18.11.2025
அன்பார்ந்த வாசகத் தோழர்களே, உழைக்கும் மக்களே!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று (17.11.2025) பகல் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
தனது இளமைக்காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளாக புரட்சிகர அரசியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் சம்பத் அவர்களுக்கு “புதிய ஜனநாயகம்” ஆசிரியர் குழு சார்பாக சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.
கடந்த 41 ஆண்டுகளாக மார்க்சிய–லெனினிய புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளிவந்து கொண்டிருக்கும், புதிய ஜனநாயகம் இதழின் ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் சம்பத் செயல்பட்டுள்ளார்.
1985-ஆம் ஆண்டு கருப்பு – வெள்ளை அட்டைப்படத்துடன் வெளிவந்த முதல் இதழ் தொடங்கி பல்வண்ண அட்டைப்படமாக வெளிவருவது வரை எல்லா காலகட்டத்திலும் புதிய ஜனநாயகத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் தோழரின் பங்களிப்பு அளப்பரியது.
தொடக்கத்தில் புதிய ஜனநாயகம் ஒரு ரூபாய் விலையில் 24 பக்கங்களைக் கொண்ட – மாத இருமுறை இதழாக வெளிவந்தது. 15 ஆண்டுகளுக்குள் நிறுவன முறையிலும் சுயமாகவும் இதழை இயங்கச் செய்ததில் தோழர் சம்பத்தின் உழைப்பு மகத்தானது.
குறிப்பாக, புதிய ஜனநாயகத்தின் அட்டைப்படம் இரு வண்ணமாக வெளிவந்த சமயத்தில் அதனை பல வண்ணத்திலானது என்று கருதும் அளவிற்கு, ஒரு வண்ணத்திற்குள்ளேயே பல வண்ணத் தாக்கத்தைக் கொண்டுவர உழைத்துள்ளார். புதிய ஜனநாயகம் இதழின் அட்டைப்படத்தில் கார்ட்டூன்களைக் கொண்டுவருவதற்காக, கார்ட்டூனிஸ்டுகளைக் கண்டறிந்து அவர்களிடம் வரைந்து பெறுவதற்கு பெரும் உழைப்பைச் செலுத்தி இதழின் அட்டையைக் கலைநயத்துடன் கொண்டுவந்துள்ளார்.
குறிப்பாக, பத்திரிகையில் பணியாற்றிய தோழர்களின் எண்ணிக்கை குறைந்து, பத்திரிகை ஆட்பற்றாக்குறையை எதிர்கொண்ட காலங்களில், ஆசிரியர் பணியுடன், அச்சிடல் பணிகள் முடிந்தவுடன் பல ஆயிரம் பத்திரிகைகளைப் பேருந்துகளிலும் இரயில்களிலும் பார்சல் கட்டி அனுப்பி வைப்பது, கணக்குகளைப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கும் கூடுதல் பொறுப்பெடுத்துக் கொண்டு நிறைவேற்றினார். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அக்காலத்தில் இப்பணிகளை நிறைவேற்றிட கடும் உழைப்பைச் செலுத்திடத் தயங்கியதில்லை.
இப்பணிகளை அதற்குரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், உடல் உழைப்பு செலுத்தி பத்திரிகையின் நிர்வாகச் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் தோழர் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். புதிய இளம் தோழர்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட காலத்திலும் இவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அச்சிடல் பணிகளின் போது அச்சு தெளிவாகப் பதிகிறதா என்பதை பூதக்கண்ணாடியின் மூலம் சோதிப்பதைக் கண்டு அச்சகத் தொழிலாளர்கள் ஆச்சரியப்படுவார்கள். தான் பொறுப்பெடுத்துக் கொண்ட வேலை மீதும், ஏற்றுக்கொண்ட அரசியல் மீதும் தோழர் வைத்திருந்த ஆழ்ந்த பற்றுக்கான அடையாளம் இது. அவர் வேறு பொறுப்புகளுக்கு மாறிய பிறகும் கூட அச்சு, தாள் கொள்முதல் உள்ளிட்ட எல்லா அம்சங்களுக்கும் இடையறாத ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். நாம் இழைக்கும் ஒவ்வொரு சிறு தவறும் கூட, பத்திரிகையின் மதிப்பைக் குலைத்து விடுமோ என்ற அச்சத்தைக் கொண்டவராகவே இருந்தார்.
அதேபோல், 50-க்கும் மேற்பட்ட முகவர்களிடமிருந்து முறையாக இதழ் தொகையை பெறுவது, நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி வைப்பது, கணக்கு வழக்குகளை முறையாக முடிப்பது என நிர்வாகத்தை நேர்த்தியாகக் கையாண்டார். ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சிறந்த நிர்வாகியாக எவ்வாறு இருக்க வேண்டுமென மற்ற தோழர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அவ்வபோது புதிய ஜனநாயகம் இதழை உழைக்கும் மக்களிடம் நேரடியாக விநியோகித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்பதிலும், இதழ் வந்தவுடன் தோழர்கள் – வாசகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டறிவதிலும் தீராத ஆவல் கொண்டவராக இருந்தார். மேலும், புதிய ஜனநாயகம் இதழில் வெளியாகும் கட்டுரைகளின் மீது வாசகர்கள் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களுக்கு முறையாக பதில் அனுப்பி வைப்பதிலும் கவனம் செலுத்தினார். ஓர் அரசியல் பத்திரிகைக்கான எழுத்தாளர் என்பவர் அறையில் உட்கார்ந்து கொண்டிராமல், மக்கள் கருத்துகளை கேட்டறிய வேண்டும், நம்முடைய அரசியல் மக்களிடையே எவ்வாறு வினையாற்றுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அக்கறை முன்மாதிரியானது.
இன்று அரசியல் களத்தில் செயல்பட்டுவரும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் புதிய ஜனநாயகத்தின் அறிமுகம் உள்ளதெனில், அதன் அரசியல் உள்ளடக்கம்தான் முக்கியக் காரணம். உள்நாட்டு, சர்வதேச அரசியல் போக்குகள், சமூகப் பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அவற்றை மாற்றி அமைப்பதற்கான மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் முன்வைப்பது புதிய ஜனநாயத்தின் தனிச்சிறப்பு. பல நேரங்களில் பல விசயங்கள் குறித்த கட்டுரைகள், பார்வைகள் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான பிறகே ஆங்கில பத்திரிகைகளில் அவை குறித்த செய்திகள் வெளிவரும் என்னுமளவுக்கு முன்முயற்சியுடன் செயல்பட்டிருக்கிறோம்.
1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தோலுரித்துக் காட்டியது, ஈழ விடுதலைப் போராட்டத்தை சரியாக மதிப்பிட்டுத் தொடர்ச்சியாக வினையாற்றியது, ஆர்.எஸ்.எஸ். என்னும் பார்ப்பன பாசிச அமைப்பு 1990-களில் தலைதூக்கிய போதே அதனை சரியாகக் கணித்து தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருவது உள்ளிட்டவை புதிய ஜனநாயகத்தின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை எல்லாவற்றிலும் தோழர் சம்பத் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.
தோழர் சம்பத் வேறு பொறுப்புகளுக்குச் சென்ற பிறகும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளையும், தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்தான கட்டுரைகளையும் எழுதி புதிய ஜனநாயகம் இதழுக்கு பங்களிப்பு செய்து வந்தார். மறுபுறம், வினவு வலைதளத்திற்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதியும் மொழிபெயர்த்தும் அனுப்பி வந்தார்.
இவ்வாறு, புதிய ஜனநாயகம் இதழின் தொடக்கம் முதல் இன்று வரை ஒவ்வொரு நிலையிலும் தோழரின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு நீக்கமற நிறைந்துள்ளது. தோழரின் இந்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும், மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் மீதான பற்றுறுதியையும் வரித்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட உறுதியேற்கிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.
![]()
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram








