17.11.2025
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு
சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-யின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று (17.11.2025) பகல் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்று சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகரப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.

தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.
“புதிய ஜனநாயகம்” இதழ் தொடங்கப்பட்ட காலம் முதலாக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் தோழர் சம்பத்.
அவர் ஏகாதிபத்தியவாதிகளையும் ஆளும் வர்க்க ஆதரவாளர்களையும் என்றைக்குமே சகித்துக் கொண்டதில்லை. ஆடம்பரமான வார்த்தை ஜாலங்களில் எப்போதும் மயங்கியதும் இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதல், புரட்சியாளர்கள் மீதான அரசின் தாக்குதல்களை ஈவிரக்கமின்றி விமர்சித்து வந்துள்ளார். அதற்கு, “புதிய ஜனநாயகம்”, “புரட்சிப் புயல்” இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளே சான்றாதாரங்களாக உள்ளன.
மேலும், மக்கள் கலை இலக்கியக் கழகம் தொடங்கப்பட்ட போது அதன் சென்னைக் கிளையின் செயல் வீரராகவும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடங்கப்பட்ட போது அதை வளர்த்தெடுக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சில கிளைகளுக்கு ஆலோசகராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டு அமைப்பு மாநாடுகள், இரண்டு அரசியல் மாநாடுகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த எமது அமைப்புகளைச் சார்ந்த தோழர்களுக்கு பல்வேறு அரசியல் – சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வளர்த்தெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். எமது அமைப்புகளின் சார்பாக கொண்டுவரப்பட்ட பல்வேறு வெளியீடுகளுக்கு ஊக்கமான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார் என்பதையும் இச்சமயத்தில் நினைவு கூர்கிறோம்.
தோழர் சம்பத், மறைவை ஒட்டி எமது அமைப்புகள் சார்பாக ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐம்பது ஆண்டுகள் நக்சல்பாரிப் புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து, அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டு, கடும் போராட்ட அனுபவங்களைப் பெற்ற தோழரின் நினைவுகள், இந்தியப் புரட்சி வானில், மக்கள்திரள் பாதையை உயர்த்திப் பிடித்த நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மற்றுமொரு நட்சத்திரமாகத் திகழும்! அவரது புரட்சிகரப் பண்புகளை வரித்துக்கொண்டு இந்தியப் புரட்சியை சாதிக்க உறுதியேற்போம்!
தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்!
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 73584 82113









