பி.எம் ஸ்ரீ: கேரள சி.பி.எம் அரசின் சந்தர்ப்பவாதம்!

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

0

கேரளத்தில் ஆட்சி செய்து வருகின்ற சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக தற்போது தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது.

பாசிச மோடி அரசு கல்வியை காவி- கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்தில் 2022 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான பி.எம் ஸ்ரீ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM Schools for Rising India) என்பதன் சுருக்கமே பி எம் ஸ்ரீ திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 14,500 பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இப்பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படும் என்று ஒன்றிய மோடி அரசு தெரிவித்திருந்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசுகள் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே, சமக்ர சிக்‌ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) திட்டத்தின் கீழ் மாநிலங்களின் கல்விக்கான நிதியைக் கொடுக்க முடியும் என்று எதேச்சதிகாரமான முறையில் தனக்கு அடிபணியாத மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கட்டளையிட்டது. இதன் அடிப்படையில், கேரள மாநிலத்திற்குக் கொடுக்க வேண்டிய கல்வி நிதியான சுமார் ரூ.1,200 கோடி ரூபாயைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இதே நிலைதான்.

பார்ப்பனியத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் பரப்புகின்ற, கல்வியை காவிமயமாக்கும் திட்டமாக உள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வந்தது சி.பி.எம் அரசு. இதனைப் போன்று தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் ஏப்ரல் 13- ஆம் தேதியன்று ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், மத்திய நிதியில் 1,186 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அறிக்கை வெளியிட்டது கேரள சி.பி.எம் அரசு.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் சரணடைந்த சி.பி.எம் அரசு “நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ’முன்மாதிரியான பள்ளிகளை’ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம்” என்று தனது முந்தைய நிலைப்பாட்டையே கசக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சந்தர்ப்பவாதமாகத் தெரிவித்தது.


படிக்க: கேரள சி.பி.எம். அரசின் ‘தீவிர வறுமை’ ஒழிப்பா? ஒளிப்பா?


“நாங்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பட உள்ளோம்” என்று தன்னிச்சையாக முடிவெடுத்து கூட்டணிக் கட்சிகளிடமும், அமைச்சரவையிலும் விவாதங்களை நடத்தாமல், மாநில கல்வித்துறை செயலர் அக்டோபர் 23- ஆம் தேதியன்று ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி அரசிற்கு ஒப்புதல் அளித்தது கேரள அரசு.

சி.பி.எம் அரசின் இந்த நடவடிக்கையை ”கூட்டணி முடிவுகளையும், கூட்டணியின் கூட்டு ஒழுங்கையும் மீறிய செயல்” என்று கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ கடுமையாக விமர்சித்தது. மேலும் அக்கட்சியின் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த மாணவர்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று சி.பி.ஜ எச்சரித்தது. எனவே, மாணவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட சி.பி.எம் அரசு, ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

பி.எம் ஸ்ரீ திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகளைக் கொண்டுவர ஒன்றிய அரசிற்கு கேரள அரசு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க