கடந்த அக்டோபர் 9, 2025 ஆம் தேதி வெளியான உலக பட்டினி குறியீடு 2025-இல் உலகளவில் பத்தில் ஒருவர், அதாவது 67.3 கோடி பேர், போதுமான உணவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கிறது. பட்டினி கொடுமைக்கு வறுமை, போர், பொருளாதார நிலைத்தன்மையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, உள்நாட்டுப் போர், கட்டாய குடிபெயர்வு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
உலகப் பட்டினி குறியீட்டில் 31 முதல் 42.6 புள்ளிகளுடன் உள்ள சில நாடுகள் “அபாயம்” அல்லது “தீவிரமான” நிலையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இவற்றில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான, சோமாலியா, தெற்கு சூடான், மடகாஸ்கர், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் ஹைதி ஆகிய நாடுகள் தொடர்ச்சியான நெருக்கடிகள் காரணமாக பட்டினி பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சோமாலியாவில், பல தசாப்தங்களாக தொடரும் மோதல்களால், தொடர்ச்சியான வறட்சி, மிகப்பெரியளவிலான இடப்பெயர்வு நடைபெறுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் சுத்தமான உணவு மற்றும் குடிநீருக்காகப் போராடி வருகின்றனர். மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகள் போன்றவை விவசாயத்தையும் உணவு விநியோகத்தையும் சிக்கலாக்கி விடுகிறது. இதன் விளைவால், பட்டினியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சோமாலியா உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலைமைகளை ஒத்ததாகவே தெற்கு சூடான் நாட்டின் நிலைமையும் உள்ளது. வெள்ளம், வன்முறை மற்றும் நீடித்த உள்நாட்டுப் போர் போன்றவற்றால் உணவு பாதுகாப்பின்மை உருவாகிவிடுகிறது. மோசமான உணவு விநியோக முறை, சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு சந்தைகளையோ அல்லது உதவி பொருட்களையோ பெறுவதில் சிரமம் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் 37.5 புள்ளிகளுடன் தீவிரமாக பட்டினியை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நெருக்கடி காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான உதவியை எதிர்நோக்கி உள்ளனர்.
காங்கோ ஜனநாயக குடியரசு நாடும் ஏறக்குறைய 37.5 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், இந்த நாடு வளமான இயற்கை வளங்களையும், பயிரிட உகந்த நிலங்களையும் கொண்டுள்ளது. இந்த நாட்டின் வரலாறு என்பது தீராத வன்முறையைக் கொண்டுள்ளது. மோசமான உள்கட்டமைப்பு, கிராமப்புறங்களில் வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் ஆழமான பட்டினி நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. மோதல் காரணமாக விவசாயிகள் அடிக்கடி விளைநிலங்களைக் கைவிட்டு விடுகின்றனர். வர்த்தகம் நடைபெறுவதற்கு போதுமான பாதுகாப்பு இல்லை.
ஹைதி, 35.7 புள்ளிகளுடன் தீவிரமான பட்டினி நெருக்கடியில் உள்ளது. இந்த நாடு நெடுநாட்களாக வறுமைக்கு எதிராகப் போராடி வருகிறது. இருப்பினும், நிலநடுக்கம், சூறாவளிகள் போன்ற இயற்கை பேரிடர்களால் விளைநிலங்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகிறது. அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இலட்சக்கணக்கான மக்கள் உணவு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.
இதேபோன்று பிற ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் தீவிரமான பட்டினி கொடுமையில் சூழ்ந்துள்ளது. தொடர்ச்சியான போர்கள், கட்டாய இடப்பெயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை போன்றவை மக்களை வறுமையிலும் பட்டினியிலும் உழல வைக்கின்றன.
படிக்க: பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!
உலகத்தில் ’நான்காவது’ பொருளாதார நாடு என சங்கிக் கும்பலால் பெருமை பீற்றிக் கொள்ளும் இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 25.8 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. இந்தியா தீவிரமான பட்டினி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உணவு உற்பத்தியில் இந்திய முக்கியமான நாடாகும். இருப்பினும், வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஏற்றத்தாழ்வான உணவு விநியோகம் மற்றும் மோசமான சுகாதாரம் என்ற நிலை நிலவுகிறது. அதிகமாக குழந்தைகளிடையே வளர்ச்சிக் குறைபாடு, மெலிதல் விகிதங்கள், கருவுற்ற பிறகு மோசமான நிலையில் இருத்தல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. விரைவான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் ஏற்றத்தாழ்வான பிராந்திய வளர்ச்சிகள் போன்று நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றன.
நவம்பர் 07, மகத்தான இரசிய சோசலிச புரட்சி நடைபெற்ற நாள், உலக வரலாற்றை இரண்டு கூறுகளாகப் பிரித்து ஆளும் வர்க்கங்களால் இழிவுபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என இடித்துரைத்த நாள். இந்த ஆண்டு இரசிய புரட்சி நாளை உலக மக்கள் உச்சி முகர்ந்து கொண்டாடினர்.
இரசிய புரட்சி பிறகு, போல்ஷிவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பசி, பட்டினி, வறுமை என அனைத்தும் சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது. பல்வேறு சாதனைகளை இரசிய புரட்சி நடத்திக் காட்டியது. இந்நிலையில், கட்சியில் நுழைந்த முதலாளித்துவ வாதிகளால் ஆசான் ஸ்டாலினுக்குப் பிறகு கட்சி திசை விலகி சோவியத் யூனியன் உடைத்தது. கம்யூனிசம் தோற்றுவிற்றது என எள்ளி நகையாடிய முதலாளித்துவம் உலகத்திற்கு ஒரே மாற்று முதலாளித்துவம் எனக் கொக்கரித்தது.
ஆனால், முன்பைக் காட்டிலும் தீராத கட்டமைப்பு நெருக்கடிக்குள் முதலாளித்துவம் சிக்கித் தவித்து வருகிறது. நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள பாசிசம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. உலகம் முழுவதும் போர் சூழல், பசி, பட்டினி என உலக மக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தப்பட்டு வருகின்றனர். காசா, சூடானில் நிலவும் நிலைமையே இதற்குச் சான்றாகும். இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த உலக பட்டினி குறியீடு 2025 உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் பட்டினிக் கொடுமைகளால் மக்கள் துன்புறுவதையும் துலக்கமாகக் காட்டுகிறது.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











