
24.11.2025
சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு
போலீசு மிரட்டல்
அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே!
கடந்த அக்டோபர் 11 அன்று “தி இந்து” ஆங்கில செய்தித்தாளில் “மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு நிதி இல்லை” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் (Marksheet) மற்றும் தற்காலிகச் சான்றிதழ்களை (Provisional certificate) அச்சிட்டு விநியோகிக்கவில்லை. இதற்குக் காரணம்: எழுதுபொருட்களை வாங்கி அச்சிட்டு விநியோகிப்பதற்கு நிதி இல்லாதது” என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து கடந்த நவம்பர் 3-ஆம் தேதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் அறிவு, காணொளி ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காததால் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமலும் வேலையில் சேர முடியாமலும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை அம்பலப்படுத்திப் பேசினார். இது மாநில-ஒன்றிய அரசுகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான நிதி நெருக்கடி என்பதை அம்பலப்படுத்தியதுடன், தமிழ்நாடு அரசு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்; சிறப்பு நிதி ஒதுக்கி பல்கலைக்கழகத்தை உடனடியாக நிதி நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடித்து வழக்க வேண்டுமென்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக வலியுறுத்தினார்.
இந்நிலையில், நவம்பர் 20 அன்று இரவு சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து அழைத்த போலீசு அதிகாரி, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார்.
சென்னைப் பல்கலைக்கழக நிதி நெருக்கடி, விடுதி பிரச்சினைகள், மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ச்சியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி போராடி வருகிறது. இதனை நெருக்கடி கொடுத்து முடக்க வேண்டும் என்பதே இம்மிரட்டலின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்களின் கல்வியை, எதிர்காலத்தைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதும் கண்டிப்பதும் அதற்கு எதிராகப் போராடி முறியடிப்பதும் மாணவர் சங்கங்கள், மாணவத் தலைவர்களின் ஜனநாயகக் கடமையாகும். இதற்குப் பதிலளிக்க வேண்டியதும், மாணவர் சங்கங்களின் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், போலீசு இதனைக் குற்ற நடவடிக்கையாக சித்தரிப்பதுடன், பல்கலைக்கழகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்வது – மாணவர் அமைப்புகளின் ஜனநாயகம் மற்றும் பல்கலைக்கழக வளாக ஜனநாயகத்தை மறுத்து உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். தமிழ்நாடு போலீசின் இந்த மாணவர் விரோத நடவடிக்கையை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
![]()
இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











