கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள்

கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.

டந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜயின் பிரச்சாரப் பயணத்தில் அரங்கேறிய பச்சைப் படுகொலை நாட்டையே உலுக்கியது. குழந்தைகள், பெற்றோர், உறவினர்களை இழந்தவர்களின் அழுகுரல்கள், இப்படுகொலைக்கு எதிராக நாடெங்கும் எழுந்த கண்டனக் குரல்கள், துயரம் தாங்க முடியாமல் சிந்திய கண்ணீர் இப்போதும் நம் கண் முன்னே நிழலாடுகிறது.

ஆனால், 30 நாட்களுக்கு மேலாகியும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் அந்த அழுகுரல்களுக்கான பதில் என்ன? படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி என்ன?

தமிழ்நாட்டின் ஊடகங்களில் அன்றாடம் கரூர் படுகொலை குறித்து மயிர்பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இவ்விவாதங்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுவதில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை காசாக்குவதற்கும், மக்களை முட்டாளாக்குவதற்கும் பிணந்தின்னி ஊடகங்களால் இத்தகைய விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

எனில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 இலட்சம் இழப்பீடு வழங்குவதா? அல்லது விஜய் ரசிகர்களை தற்குறிகள், அணில் குஞ்சுகள் என்று விமர்சிப்பதா?

உண்மையில், தனது சுயநலத்திற்காக, மக்களை துளியும் மதிக்காமல் அவர்களை ஆட்டு மந்தையை போல எண்ணிக்கொண்டு, தனது கவர்ச்சிவாத அரசியலுக்காக மக்களை படுகொலை செய்த கிரிமினல் விஜயை கைது செய்து உரிய தண்டனை வழங்குவதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியாக இருக்கும்.

பிரச்சாரப் பயணத்திற்கு வேண்டுமென்றே காலதாமதமாக வந்தது, அரசு விதித்த கட்டுப்பாடுகளை மதிக்காமல் மீறியது உள்ளிட்டவை ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது. மேலும், கரூர் பிரச்சாரத்தில் அதிகளவில் கூட்டம் சேர்க்கப்பட்டதே “ஜனநாயகன்” திரைப்படப் படப்பிடிப்பிற்காகத்தான் என்றும் அக்காட்சிகளை படம் பிடிப்பதற்காக 63 படப்பிடிப்பு ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இப்போது வரை விஜயை கைது செய்வதற்கான எந்த முயற்சியையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. தமிழ்நாடு போலீசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பெயர் சேர்க்கப்படவில்லை. பல இடங்களில் விபத்தை ஏற்படுத்திய விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை.

படுகொலை நடந்த உடனே விஜயும் அவரது கட்சி நிர்வாகிகளும் பதுங்கிக் கொண்டனர். படுகொலை நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு காணொளியை வெளியிட்ட விஜய், தனக்கும் இப்படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல், துளியும் மனிதத் தன்மையின்றி, ‘நடந்தது ஒரு சதி’ என்று நஞ்சைக் கக்கினார்.

விஜய் கட்சியினர் பரப்பிவிட்ட ‘சதிக் கோட்பாடு’ ஒட்டுமொத்த விவாதத்தையும் திசை திருப்பியது. இதன் உச்சமாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரிலிருந்து மாமல்லபுரத்திற்கு அழைத்துவந்து ‘ஆறுதல்’ கூறுவது என்ற வக்கிர செயலில் விஜய் ஈடுபட்டார்.

விஜயின் இந்த வக்கிரமான கேடுகெட்ட அரசியல் நாளுக்குநாள் கீழ்த்தரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை அனுமதிப்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது.

மேலும், இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, படுகொலைக்குத் தலைமை தாங்கிய விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுவது சாட்சிகளை தவறாக வழிநடத்தாதா?

ஒருபுறம், படுகொலை நடந்ததிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளாகவும் இழிவானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். மறுபுறம், விஜய் கும்பல் பாதிக்கப்பட்ட மக்களின் இயலாமையை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால், இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஊடக விவாதங்களில் விஜயை தற்குறி, பண்ணையார் என கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, “விஜய்தான் முதன்மை குற்றவாளி, அவரை கைது செய்ய வேண்டும்” என்று தி.மு.க-வை நிர்பந்திப்பதில்லை.

மறுபுறம், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலோ அண்டிக்கொள்ள இடம் தேடி, தமிழ்நாட்டின் தேர்தல் கணக்குகளுக்காக கொலைக் குற்றவாளி விஜய்க்கு ஆதரவாக குதித்திருக்கிறது. இதற்கு பக்கபலமாக அ.தி.மு.க-வும் களம் இறங்கியிருக்கிறது.

பா.ஜ.க. கும்பல் விஜயை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கரூர் படுகொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியிருக்கிறது.

உச்சநீதிமன்றமோ, “இந்த சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இரண்டு மூத்த போலீசுதுறை அதிகாரிகள் இக்குழுவில் இடம் பெறுவர். இவ்விருவரும் தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது” என்று ‘கூட்டாட்சி’ தத்துவத்திற்கு, தமிழர் விரோதப் பார்வையிலிருந்து இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், கரூர் படுகொலை குறித்தான விசாரணையில் சி.பி.ஐ-யைத் தாண்டி ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்குத்தான் முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவர் குஜராத்தை சேர்ந்த நீதிபதி என்பதும் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் காவி பயங்கரவாதிகள் 11 பேரை விடுதலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கோரி மனு தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானோர் போலியானவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.

எனவே, சி.பி.ஐ. மற்றும் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு விசாரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று தருவதை நோக்கமாக கொண்டதல்ல. மாறாக, பா.ஜ.க. கூட்டணிக்குள் விஜயை சிக்க வைப்பதற்கான வலையே ஆகும்.

எனவே, விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க. கும்பல், விஜய்க்கு எதிராக இருப்பதாக காட்டிக்கொண்டு விஜயை கைது செய்யாமல் ஊடகப் பிரச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தி.மு.க. என அனைவரும் அவரவர் அரசியல் கணக்குகளிலிருந்தே இவ்விவகாரத்தை கையாண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.

அற உணர்ச்சியற்ற இத்தேர்தல் கட்சிகளின் சுயநலமான அரசியல் நாடகங்கள், அடிப்படை மனிதத் தன்மையை இழந்து அருவருக்கத்தக்க வகையில் புழுத்து நாறுகிறது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க