கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தி.மு.க. அரசால் “நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி” திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளிலும் தொழிலதிபர்களாகவும் உள்ள முன்னாள் மாணவர்களிடமிருந்தும், ‘சமூக அக்கறை’க் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் சமூக பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்.) பெறப்படும்; இதன் மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கவர்ச்சிகரமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டமானது தனியார் – கார்ப்பரேட்களிடம் அரசுப் பள்ளிகளைத் தாரைவார்க்கும் தி.மு.க-வின் நயவஞ்சகத் திட்டம் என்பதை பல்வேறு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தினர்.
இந்நிலையில், “நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான நான்காவது மாநாடு கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று சேலத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இத்திட்டத்தின் அடிப்படையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநாட்டில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “இந்த மாநாடு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான சமூக பங்களிப்புகளை ஊக்குவித்து, பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பை (சி.எஸ்.ஆர்) ஒருங்கிணைத்து, முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இங்கு மெட்ராஸ் செயலாக்க மண்டலம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், அரசுப் பள்ளி மாணவர்களின் டிஜிட்டல் கல்வி அணுகலை மேம்படுத்தவும், அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி கல்வி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 1,878 அரசுப் பள்ளி மாணவர்கள், முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டம் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருவதோடு, சமூக முன்னேற்றத்திற்காக பெரு நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தின் சிறந்த பங்களிப்புகளை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கல்விக்காக ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் நிதியை விட அதிகமாக ஒரு மாநிலத்தில் நமது அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருகிறார்” என பெருமை பொங்கப் பேசியுள்ளார்.
அதேபோல், இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்! நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்” எனப் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளுக்கு நிதி அளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ள நிலையில், “நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலம் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தற்போது ரூ.1,000 கோடியை வசூலித்ததைப் பெருமையாகக் கூறுகிறது தி.மு.க அரசு. ஆனால், “நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி” திட்டம் என்பது அரசுப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து இருந்து அரசு விலகிக்கொண்டு, கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கும் சதித்திட்டமே ஆகும்.
அதாவது, காலப்போக்கில் அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குவதை அரசு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அப்பள்ளிகளை கார்ப்பரேட்டுகளிடம் கைகழுவி விடுவதே தி.மு.க. அரசின் நோக்கமாகும். அந்த நோக்கத்திலிருந்து செயல்படுத்தப்படுவதே “நம்ம ஸ்கூல்” திட்டம். சமீபத்தில் தி.மு.க. அரசு வெளியிட்ட மாநிலக் கல்வி கொள்கையில், “அடுத்த மூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட்களிடம் இருந்து நிதி பெறுவதை 100 சதவீதமாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருப்பதையும், தற்போது கார்ப்பரேட்களிடமிருந்து ரூ.1,000 கோடி பெற்றிருப்பதையும் இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும்.
இதன் மூலம் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் கார்ப்பரேட் வசம் செல்லும் அபாயம் உள்ளது. ‘சமூக நீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டே, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கல்விக்கான ஒற்றை ஆதாரமாக இருக்கும் அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
ஏற்கெனவே, நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் “தனியார் பல்கலைக்கழக மசோதா, 2025”-ஐ நிறைவேற்றி, மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் – கார்ப்பரேட் வசம் தாரைவார்க்க தி.மு.க. அரசு தயாராகியுள்ளது. இது அரசு கல்லூரிகள் உட்பட ஒட்டுமொத்த உயர்கல்வி துறையையும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் சதியின் அங்கம் என்பது அம்பலமாகி எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அம்மசோதாவை பரிசீலனை செய்வதாக தி.மு.க. அரசு கபட நாடகமாடுகிறது.
தமிழ்நாட்டின் உயர்கல்வி துறையை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு “தனியார் பல்கலைக்கழக மசோதா, 2025”-எனில், பள்ளிக்கல்வித்துறையை சிதைத்து கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதற்கே நம்ம ஸ்கூல் திட்டம்.
ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது; வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டுமான அமைப்புகள் சிதைவுற்றிருப்பது; தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிக பணியில் ஆசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யாத நிலையில் இதற்கெல்லாம் போதுமான நிதியை ஒதுக்காமல் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நிதியை வெற்று விளம்பரப்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறிய பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தை போலீசை கொண்டு கலைப்பது, பாசிச மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் கார்ப்பரேட் திட்டங்களை வேறு பெயர்களில் தி.மு.க. அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
மேலும், அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நம்ம ஸ்கூல் திட்டத்தை விளம்பரப்படுத்துவது என்பது தி.மு.க. அரசின் கார்ப்பரேட் சேவையைத் துலக்கமாகக் காண்பிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தி.மு.க அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கும் அதன் விளம்பரப்படுத்தலுக்கும் எதிராகப் போராட்டத்தையும் அம்பலப்படுத்தலையும் செய்ய வேண்டியுள்ளது.
![]()
உமர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











