைப்பதிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டத்தை போலீசைக் கொண்டு ஒடுக்குவதிலுமே கவனம் செலுத்துகிறது. மாறாக, பெண்கள் மீதான இக்கொடூரத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

சான்றாக, ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.

மேலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்; சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்துவது போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட மருத்துவர்களின் நியாயமான அடிப்படையான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் மருத்துவர்களின் பாதுகாப்பிலும் மம்தா அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு, பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் பெண்கள், மாணவிகள், மருத்துவர்கள் என அனைவரின் நலனைப் புறக்கணித்துவரும் மம்தா அரசே முதன்மை குற்றவாளி.

மறுபுறம், பாலியல் பொறுக்கிகளின் கூடாரமாக உள்ள பா.ஜ.க. தேர்தல் ஆதாயத்திற்காக இக்கொடூரச் சம்பவத்தை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு மருத்துவ மாணவர்கள் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது ஐ.க்யூ நகர மருத்துவ மாணவிக்கு நீதி கோரி நடக்கும் போராட்டம் மேற்கண்ட போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிப்பதுடன் இவை அனைத்து மாணவர் போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க