ஆர்.எஸ்.எஸ். கும்பல் கட்டுவிரியன் குட்டிகளைப் போன்ற தனது துணை அமைப்புகளைக் கொண்டு திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி ஆகிய தனது துணை அமைப்புகளின் மூலமாக திருப்பரங்குன்றம் விவகாரத்தையொட்டி நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடுத்தது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும், தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்ய வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை ‘சமணர் மலை’ என்று அறிவிக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டன.
இவ்வழக்குகள் அனைத்தையும் இணைத்து விசாரித்து, நீதிபதி நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 24-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், வழக்கின் மையமான அம்சங்களான, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக அழைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்ய வேண்டும், நெல்லித்தோப்பில் வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் ஆகிய மூன்று அம்சங்களில் மேற்கண்ட இரண்டு நீதிபதிகளும் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதில், நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பானது, இம்மூன்று அம்சங்களிலும் சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மக்களின் மரபு மற்றும் பன்னெடுங்காலப் பண்பாட்டு அம்சங்களைக் கணக்கில் கொண்டு வழங்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது, சனாதன நீதியின் அடிப்படையில், ஆதாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, சங்கப் பரிவாரக் கும்பல் முன்வைக்கின்ற வாதங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் வழங்கப்பட்டிருந்தது.
இது மத நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய மக்கள், ஜனநாயக சக்திகள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தீர்ப்பின் அபாயம் குறித்து 2025 ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழில் “இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் தீர்ப்பு” என்ற தலைப்பில் கட்டுரை கொண்டுவரப்பட்டது. மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக, “மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!” என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு மதுரை, சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கானது இறுதித் தீர்ப்புக்காக மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கிற்கான தீர்ப்பு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் அபத்தமான, அநீதியான முறையில் உள்ளன.
காசி விஸ்வநாதர் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்கந்தர் தர்கா மூன்றும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. “விழாக் காலங்களில் திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள முருகனின் வேல்-ஐ, நெல்லித்தோப்பு வழியாக செல்லும் பழைய பாதை வழியாக காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள கோவில் தீர்த்தத்தில் முக்கி எடுப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலும் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவைதான். எனவே, ஆடு, கோழி பலியிட அனுமதிப்பது தெளிவாக ஒரு சாராரின் மத நம்பிக்கையைப் பாதிக்கும்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆடு, கோழி பலியிடுவது என்பது இஸ்லாமிய வழிபாட்டில் இன்றியமையாத நடைமுறையாக இல்லை. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 25 (இந்தியக் குடிமக்கள் எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாக கடைபிடிக்கவும் பின்பற்றவுமான அடிப்படை உரிமை) இவ்விவகாரத்திற்குப் பொருந்தாது என்று அநீதியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் ஆடு, கோழி பலியிடும் உரிமையை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அதேபோல், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட வேண்டும் என்ற பிரச்சினையை தர்கா நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்துக்களின் பிரதிநிதி என்றுக் கூறிக்கொள்ளும் சங்கிக் கும்பல் கலவரத்தைத் தூண்டுவதற்காக நூற்றாண்டு காலமாக நடைமுறையில் உள்ள மரபை சர்ச்சைக்குரியதாக மாற்றுகிறது. அதனடிப்படையில் நீதிமன்றமும், ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் மரபாக பின்பற்றிவரும் விசயத்தை உரிய ஆவணங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
மேலும், தர்கா மலை உச்சியில் அமைந்துள்ளது. மலை உச்சி என்பதே இந்துக்களால் கடவுளாக வணங்கப்படும் ஒன்றுதான். எனவே, போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை மற்ற இந்து கோவில்களில் பின்பற்றப்படும் ஆடு, கோழி பலியிடும் நடைமுறையை இங்கு பொருத்த முடியாது என்கிறது. இது இந்துத்துவ கும்பலே முன்வைக்காத வாதமாகும். நீதிபதியே சங்கிக் கும்பலின் வாதங்களுக்கு வலுசேர்க்கிறார்.
அதேபோல், “மதுரையில் வீடு வாங்கி குடியேறும் ஒருவர் அவரது வீட்டிற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து அழைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த நகரத்திற்கும் அவர் பெயர் வைக்க முடியாது. அதுபோல, ஒட்டுமொத்த மலையும் திருப்பரங்குன்றம் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் போது அதில் ஒரு சிறு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவின் பெயரில் மலையை அழைக்கக்கூடாது” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டை அயோத்தியாக்குவோம்” என்று முழங்கிய சங்கப் பரிவாரக் கும்பலின் பாசிச நோக்கங்களுக்கு வழியமைத்துக் கொடுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இது மதுரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மரபுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பாகும். திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.
நீதிமன்றங்கள் தம்மை காவிக் கும்பலுக்கான கரசேவை அமைப்புகளாக மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளன. போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் என அனைத்தும் இந்துத்துவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில் நமக்கான ஜனநாயக உரிமைகளை இன்னும் இக்கட்டமைப்பிற்குள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று காத்திருப்பது அர்த்தமற்றது.
ஜனநாயக சக்திகள், போராடும் இயக்கங்கள் இப்பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழர்களின் ஆடு, கோழி பலியிடும் உரிமையையும் மத நல்லிணக்க மரபையும் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதன் மூலமாக மட்டுமே நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
![]()
பாரி
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










