டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்

நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.

டந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உடல் சிதறி கோரமாக உயிரிழந்திருக்கின்றனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூர சம்பவமானது நாட்டு மக்களை அதிர்ச்சி மற்றும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி மக்களில் பலரும் இத்துயர சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவமானது ஒன்றிய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் செங்கோட்டைக்கு 150 மீட்டர் தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல, இப்பகுதியின் சில கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள் உள்துறை, உளவுத்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், நாட்டின் பிரதமரான பாசிஸ்ட் மோடி சம்பவம் நடந்த அடுத்த நாள் வெளிநாட்டுப் பயணம் என்று அண்டை நாடான பூட்டானுக்குச் சென்றுவிட்டார். அவர் தங்கியிருக்கும் சொகுசு மாளிகையிலிருந்து சம்பவம் நடந்த இடம் சில கி.மீ தொலைவில்தான் உள்ளது. அங்கு சென்று பாதிப்புகளைக் கண்டறியலாம்; மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டுக் கூட வெளிநாட்டிற்குச் சென்றிருக்க முடியும். அப்படியிருந்தும் அதனை மோடி புறக்கணித்திருக்கிறார்.

மாறாக, நாடே பற்றி எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல, நாடே துயரத்தில் உள்ள போது மோடி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னரான ஜிக்மே சிங்யே வாங்சுங்கின் 70-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்திருக்கிறார்.

மேலும், மோடியின் பூட்டான் பயணமானது அதானி, அம்பானி, டாடா ஆகிய நிறுவனங்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது. அதானி, அம்பானி, டாடா நிறுவனங்கள் பூட்டானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் வரும் ஆண்டுகளில் அதிக நீர் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் மோடி சேவையாற்றிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு தார்மீக நெறியின்றி செயல்படுவது மோடிக்கு ஒன்றும் புதியதல்ல. பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்ட போது சவுதி அரேபியாவிலிருந்து வந்த மோடி, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்குப் பதிலாக பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மணிப்பூரில் குக்கி இன மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் மணிப்பூருக்குச் சென்று அம்மக்களை நேரில் சந்தித்துப் பார்க்க மறுத்து வந்தார்.


படிக்க: மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!


பாசிஸ்ட் மோடியின் இத்தகைய தார்மீக நெறியற்ற நடவடிக்கைகளானது ஒரு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியுமா என்று எதிர்க்கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையிலிருந்தது. கண்டனக் குரல்களும் எழுந்தன. எதிர்ப்புகளை மட்டுப்படுத்துவதற்காக, பூட்டானிலிருந்து வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்தார்.

மேலும், இத்துயர சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க. ஆதரவு ஊடகங்களும் சங்கிகளும் முஸ்லீம் வெறுப்பு, தேசவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’, ‘வெள்ளை காலர் பயங்கரவாதம்’ என்று பீதியூட்டிக் கொண்டிருக்கின்றன. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, படித்தவர்களும் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்பதை டெல்லி குண்டுவெடிப்பு நிரூபித்துள்ளதாக இஸ்லாமிய வெறுப்பு நஞ்சைக் கக்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சார்ந்த பா.ஜ.க தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், கார் வெடிப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் தொடர்புப்படுத்திப் பேசியிருக்கிறார்.

இவர்கள் மீது அரசின் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி மோடி அரசை விமர்சித்து கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், நியாயப்பூர்வமாக கேள்வியெழுப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அசாம் மாநிலத்தில் கார் வெடிப்பு சம்பவத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாகக் கருத்துகளைப் பரப்பி வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, பாசிஸ்டுகளின் ஆட்சியில் இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு-தேசவெறியூட்டும் நச்சுப் பிரச்சாரங்களைச் செய்ய ஜனநாயகம் உள்ளது; மோடி அரசை விமர்சிக்க, நியாயத்தைப் பேச ஜனநாயகம் இல்லை என்பது இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இஸ்லாமிய வெறுப்பு – தேசவெறியூட்டும் பிரச்சாரங்களைக் கட்டமைத்து தோல்வி முகத்திலிருந்து தன்னை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், பாசிஸ்டுகளின் நோக்கங்கள் நிறைவேறப் போவதில்லை என்பதே எதார்த்தமாகும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க