மாநிலக் கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவம்!

மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது போன்று, மாநிலக் கல்விக் கொள்கையைப் பற்றி எந்தவித பொது விவாதங்களும் எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலிருந்து தி.மு.க. அரசு வரைவு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.

கல்வியை காவி-கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2020-இல் ஒன்றிய மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது. இக்கல்விக் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்களும் ஜனநாயக சக்திகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக பல்வேறு கருத்தரங்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக எமது தோழமை அமைப்புகள் உட்பட பல்வேறு புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2021 – சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, தனது முதல் பட்ஜெட்டில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான எட்டு மாதங்களுக்குப் பிறகே, டெல்லி முன்னாள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் பல்வேறு துறை சார்ந்தவர்களைக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஜவஹர் நேசன் நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மாதங்களில், இக்குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுவதாகவும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை சேர்த்து மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் குற்றஞ்சாட்டி ஜவஹர் நேசன் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, இக்குழுவானது 520 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை ஜூலை 1, 2024 அன்று ஒப்படைத்தது. இக்குழு உருவாக்கிய அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்காமலும், அந்த அறிக்கையை வெறும் 80 பக்கத்திற்குச் சுருக்கி, மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது.

தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக அவசரக் கோலத்தில் மாநிலக் கல்விக் கொள்கை என்று பெயருக்கு இதை தி.மு.க. அரசு வெளியிட்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது. இது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

இதனை பேராசிரியர் ஜவஹர் நேசன் “பொதுக் கொள்கைக்குரிய அறிவியல் அடிப்படைகளையும், கொள்கைகளை வடிவமைப்பதில் வரலாற்றுரீதியாகப் பின்பற்றப்படும் உலகளாவிய மரபுகள், பாரம்பரியங்கள், நெறிமுறைகளை முழுமையாகப் புறக்கணித்திருக்கிற தனித்துவமான முதல் ஆவணமாக இது வெளியாகியிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது போன்று, மாநிலக் கல்விக் கொள்கையைப் பற்றி எந்தவித பொது விவாதங்களும் எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலிருந்து தி.மு.க. அரசு வரைவு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.

கானல் நீரான ‘கல்விக் கொள்கை’

பொதுவில், கல்வியின் நோக்கம் என்பது ஒரு பண்பட்ட சமூகப் பொறுப்புள்ள மனிதனை உருவாக்குவது என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பக்க உண்மை மட்டுமே. ஏனெனில் அந்தந்த காலகட்டத்தின் உற்பத்திமுறைக்கு உதவி செய்வதற்கு ஏற்பவே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது, நிலப்பிரபுத்துவ காலத்தில், விவசாயமே பிரதானம். எனவே, அந்தக் காலகட்டத்தில், குறிப்பாக இந்தியாவில் குலக் கல்வி முறை நிலவியது. பெருவாரியான மக்கள், குறிப்பாக உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. ஆனால், அதேசமயம் அவரவர் குலத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், அன்றைய சாதிய-நிலப்பிரபுத்துவ-விவசாய உற்பத்தி முறை நீடிப்பதற்கு அது அவசியமாக இருந்தது.

அதன்பிறகு, இங்கிலாந்தில் முதலாளித்துவம் வளர்ந்தது, கைத்தறிகளின் இடத்தை இயந்திரம் ஆக்கிரமித்தது. கைத்தறிக்கு அனுபவ அறிவு போதும், ஆனால், இயந்திரங்களுக்கு இயங்குமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், கற்றுக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அதிலிருந்துதான், நாம் படிக்கிற நவீன பொதுக்கல்வி அமலுக்கு வந்தது. இந்தப் பொதுக்கல்வியின் நோக்கம், முதலாளித்துவ உற்பத்தியை நடத்துவதற்கான கூலி அடிமைகளை உருவாக்குவதே.

ஆக, கல்வி என்பது அந்தந்த காலகட்டத்தின் அல்லது நாட்டின் உற்பத்தி முறைக்கானதாகவே இருக்கிறது. இதிலிருந்துதான் கல்விக் கொள்கையும் உருவாக்கப்படுகிறது. கல்விக் கொள்கையும், கல்வி முறையும் நிலவுகிற உற்பத்திமுறையின் பிரதிபிம்பங்களே. இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையை பரிசீலிப்பதே பொருத்தமான மற்றும் சரியான வழிமுறையுமாகும்.

கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு இவ்வறிக்கையை வெளியிட்டிருந்தாலும் ஒரு கொள்கை அறிக்கைக்குரிய தகுதியில் அது இல்லை. தமிழ்நாட்டில் ஒரு குழந்தை தனது மூன்று வயதில் அங்கன்வாடி என்கிற முன்பருவக் கல்வியில் நுழைகிறது. அவ்வாறு நுழையும் குழந்தை தனது உயர்கல்வி முடிந்த பிறகு எப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதே கல்விக் கொள்கை. இதுவே கல்விக் கொள்கையின் நோக்கம். ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன? எத்தகைய மனிதனை தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது?

“அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான எதிர்காலத்திற்கு தயாரான பள்ளிக் கல்வியை” உருவாக்குவது என்று அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டிற்கு தேவையான திறன்களைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கை வெறும் பள்ளிக் கல்வி குறித்து மட்டுமே பேசுகிறது, அதிலும் தனியார் பள்ளிகள் குறித்தோ, தாய்மொழி வழிக் கல்வி குறித்தோ, உயர்கல்வி குறித்தோ ஏதும் சொல்லப்படவில்லை.

உண்மையில், முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையிலான ஓர் ஒருங்கிணைந்த கொள்கையைத் தீர்மானிப்பதே சரியான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்.

அதுமட்டுமின்றி, தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆசிரியர்களிடமும் சாதிய உணர்வு இருக்கிறது. பள்ளிகளில், மாணவர்களை சாதிய பாகுபாட்டுடன் நடத்துவதும் நடைபெறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் தீண்டாமையும், சாதியக் கொடுமையும், தாக்குதல்களும் ஒழிந்துவிடுமா? இது குறித்த சரியான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் குறித்து கொள்கை அறிக்கையில் ஏதும் கூறவில்லை.

எனவே இதைக் கொள்கை அறிக்கை என்றே சொல்ல முடியாது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஊரு நம்ம பள்ளி, விழுதுகள், மணற்கேணி, காலை உணவுத் திட்டம் மற்றும் வானவில் மன்றம் ஆகிய திட்டங்களுக்கு கொள்கை முலாம் பூசுவதற்கானதாகவே இருக்கிறது.

’சமூகநீதிக்கு’ சவக்குழி!

இந்த ‘கொள்கை’ அறிக்கையானது சாதி, மத, இன, பாலின வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான, சமூக நீதியை நிலைநாட்டக் கூடியதாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், இது சமூக நீதிக்கு சவக்குழி வெட்டுவதாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த அறிக்கையில், வட்டாரத்திற்கு ஒன்று வீதம் ஒவ்வொரு வட்டாரத்திற்கு ஒரு வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிப் பள்ளிகள் என்பவை நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரையும் ஒரே பள்ளியில் சேர்த்து சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதாகும். இது மோடி அரசின் பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் தமிழ் வடிவமே.

இந்த வெற்றிப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ஏற்கெனவே உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கட்டடங்கள், குடிநீர், கழிவறை, மின்சார வசதி, விளையாட்டுத் திடல், சுகாதார எரியூட்டிகள் போன்ற அடிப்படை வசதிகளின்றி இருக்கின்றன. பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் நீர் வராததாலும், தூய்மைப் பணியாளர்கள் இல்லாததாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. இதனால் மாணவர்கள் போதிய நீர் கூட அருந்துவதில்லை, அதிலும் பூப்பெய்திய மாணவிகளின் நிலைமையோ மிகக் கொடூரமானது. இந்த அடிப்படை வசதிகளை செய்து கொள்வது அந்தந்த தலைமையாசிரியரின் தனிப்பொறுப்பாக மாறியிருப்பதே யதார்த்தமாக இருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அரசின் நிதியுதவியை எதிர்பார்த்திருக்கின்ற இந்தச் சூழலில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக வெற்றிப் பள்ளிகளுக்கு மட்டும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதானது சமூகநீதிக்கு எதிரானதும், வக்கிரமானதுமாகும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற அவநிலையே நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்கிறது தமிழ்நாடு அரசு. 30-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்கள் வெவ்வேறு வகுப்புகளில் ஒரே பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆசிரியர் எவ்வாறு ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்த முடியும்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஐந்து வகுப்புகளுக்கும் ஐந்து ஆசிரியர்கள் போடுவதுதானே சமூக நீதி.

இந்நிலையில் வெற்றிப் பள்ளிகளுக்கு மட்டும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிப்பது சமூக அநீதி. தனியார் பள்ளிகள் பெருகியுள்ள இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் பின்தங்கிய-ஏழை எளிய மாணவர்கள்தான் படிக்கின்றனர். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளையும் வெற்றிப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதே உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.

சமூக நீதி எனும் போது மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி, நிரந்தரப்படுத்துவதன் மூலமே பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்க முடியும்.

புறக்கணிக்கப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி

தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது, இந்தியைத் திணிக்கிறது என்பதும் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்ப்பதற்கான ஒரு காரணமாகும். இந்தித் திணிப்பால் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, அழிவை நோக்கித் தள்ளப்படும் என்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு. இந்தி மட்டுமல்ல, தாய்மொழி தவிர வேறு எந்த மொழியும் பயிற்றுமொழியாக்கப்பட்டால் தாய்மொழி அழியவே செய்யும். அதுதான் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மெல்லச் சாகிறது!

தனியார் பள்ளிகளில் தமிழ் வழிப் பள்ளிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதேபோல, அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்கு பெற்றோர்களின் ஆங்கில மோகம் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. கல்வியில் தாய்மொழியின் அவசியம் குறித்த பிரச்சாரங்களை அரசு முன்னெடுக்காததும், ஆங்கில வழிப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளில் தொடங்கியதுமே இதற்குக் காரணமாகும்.

அறிவியல்படி, பிறக்கின்ற குழந்தை தனது இரண்டு வயது வரை, தனது சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் பேசுகிற மொழியைதான் புரிந்துகொள்கிறது. இங்குதான் ஒரு மனிதனது மொழி அடிப்படை உருவாகிறது. இந்த மொழியை அடிப்படையாகக் கொண்டே பள்ளிப் பருவத்தில் அனைத்தையும் புரிந்து கொள்கிறது. எனவே, ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிப்பாடங்கள் தவிர, பிற அனைத்துப் பாடங்களும் அவரவர் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். அப்பொழுதே குழந்தை பாடத்தைப் புரிந்து கொள்ளும், மொழியைக் கற்றுக் கொள்ளும் என்கிறது ஆய்வு. ஆனால், தமிழ்நாட்டிலோ, மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளின் தாய்மொழி கற்றுக் கொள்ளும் உரிமை பறிக்கப்படுகிறது. அதை தமிழ்நாடு அரசே செய்வதுதான் அவலம். உலகளவில் கல்விமுறையில் சிறந்து விளங்குகிற “நோர்டிக் நாடுகளில்” தாய்மொழி வழிக் கல்விதான் பின்பற்றுகின்றன.

ஆனால், தி.மு.க. அரசு தனது கல்விக் கொள்கையில் பயிற்றுமொழி குறித்து ஏதுவும் குறிப்பிடவில்லை. பொதுவில் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவில் தமிழ் கற்றுக் கொள்வது என்பது வேறு, பயிற்று மொழி என்பது வேறாகும். ஒரு இனத்தின் பண்பாடு, பாரம்பரியம், வரலாற்று மரபு, அறிவியல் என அனைத்தும் அந்த இனத்தின் தாய்மொழி வழியே கடத்தப்படுகிறது என்பதே உண்மை. தமிழ்நாட்டின் வரலாற்று மரபிற்கேற்ப மாநிலக் கல்வியை உருவாக்குவதாக அறிவித்த தி.மு.க. அரசு, அதற்கு நேர் எதிராக தமிழ்நாட்டின் மரபை, பண்பாட்டை, பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறையினருக்கு கடத்தப்படுவதைத் தடுத்திருக்கிறது. இது கார்ப்பரேட் முதலைகள் கொள்ளையடிப்பதற்கான மறைமுகமான அங்கீகாரமே.

அரசுப் பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்கும் சதி

கடந்த 30 ஆண்டுகளாக அரசு அமல்படுத்தி வரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையின் காரணமாக அரசுப் பள்ளிகளுக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யாமை மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமை ஆகியவற்றால் கார்ப்பரேட்மயத்தை ஊக்குவித்து வந்தது தமிழ்நாடு அரசு. பொது-தனியார் பங்களிப்பு என்ற பெயரில் மாநகராட்சிப் பள்ளிகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. மேலும் கார்ப்பரேட்மயத்தை ஊக்குவிக்கும் விதமாக, இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் சேர வேண்டிய 25 சதவிகித மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவியுடன் தாரை வார்த்திருக்கிறது. தற்போது, மாநிலக் கல்விக் கொள்கையின் மூலம் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் கார்ப்பரேட்மயமாக்குவதற்கான சதி வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கொள்கை அறிக்கையில், கல்விக்காக 13.7 சதவிகிதம் (ரூ.44,042 கோடி) ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறது. இதில் பள்ளி உள்கட்டமைப்பிற்காக ரூ.1,000 கோடியும், திறன் வகுப்புகள் மற்றும் அதி தொழில்நுட்ப ஆய்வகங்கள், சமகர சிக்சா நிதி உள்ளிட்டு ரூ.5,431 கோடியும் அரசு ஒதுக்கும். மீதியை பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, விழுதுகள், சுய உதவி குழுக்கள் மற்றும் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் மூலம் பெறுவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறு கார்ப்பரேட்டுகளிடம்  நிதி பெறுவதை 100 சதவிகிதமாக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இனி கல்விக்கு அரசு நிதி ஒதுக்காது, மாறாக கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் வேறு வார்த்தையே இது. நாளடைவில், பள்ளிகளும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். நிர்வாக ரீதியாக பள்ளிகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாக விடுவிப்பதற்காகத்தான் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் கார்ப்பரேட்மயத்தை எதிர்ப்பின்றி அமல்படுத்துகிற நஞ்சாகும்.

இவை மட்டுமின்றி ஏற்கெனவே செயல்படுத்தப்படும் வானவில் மன்றம், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியவை தனியார்மயத்தின் ஒரு அங்கமே. வானவியல் மன்றங்களின் மூலம் 100 நடமாடும் ஆய்வகங்களை அமைப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடத்திட்டங்களுக்குத் தேவையான ஆய்வக வசதிகளை மேம்படுத்தினாலே இந்த வானவில் மன்றங்களின் தேவை இருக்காது. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவதற்கு போதிய நிதியைக் கூட, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சமூகப் பொறுப்பு நிதியாகப் பெறுவதற்குப் பதிலாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்கி நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், தமிழ்நாடு அரசின் கொள்கையோ, கல்வியைத் கார்ப்பரேட்மயப்படுத்துவதாகும்.

தேசிய கல்விக் கொள்கையும்-மாநிலக் கல்விக் கொள்கையும்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே அதைக் கொள்ளைப் புற வழியில் மாநிலக் கல்விக் கொள்கையாக அறிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. ஏற்கெனவே, தேசிய கல்விக் கொள்கையில் கூறியுள்ள இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்துத் திட்டம், இணைய வழிக் கல்வி ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. இது குறித்து விமர்சித்து நமது புதிய ஜனநாயகத்தில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வருகிறோம்.

மாநிலக் கல்விக் கொள்கையிலும் கல்வி தொலைக்காட்சி, மணற்கேணி, ஆசிரியர் பயிற்சிக்கான எண்ணிம தளம் மற்றும் பயிற்சி பார்வை செயலி என இணைய வழியை நோக்கி கல்வி திசைதிருப்பப்படுகிறது. இது கற்றல்-கற்பித்தல் முறையை இணைய வழியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கையாகும். டிஜிட்டல்மயமாக்கத்தின் அங்கமாகும்.

அதுமட்டுமின்றி, தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான, பள்ளியில் நடைமுறையில் உள்ள எல்லா தேர்வுகளையும் (10ஆம் வகுப்பு & 12ஆம் வகுப்பு உட்பட) நீர்த்துப்போகச் செய்து உயர்கல்வி செல்ல விரும்புவோர் அனைவருக்கும் தேசிய தேர்வு முகமையின் (NTA) போட்டித் தேர்வுகளின்  மதிப்பெண்ணை மட்டுமே முக்கியத்துவமுடையதாக மாற்றுவது. இதற்காக மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையில் முன்வைத்திருக்கும் திட்டம்தான் “பராக்” (PARAKH). இது, கல்வித்துறையில் மாநில அரசு கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறிப்பதற்கான ஏற்பாடு.

ஆனால், தற்போது தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை பெரும்பாலும் ஸ்லாஸ் / பராக் (SLAS / PARAKH) தேர்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்திட்டங்களை முன்வைக்கிறது. இது அப்பட்டமாக தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டிருப்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கை 3,5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முன்மொழிகிறது என்றால், மாநிலக் கல்விக் கொள்கையில் 3,5,8-ஆம் வகுப்புகளில் திறனறி தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 3,5,8-ஆம் வகுப்புகளில் மாணவர்களை வடிகட்டி அவர்களை குலக்கல்விக்கு மோடி அரசு அனுப்புகிறது என்றால், தமிழ்நாடு அரசோ, அவர்களை 10 -ஆம் வகுப்பிற்குப் பிறகு தொழில் வழிகாட்டுதல் என்ற பெயரில் கூலிகளாக மாற்றுகிறது. ஸ்விக்கி, சொமோட்டோ, ரேபிடோ போன்ற உதிரித் தொழில்களுக்கான கூலி அடிமைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இவையெல்லாம், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது இல்லையாம், மோடி அரசின் திட்டங்களை நமக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது போன்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், வடிவங்கள் வெவ்வேறானவை என்றால் அதன் உள்ளடக்கமும், நோக்கமும் ஒன்றேயாகும். அதுதான் கார்ப்பரேட்டுகளுக்குத் தேவையான கூலி அடிமைகளை உருவாக்குவதாகும். அதைதான் மாநிலக் கல்விக் கொள்கையில், 21-ஆம் நூற்றாண்டிற்கான திறன்களைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காகவே, “த.நா.ஸ்பார்க்”(TN SPARK) என்ற திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின்படி, ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவை குறித்து பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும். சோதனைமுறையில் கன்னியாகுமரியில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கனிமொழி தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு தொழில் பயிற்சிகளை 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அது போன்றதே இந்த ஸ்பார்க் திட்டமும். இந்த ஸ்பார்க் திட்டம், மற்றொருபுறம், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியை சிதைக்கவே செய்யும்.

அதுமட்டுமின்றி, 21-ஆம் நூற்றாண்டின் மாணவர்களுக்கு கூர் சிந்தனை, சிக்கல்களைத் தீர்த்தல், தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைந்து செயல்படுதல், படைப்பாற்றல் மற்றும் புதுமை, நெகிழ்வுத் தன்மை, தகவமைப்பு மற்றும் முன்னெடுப்பு போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களைக் கொண்ட மாணவர்களை பள்ளியிலேயே உருவாக்குவதே தி.மு.க. அரசின் எதிர்கால இலக்காகும். இது முற்றிலும் கார்ப்பரேட்களுக்குத் தேவையான வெள்ளை காலர் கூலி அடிமைகளை உருவாக்குவதே. தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமும் கார்ப்பரேட்டுகளுக்கான காவி சித்தாந்த அடிப்படையிலான கூலி அடிமைகளை உருவாக்குவதேயாகும்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியக்கக் கொள்கையால், கடந்த 30 ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான உற்பத்தி, அதாவது மறுகாலனியாக்க உற்பத்தி நடைபெற்று வருகிறது. இயற்கை வளங்கள், தொழிற்துறை, விவசாயம் என அனைத்தும் அம்பானி-அதானி போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதிமூலதன கும்பல்களின் நலனுக்காகவே நடைபெற்று வருகிறது. இந்த உற்பத்தி முறைக்குத் தேவையான, அதாவது மறுகாலனியாக்க உற்பத்திக்கான கூலி அடிமைகளை உருவாக்குதே தேசிய-மாநிலக் கொள்கையின் நோக்கம்.

மொத்தத்தில், தற்போது தி.மு.க. அரசால் வெளியிடப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமே. எனவே, தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

மேலும் கல்வித்துறையில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சித்தாந்தத்திற்கு எதிரான ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான- தாய்மொழி வழியிலான, இலவசக் கல்வியை அரசு வழங்க வேண்டும். அதற்கான போராட்டங்களை புரட்சிகர-ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க