“ஐ லவ் முகமது” இந்துராஷ்டிர சோதனைச்சாலையில் ஓர் எதிர்ப்புக் குரல்!

பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் - பொருளாதார - மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.

உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் நடந்த “ஐ லவ் முகமது” போராட்டம்

ந்துராஷ்டிரக் கனவை அடைவதற்காக ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் என்ற பாசிச சர்வாதிகாரத்தை இந்தியாவில் நிறுவிவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், தலித் – பழங்குடியின, கிராமப்புற மக்களின் மத வழிபாட்டை பார்ப்பனமயமாக்கியும் இஸ்லாமிய – கிறித்துவ மத உரிமைகளை பறித்தும் வருகிறது. குறிப்பாக, மசூதிகளுக்கு வெளியில் இஸ்லாமிய மக்களை தொழுகை செய்ய அனுமதிக்காதது, மசூதிகளில் பாங்கு ஓதத் தடை விதிப்பது, இந்து பண்டிகைகளின் போது மசூதிக்கு செல்லக்கூடாது என்று மிரட்டுவது என இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளை பறித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் “ஐ லவ் முகமது” (I Love Muhammad) என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தியதையும் காவி கும்பல் தடுத்தது. ஆனால், இம்முறை இஸ்லாமியர்கள் கிளர்ந்தெழுந்து போராடியது பா.ஜ.க. கும்பலை பீதியில் ஆழ்த்தியது.

பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கடந்த செப்டம்பர் 4 மீலாடி நபி நாளன்று இஸ்லாமிய மக்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் “ஐ லவ் முகமது” என்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனை சகித்துக்கொள்ள முடியாத சங்கிக் கும்பல் இஸ்லாமிய மக்களிடம் தகராறில் ஈடுபட்டது.

இதனையடுத்து, போலீசால் அப்பெயர் பலகை அகற்றப்பட்டது. செப்டம்பர் 10 அன்று சையத் நகரைச் சேர்ந்த 15 பேர் மீது வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, பொது ஒழுங்கை அச்சுறுத்தும் வகையில் புதிய பாரம்பரியத்தை தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் போலீசு வழக்கு பதிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய மக்கள் உன்னாவ், கௌஷம்பி, லக்னோ உள்ளிட்டு உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் போராட்டம் வெடித்தது. போராட்டக் களங்களில் “ஐ லவ் முகமது” என்ற முழக்க பதாகைகளை ஏந்தி, சங்கி கும்பலின் செவிப்பறைக் கிழிய இஸ்லாமியர்கள் முழக்கமிட்டனர். சமூக வலைதளங்களில் #ஐ_லவ்_முகமது என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆகியது.

பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் – பொருளாதார – மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.

மேலும், இஸ்லாமிய மக்களை அச்சத்தில் இறுத்தி வைப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் பாசிச யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை தகர்ப்பதாக இப்போராட்டம் அமைந்தது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலை என்று சங்கிகள் கொக்கரிக்கும் உத்தரப்பிரதேசத்தில் இப்போராட்டம் வெடித்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு பீதியூட்டியது. எனவே, நாடு முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிந்தது, 285 இஸ்லாமியர்களை கைது செய்து சிறையிலடைத்தது, இஸ்லாமியத் தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தது, போராட்டத்தில் ஈடுபட்டோரின் வீடுகளை புல்டோசரால் இடித்தது, துப்பாக்கிச்சூடு நடத்தியது என போராடிய இஸ்லாமிய மக்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

ஆனால், இப்பாசிசத் தாக்குதல்கள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தையும் எதிர்ப்புணர்வையும் ஒடுக்கிவிடாது. பாசிச மோடி அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் நிச்சயம் காட்டுத்தீயாய் கொழுந்துவிட்டு எறியும். இதற்கு இந்தியா முழுவதுமுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும்.


பானு

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க