தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 4 பழைய மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடென்ட் பதவியில் உள்ள மருத்துவர்களை ஆட்குறைப்பு செய்து, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து, நேற்று (நவம்பர் 11) தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (Tamil Nadu Government Doctors Association – TNGDA) சார்பில் கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், திருவாரூர், கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 14 இடங்களிலும், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Government Doctors Associations – FOGDA) சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்களை புதிதாக பணியமர்த்தி, ஆள் பற்றாக்குறையைச் சரி செய்து நோயாளிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்காமல், ஏற்கெனவே இருக்கக் கூடிய மருத்துவர்களை புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்புவது என்ற நிலை உள்ளது. இதனால் நோயாளிகளை கவனிக்க முடியாமல் போவது நடக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது மருத்துவத் துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் அம்சத்தோடு இணைந்தது. அதை இன்னும் வேகப்படுத்துகின்ற வகையில் அரசு முழுமூச்சாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதையே அரசின் இந்த முடிவு காட்டுகிறது.
ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
மேலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நோயாளிகளைப் பாதுகாக்க உடனடியாக போதுமான மருத்துவர்களை நியமித்து, ஆட்குறைப்பைச் சரி செய்ய வேண்டும் என ம.அ.க. அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது.
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











