ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!

“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”

த்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வந்த இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள், அக்டோபர் 23 அன்று, தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காபி அருந்த வெளியே நடந்து செல்லும் வழியில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவனால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலக அரங்கில் அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா ”அவர்கள் பக்கமும் தவறு இருக்கிறது, இது அனைவருக்குமான பாடம்” என பார்ப்பனிய ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.டி.டி.வி (NDTV) தொலைகாட்சிக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜயவர்கியா, “மைதானம் அல்லது ஓட்டலை விட்டு வெளியே செல்லும்போது வீராங்கனைகள் பாதுகாவலர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளிடம் கூறிவிட்டுதான் செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”

மேலும், “கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப் பெரிய அளவில் பிரபலம் உள்ளது. சிலநேரங்களில், வீரர்கள் அவர்களது பிரபலத்தை உணருவதில்லை. இங்கிலாந்தில் கால்பந்தைப் போன்று இந்தியாவில் கிரிக்கெட். இங்கிலாந்தில் கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன். இந்த நிகழ்வு அனைவருக்குமான பாடமாகும். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்” என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கைலாஷ் விஜயவர்கியா மீது பா.ஜ.க. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் வகையில் பேசி இருப்பது என்பது பா.ஜ.க.வின் பெண்கள் மீதான பார்ப்பனிய ஆணாதிக்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.


படிக்க: மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்


ஆனால், இதுபோன்று பெண்கள் குறித்தும் ’ஒழுக்கம்’ எனும் பெயரில் இழிவான வகையில் இவர் பேசுவது இது முதல்முறையல்ல…

கடந்த செப்டம்பர் மாதம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து மிகவும் இழிவான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். “நாம் அனைவரும் பழங்கால பண்பாட்டின் மக்கள். எங்கள் சகோதரியின் கிராமத்தில் நாங்கள் தண்ணீர் கூட குடிப்பதில்லை. என் அத்தையின் ஊரான ஜிராப்பூர் செல்லும்போது என் அப்பா வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார். இன்றைய நமது எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது சகோதரிகளை நடுரோட்டில் முத்தமிடுகிறார்கள். நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், உங்களில் யார் தங்களது சகோதரிகளையோ அல்லது மகள்களையோ பொதுவெளியில் முத்தமிடுவீர்கள்? இவை நமது விழுமியங்கள் அல்ல. இவை அனைத்தும் வெளிநாட்டு விழுமியங்கள்; அவை வெளிநாட்டிலிருந்து வந்தவை”

கடந்த ஜூன் மாதத்தில், இந்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாலியல் ரீதியான கருத்தைத் தெரிவித்தார். “குறைவான ஆடைகளை அணியும் பெண்களை நான் விரும்புவதில்லை. மேற்கத்திய நாடுகளில், குறைவான ஆடைகளை அணியும் பெண்கள் அழகாகக் கருதப்படுகிறார்கள். நான் அதை ஏற்கவில்லை. இந்தியாவில் ஒரு பெண் நன்றாக உடை அணிந்து, நகைகளை அணிந்து அழகாக அலங்கரித்துக் கொண்டால், அதை அழகாகக் கருதுகிறோம். சில பெண்கள் செல்பிஃபி எடுக்க வருகின்றனர். நான் அவர்களிடம், ‘குழந்தையே, சரியான உடையில் அடுத்த வாருங்கள். பிறகு, நாம் செல்ஃபி எடுத்துக் கொள்வோம்’ என தெரிவிப்பேன்” என கூறினார்.

2022 ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவில், “நான் அனுமன் ஜெயந்தியில் பொய் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த காலத்து பெண்கள் இழிவான ஆடைகளை அணிகிறார்கள். பெண்களை தெய்வங்கள் என்று அழைக்கிறோம். ஆனால், அவர்கள் அப்படித் தெரிவதில்லை. அவர்கள் சூர்ப்பனையை போல இருக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு அழகான உடலைக் கொடுத்திருக்கிறார்; குறைந்தபட்சம் ஒழுக்கமான ஆடைகளையாவது அணியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு விழுமியங்களைக் கற்றுக் கொடுங்கள்” என தொடர்ந்து இவர் பெண்கள் குறித்து இழிவான முறையில்தான் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பில்கிஸ்பானு, ஆசிபா உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட பாலியல் கொடூரங்கள், உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ், ஹதராஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பாலியல் கொடூரங்கள், மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்கொடுமை என காவி கும்பல் பெண்களுக்கு இழைத்த கொடூரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

எனவே, பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக விளங்கும் பா.ஜ.க-வை, பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவது அவர்களின் குற்றத்தை நியாயப்படுத்துவது என செயல்படும் பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பாதிப்புக்கு ஆளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து மேற்கண்டவாறு  கருத்து கூறியிருப்பதில் வியப்பேதும் இல்லை.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க