பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவில் அப்பாவி விவசாயி ஒருவரை பா.ஜ.க. தலைவர் கொடூரமாகத் தாக்கி, அவர் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
கடந்த அக்டோபர் 26 அன்று விவசாயி ராம் ஸ்வரூப் தகாத் தனது மனைவியுடன் கணேஷ்புரா கிராமத்தில் உள்ள தன்னுடைய வயலுக்குச் சென்றுள்ளார். அவரை வழிமறித்த பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.
பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அப்பாவைக் காப்பாற்ற ஓடிவந்த இரு மகள்களையும் அக்கும்பல் தாக்கியதுடன் அவர்களின் ஆடைகளையும் கிழித்தெறிந்துள்ளது. பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாயியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல், ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுத்துள்ளது. இறுதியாக, ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்ட விவசாயி ராம் ஸ்வரூப் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட தகாத்தின் மகள்கள் கூறுகையில், “சத்தம் கேட்டு நாங்கள் என் தந்தையை மீட்க வெளியே சென்றோம். அவர்கள் தங்கள் காரால் அவரை மோதினர். நான் என் தந்தையை மீட்கப் போனபோது, அவர்கள் என் மேல் அமர்ந்து என்னைத் தாக்கினர். அவர்கள் என் ஆடைகளைக் கிழித்து, என்னைத் தள்ளி, தூக்கி எறிந்தனர். அவர்கள் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டு, என் தலைமுடியை இழுத்தனர்” என்று தங்கள் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.
படிக்க: மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்
விவசாயியைப் படுகொலை செய்த பா.ஜ.க-வைச் சேர்ந்த மகேந்திர நாகர் முன்னாள் உள்ளாட்சித் தலைவராகப் பதவி வகித்துள்ளான். இதனால் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளிடம் அவர்களின் நிலங்களை தன்னிடம் மலிவான விலைக்கு விற்க வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளான். இந்நிலையில், குணா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வவரூப் தகாத்திடமும் அவரது நிலத்தை விற்குமாறு மிரட்டியுள்ளான். ஆனால், விவசாயி ராம் ஸ்வரூப் மிரட்டலுக்கு பணியாத நிலையில் அவரை கொடூரமாகக் கொன்றுள்ளான். இதனை விவசாயி ராம் ஸ்வரூப்பின் குடும்பத்தினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மகேந்திர நாகர் உள்பட கொலையில் ஈடுபட்டவர்களுக்கும் பா.ஜ.க-விற்கும் தொடர்பில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், கொலைகாரன் மகேந்திர நாகர் பா.ஜ.க. தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவனுக்கும் பா.ஜ.க-வினருக்குமான தொடர்பு அம்பலமாகியுள்ளது.
விவசாயி ராம் ஸ்வரூப்பின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஃபதேகர் போலீசு நிலையத்தில், கொலையாளி மகேந்திர நாகர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை உடனடியாக கைது செய்யாமல் சோதனை நடத்தி வருவதாக காலந்தாழ்த்தி, போலீசு குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.
மத்தியப்பிரதேசம் உட்பட பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற மாநிலங்கள் அனைத்திலும், அதிகாரத்தின் துணையுடன் பெண்கள், சிறுபான்மையினர், தலித் – பழங்குடி மக்கள், ஏழை – எளியோர் மீது இத்தகைய பாசிசத் தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலைத் தடை செய்தால் மட்டுமே இந்நாட்டில் உழைக்கும் மக்களால் நிம்மதியாக வாழ முடியும் என்பதே எதார்த்தமாக உள்ளது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










