முளைக்கும் நெற்பயிர்கள்
கழுத்தறுக்கும் அரசு
மரணிக்கும் விவசாயம்!
பருவ மழை பொய்ப்பது, பாசனத்திற்கு உரிய காலத்தில் நீர் வராதது, உரத் தட்டுப்பாடு, அதீத மழையால் நெற்பயிர்கள் அழுகி நாசமடைவது போன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்த விளைச்சலை அடைய முடியாமலும் விளைச்சல் நாசமாகியும் தமிழ்நாட்டு விவசாயிகள் நட்டமடைவது தொடர்கதையாகியுள்ளது.
ஆனால், இந்தாண்டு தக்க காலத்தில் மழை பெய்து தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி வரலாறு காணாத உச்சத்தை அடைந்தும், தி.மு.க. அரசின் அலட்சியத்தால், நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைத்து நாசமாகியுள்ளன.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பெற்ற குழந்தையைப் போல பாதுகாத்து வளர்த்துவந்த நெற்பயிர்களை அரசின் அலட்சியத்தால் பருவமழைக்கு பலி கொடுத்து விவசாயிகள் நிர்கதியாகி நிற்கின்றனர்.
முளைத்த நெற்பயிர்கள் தத்தளிக்கும் விவசாயிகள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பிரதானமாக செய்யப்படுகிறது. இந்தாண்டு வழக்கம் போல ஜூன் 12 அன்று மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டு டெல்டாவில் குறுவை சாகுபடி தொடங்கியது.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியதால், அதிகளவில் நீர் திறக்கப்பட்டு டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைந்தது. இதனால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி இரட்டிப்பானது.
அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி அதிகரித்தது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டா மாவட்டங்களில் 6.31 லட்சம் ஏக்கரிலும், பிற மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரிலும் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது.
இதனால் செப்டம்பர் இறுதியில் உற்சாகத்துடன் அறுவடையை தொடங்கிய டெல்டா விவசாயிகள், நெல் கொள்முதலுக்கான தயாரிப்புப் பணிகளை அரசு விரைந்து தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குழந்தைகளுக்கு துணிமணி, பட்டாசு வாங்குவதற்காக வேகவேகமாக பயிர்களை அறுவடை செய்து நெல் மூட்டைகளுடன் கொள்முதல் நிலையங்களுக்கு சென்றனர்
ஆனால், ஆளும் தி.மு.க. அரசு, நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல், தார்பாய், லாரி, மூட்டைகளை அடுக்குவதற்கான இடம் என நெல் கொள்முதலுக்கான எந்தவொரு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடுமையாக அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் 30 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் நிலையங்களிலேயே இரவு பகலாக காத்திருக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் மிகப்பெரும் அளவிற்கு தேக்கமடைந்து, இலட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கத் தொடங்கின.
மேலும், சேமிப்புக் கிடங்குகளில் போதிய இடம் இல்லாததாலும், கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்யாததாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொள்முதல் நிலையங்களிலும் போதிய இடமில்லாததால் அருகிலுள்ள சாலைகளில் நீண்ட தூரத்திற்கு நெற்பயிர்களை கொட்டி வைக்க வேண்டிய நிலை உருவானது. அதனை போர்த்தி வைப்பதற்கான தார்பாய்கள் கூட கொள்முதல் நிலையங்களில் இல்லை.
இவ்வாறு கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகள் தேக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையில் நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து நாசமாயின.
கொள்முதலுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பயிர்கள் முளைத்ததாலும், தீர்மானிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததாலும், அதற்கான நட்டம் விவசாயிகளின் தலையிலேயே விடிந்துள்ளது.
முளைக்கத் தொடங்கிய பயிர்கள் பதராகிவிடும் என்பதால் டன் கணக்கான நெற்பயிர்கள் யாருக்கும் பயன்படாமல் நாசமாகியுள்ளன. நல்ல மீன்கள் கூட முளைத்த பயிர்களை உண்ணாது என்று விவசாயிகள் வயிற்றெரிச்சலுடன் கதறுகின்றனர்.
மறுபுறம், கொள்முதல் நிலையங்களில் இடமில்லாததால், அறுவடை தாமதப்படுத்தப்பட்ட பயிர்களும், அறுவடை செய்து வீட்டருகே சாலைகளில் உலர்த்தப்பட்டு வந்த பயிர்களும் மழையில் நனைந்து முளைத்து பாழாகின.
டெல்டா மாவட்டங்களில் வயல்களில் அறுவடை செய்யாமல் விட்டிருந்த பயிர்கள் நாற்றாக முளைத்ததால் வயல்களில் டிராக்டரை விட்டு உழ வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். “வட்டிக்கு கடன் வாங்கி, நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து, மாட்டுக்கு வைக்கோல் போடுவதற்கு கூட எதுவும் தேறவில்லை” என்று விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் நம் உணவு வரை கரிக்கிறது.
தி.மு.க. அரசின் நவீன தீண்டாமை
அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் நிர்கதியாகியுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இழப்பை குறைப்பதற்குப் பதிலாக, இப்பிரச்சினையை மூடிமறைப்பதிலேயே தி.மு.க. அரசு முனைப்புக் காட்டுகிறது. நெல் கொள்முதல் பணிகள் ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கிவிட்டது; தினமும் 2 மணிநேரம் கூடுதலாகவும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொள்முதல் பணிகள் நடக்கின்றன என்றெல்லாம் நீண்ட பட்டியலை வெளியிட்டு தி.மு.க. அரசு தன்னை நியாயப்படுத்தி கொள்கிறது.
ஆனால், இவையெல்லாம் கடந்த ஆண்டுகளிலும் பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறைதான் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாறாக, இந்தாண்டு இரட்டிப்பாகிய சாகுபடியை கொள்முதல் செய்வதற்கான எந்தவொரு முன்னேற்பாட்டையும் அரசு செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்துகின்றனர்.
மேலும், விவசாயிகள் கூறுகையில், “ஒவ்வொரு சாகுபடி காலத்திற்கு முன்பும், தஞ்சாவூரில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, சாகுபடி, அறுவடை குறித்தெல்லாம் தமிழ்நாடு வேளாண் அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்தாலோசிப்பர். ஆனால், இக்கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை” என்கின்றனர். அதேபோல், விவசாயிகள் எவ்வளவு நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்கிற இலக்கைக் கூட இந்தாண்டு தி.மு.க. அரசு நிர்ணயிக்கவில்லை. சாகுபடியான பின்னரும் விளைச்சல் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி கொள்முதலுக்கான முன்னேற்பாட்டை செய்யவில்லை.
இவ்வாறு, வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை கூட செய்யாமல், தொடக்கத்திலிருந்தே தி.மு.க. அரசு விவசாயிகளை புறக்கணித்து வந்தது என்பதே நிதர்சனம்.
தற்போது மட்டுமின்றி, தொடர்ச்சியாகவே விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், தி.மு.க. அரசு விவசாயிகளின் மீது நவீன தீண்டாமையையே கடைப்பிடித்து வருகிறது.
சான்றாக, ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டு மாம்பழங்களுக்கு ஆந்திர அரசு விதித்த தடையால் இங்குள்ள மாம்பழ விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டியது; கிருஷ்ணகிரியில் விவசாயிகளை நட்டத்தில் தள்ளிவரும் போலி நெல் விதைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காதது; இந்தாண்டு காலம் தவறி பெய்த மழையால் திருவாரூரில் மும்முறை பயிரிடப்பட்ட பருத்தி நாசமடைந்த போதும் அதனை எட்டிக்கூட பார்க்காதது என தி.மு.க. அரசின் விவசாய விரோத பட்டியல் நீள்கிறது.
மேலும், இவ்வாறு பாதிக்கப்படும் விவசாயிகள் எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்காமல் இருப்பது; விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் தவிர்ப்பது; விவசாயிகளை நேரில் சந்திக்காமல் காணொளி காட்சி கூட்டங்களை (Video Conference) நடத்துவது போன்றவையும் விவசாயிகளிடம் கடைப்பிடிக்கப்படும் நவீன தீண்டாமையே ஆகும்.
தற்போதும் வடகிழக்கு பருவமழைக்கான வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தி.மு.க. அரசு சென்னைக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுத்தது. மற்ற மாவட்டங்கள், குறிப்பாக விவசாயப் பகுதிகளை புறக்கணித்தது.
அதேபோல், டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வற்காக சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விவசாயிகளை நேரில் சந்திக்காமலேயே, “பாதிப்புகள் இல்லை” என்று ஊடகங்களில் தெரிவித்தது விவசாயிகளை கொந்தளிக்க வைத்தது. உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி எந்தவொரு அதிகாரிகளும் பாதிப்புகளை நேரடியாக பார்வையிடாமல் புறக்கணித்து வருகின்றனர்.
சிதைக்கப்படும் விவசாயத்துறை,
திணிக்கப்படும் கார்ப்பரேட்மயம்!
நமது நாட்டில் ஆட்சியதிகாரத்தில் உள்ள பாசிச மோடி அரசு இந்திய விவசாயத்துறையை கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது. மானியங்களை வெட்டுவது, வங்கிக்கடன் மறுப்பது, விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது போன்ற விவசாய விரோத நடவடிக்கைகள், மூன்று வேளாண் சட்டங்கள் போன்ற பாசிச சட்டத்திட்டங்கள் மூலம் விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி வருகிறது.
உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கு இணங்க, பயிர் உற்பத்தியிலிருந்து உணவு விநியோகம் வரை மொத்த சங்கிலியையும் சிதைத்து அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை மோடி அரசு உள்நுழைக்கிறது. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய விவசாயத்தை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கார்ப்பரேட்டுகளை உள்நுழைப்பதற்கேற்ப, உணவு உற்பத்தி – விநியோக சங்கிலியை திட்டமிட்டே சிதைத்து வருகின்றன.
சான்றாக, நெல் கொள்முதலின் போது விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40-60 லஞ்சமாக கொள்ளையடிக்கப்படுவது ஊரறிய அம்பலப்பட்டு நாறியுள்ளது. இத்தகைய லஞ்ச லாவணிகள் ஒவ்வொரு படிநிலையிலும் மலிந்து கிடக்கின்றன. அதேபோல், கடுமையான ஆள் பற்றாக்குறை, போதிய நிதி ஒதுக்கப்படாதது என உணவு உற்பத்தி – விநியோகத்தில் தீவிரமான பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பதிலாக ஊக்குவிக்கப்பட்டு உணவு உற்பத்தி – விநியோக சங்கிலி திட்டமிட்டே சிதைக்கப்படுகிறது. இதனை தி.மு.க – அ.தி.மு.க. என இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்து வந்துள்ளன.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெல் கொள்முதலில் தனியார் – கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல், “கிரைன்ஸ்” (GRAINS) என்ற வலைத்தளம் (Portal) மூலம் விவசாயிகள், நிலம், பயிர் சாகுபடி பற்றிய தரவுகளை திரட்டி அதனை டிஜிட்டல்மயமாக்குது; வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் விவசாயிகளின் உயிராதாரமான கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு ‘டிஜிட்டல்மயம்’, ‘நவீனமயம்’ ஆகியவற்றில் கவனம் செலுத்துவது என கார்ப்பரேட்மயமாக்கத்தின் அங்கமான டிஜிட்டல்மயமாக்கத்தை விவசாயத்துறையில் திணித்து வருகிறது. விவசாயிகளை நேரடியாக சந்திக்காமல் காணொளி வாயிலாக உரையாடுவதன் பின்னணியிலும் இந்த டிஜிட்டல்மயமாக்க சதியே அடங்கியுள்ளது.
மறுபுறம், மாநிலங்களின் உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தில் பாசிச மோடி அரசின் பிடி வலுத்து வருவதும் விவசாயத்துறையை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் முதல் பொது விநியோகத்திற்கான அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை (இதனை உட்கொள்வோருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது) கலக்கும் விகிதம் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளதால், மாநில அரசுகள் அதனை சார்ந்தே உள்ளன.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகள், பரிந்துரைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தனக்கே உரிய பாசிச திமிருடனும் விவசாய விரோதத் தன்மையுடனும் நடந்துகொள்கிறது மோடி அரசு. இதனால் ஏற்படும் அலைக்கழிப்புகள், காலதாமதங்களும் விவசாயிகளின் தலையிலேயே விடிகிறது. தற்போது தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மொத்தத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் விவசாயத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவது என்ற நோக்கத்திலிருந்தே நடக்கிறது. இதில் பாசிச பா.ஜ.க-வும் எதிர்க்கட்சிகளும் கை கோர்க்கின்றன.
எனவே, கார்ப்பரேட்மயமாகிவரும் இந்த விவசாயக் கட்டமைப்பிற்கு மாற்றாக தற்சார்பு விவசாயக் கட்டமைப்பை உருவாக்குவதே இதற்கு தீர்வாகும். அந்தவகையில், பயிர்களுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை தடுக்கக்கூடிய, மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து செயல்படக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











