சமீபகாலமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பல கார்ப்பரேட் நல நாசகாரத் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது; கடந்த ஆகஸ்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் திறக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை அதனை நிரூபிக்கின்றன.
2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கிலிருந்து தி.மு.க. அரசு மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளால் தூத்துக்குடி ‘வளர்ச்சி’ அடையும் என்றும், அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரங்கள் அதற்கு நேர்மாறாகவே உள்ளன.
மக்கள் எதிர்ப்பை மீறி கப்பல் கட்டும் தளங்கள்
கப்பல் கட்டுமானத்தில் தூத்துக்குடியை சர்வதேச முனையமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவரும் தி.மு.க. அரசு, தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறியிருப்பதாக கடந்த செப்டம்பர் 21 அன்று அறிவித்தது. கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணிகளை கேரளாவைச் சார்ந்த கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம், மும்பையைச் சார்ந்த மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders Limited) ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களும் தலா ரூ.15,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் முள்ளிக்காடு, பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் இத்தளங்கள் அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன; 90 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட்டால் முள்ளிக்காட்டில் மட்டும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பதுடன், ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், மழைநீர் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு இப்பகுதிகள் வெள்ளக்காடாகும் அபாயமும் உள்ளது.
எனவே, தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம், மனு கொடுப்பது என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி வடக்கு வைப்பாறு கிராமத்தில் கடற்கரையையொட்டி உள்ள தரிசு நிலங்களில் கப்பல் கட்டும் தளங்களை அமைக்க மக்களும் போராடும் அமைப்புகளும் முன்மொழிகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி நில அளவை பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட அடாவடித்தனங்களில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடியில் அதானியின் ஆதிக்கம் விரிவடைகிறது!
இந்தாண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025”-ஐ தி.மு.க. அரசு அறிவித்தது. கப்பல் கட்டுதல், இயந்திர உற்பத்தி, கடல்சார் உபகரணங்களை தயாரித்தல் போன்றவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாற்றுவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையின் அடிப்படையிலேயே, 2013-ஆம் ஆண்டிலிருந்து பரிசீலனையில் இருந்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தை தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
ஆனால், தி.மு.க. அரசு இத்திட்டத்தை பாசிச மோடி அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
பாசிச மோடி அரசானது 2047-ஆம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியாவை உலகளவில் ஐந்தாம் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற இலக்கில் “கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு 2047” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது நாசகார சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகும்.
இதன்படி, இந்தியாவில் எட்டு மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களை அமைக்க வேண்டும் என்கிற மோடி அரசின் திட்டத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு கப்பல் கட்டும் துறை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பிற்காக மோடி அரசு ரூ.69,725 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு திட்டத்தை 2023-இல் மோடி அரசு அறிவித்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டே குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கான பணிகளை அதானி குழுமம் தொடங்கியது. இது, ஏற்கெனவே துறைமுகத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் அதானி, கப்பல் கட்டுமானத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதைத் துலக்கமாகக் காட்டியது. மேலும், அதானியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே மோடி அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதையும் அம்பலப்படுத்தியது.
மேலும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் துறைமுக இழுவை, நங்கூரமிடுதல், பைலட்டேஜ் (Pilotage), கப்பல் போக்குவரத்து தொடர்பு, தீ கட்டுப்பாடு, அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இத்துறைமுகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள்தான் தற்போது இரண்டு கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
எனவே, தற்போது தூத்துக்குடியில் அமைக்கப்படும் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் எதிர்காலத்தில் ஒன்றிய, மாநில அரசுகளால் அதானிக்கு தாரைவார்க்கப்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் அதானிக்கான சேவையில் மோடி அரசுடன் தி.மு.க. அரசும் கைகோர்க்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது.
மேலும், வ.உ.சி துறைமுகத்தை உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், துறைமுக விரிவாக்கம் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட்டால் அப்பகுதி கடலின் பல்லுயிர் தன்மை பாதிக்கப்படும். மீன் வளம் குறைந்து மீன் பிடிக்க முடியாத நிலைமை உருவாகும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அப்பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறும் நிலைமை ஏற்படும்.
ஆனால், இவற்றை பற்றி அக்கறை கொள்ளாத தி.மு.க. அரசு தன்னுடைய கார்ப்பரேட் வர்க்க நலனிலிருந்து இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது.
மேலும், பல்லாயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக மாற்றும் திட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் துறைமுகமான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை மையப்படுத்தியே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு முதலீடுகளும் திட்டங்களும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூரிய ஒளி மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அதானியே ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இத்திட்டங்கள் யாவும் அதானிக்கு சாதகமாகவே அமையும்.
விவசாய நில அழிப்புதான் வளர்ச்சியா?
2021-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பது என தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் வேலையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வின்ஃபாஸ்ட், மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவற்றில் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலையை தமிழ்நாட்டில் நிறுவியிருக்கின்றன.
இத்தொழிற்சாலைகள் சென்னை (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை உட்பட), கோவை, ஓசூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து தூத்துக்குடியை மையமாக வைத்து நிறுவப்பட்டு வருகின்றன. ஏனென்றால், தூத்துக்குடியில் சரக்கு போக்குவரத்திற்குச் சாதகமான வகையில் துறைமுகம் அமைந்துள்ளது. அதுவும் புவியியல் ரீதியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மேலும், தூத்துக்குடியில் 3,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நான்கு தொழிற்பூங்காக்களில் 108 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகிறார். இத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
அதற்காக, தமிழ்நாட்டில் முதல்முறையாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அந்நிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதற்காக, ஆகஸ்ட் 4 அன்று “தமிழ்நாடு வளர்கிறது” (TN Rising) என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தி.மு.க. அரசு நடத்தியிருக்கிறது. இம்மாநாட்டில் ரூ.32,554 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது.
சமீபத்தில் கூட, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், தூத்துக்குடி அல்லிக்குளம் தொழிற்பூங்காவில் ரூ.1,156 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. 60 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இத்தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இவ்வாறு தூத்துக்குடியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலையை அமைப்பதற்கு, மக்களிடமிருந்து விவசாய நிலங்களை தி.மு.க. அரசு அடாவடித்தனமாக கைப்பற்றி வருகிறது. தூத்துக்குடியில் ஏற்கெனவே நான்கு தொழிற்பூங்காக்கள் உள்ள நிலையில், மீண்டும் 5,000 ஏக்கர் பரப்பளவில் மூன்று தொழிற்பூங்காக்களை அறிவித்து அதற்கான நில எடுப்பு பணிகளை தொடங்கியிருக்கிறது. இவையின்றி, இன்னும் மூன்று தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கான திட்டத்தையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதியிலுள்ள வெம்பூர், கீழக்கரந்தை, மேலக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமங்களிலுள்ள வளமான விவசாய நிலங்களை தொழிற்பூங்காவிற்காக அரசு கையகப்படுத்த முயல்வதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலங்களை அளவிடுவது; விளைந்த நிலங்களில் வாகனங்களை இறக்கி பயிர்களை நாசப்படுத்துவது உள்ளிட்ட அட்டூழியங்களை போலீசு மூலம் தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
சமூக நீதி போர்வையில் கார்ப்பரேட் மாடல் ஆட்சி!
தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘வளர்ச்சி’த் திட்டங்களால் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களே ஆகும். மாறாக, தன்னுடைய கார்ப்பரேட் நல திட்டங்களை செயல்படுத்துவதற்காக, விவசாயத்தை அழித்து, இயற்கை சுற்றுச்சூழலையும் நாசமாக்கி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை தி.மு.க. அரசு பறித்து வருகிறது என்பதே உண்மையாகும்.
இவ்வாறு வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்கள் வேறுவழியின்றி தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அங்கு அற்ப கூலிக்கு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். அத்தகைய வேலையும் மிகக் குறைந்த நபர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஏனென்றால், இத்தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் பணியமர்த்தப்படுகின்றனர். மற்றவர்கள் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாகின்றனர்.
எனவே, தி.மு.க. அரசானது தற்போது செயல்படுத்திவரும், செயல்படுத்த விழையும் ‘வளர்ச்சி’த் திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான அயோக்கியத்தனமாகும். மாறாக, தன்னுடைய கவர்ச்சிவாத அரசியல் பாணியில் ‘வளர்ச்சி’ என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு, கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியையே தி.மு.க. அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் சாதி சங்கங்களில் ஊடுருவி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி மக்களைப் பிளவுப்படுத்தி தனக்கான அடித்தளமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்மூலம், மக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட விடாமல் தடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்டம் பாசிச கும்பலின் முக்கிய குறியாகவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகவும் மாற்றப்பட்டுவரும் சூழலில், தூத்துக்குடியில் ஜனநாயக சக்திகள் மீது பா.ஜ.க. குண்டர்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசு இதனையெல்லாம் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது. மேலும், பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிட்டு வருகிறது.
ஆனால், தி.மு.க-வின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கப்பல் கட்டும் தளங்களுக்காக உப்பளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதில் முள்ளிக்காடு மக்கள் உறுதியாக உள்ளனர். தொழிற்பூங்காவிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு வெம்பூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொட்டலூரணி மீன் கழிவு ஆலைகளுக்கெதிரான போராட்டம் 500 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயலும் கொலைகார வேதாந்தா நிறுவனத்தின் சதி நடவடிக்கைகளை மக்கள் களத்தில் முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, தி.மு.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக போராடிவரும் தூத்துக்குடி மக்களோடு போராட்டக் களத்தில் தோளோடு தோள் நிற்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இப்போராட்டங்களை, தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலை வீழ்த்தும் வகையிலான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram