நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள் – கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள்!

0
திருவாரூர் - மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்

ங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீட்டைச் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று பருவங்களில் குருவை, தாலடி, சம்பா நெற்பயிர்களைப் பயிரிடுவது வழக்கம். அதன்படி மாவட்ட வேளாண் துறை சார்பில் 2 லட்சம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழையை நம்பி ஒருபோக சாகுபடியாக தாளடி நெற்பயிர் நடவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்களம் உள்ளிட்ட பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் திருத்துறைப்பூண்டி நன்னிலம், முத்துப்பேட்டைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் 3,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த தாளடி, சம்பா, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே நிலை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தால் பயிர்கள் அழுகிவிடும் என்று விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்

தஞ்சாவூர்:

24 மணி நேரத்தில் (நவம்பர் 24 நிலவரப்படி) தஞ்சை மாவட்டத்தில் 80.55 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 15 நாட்களே ஆன சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன குறிப்பாக, அம்மாபேட்டை, பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூறு ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரால் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

இடுப்பளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கிய விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாயி செந்தில்குமார், “இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர் வாராததால் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்குகிறது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

நாகை:

நாகை மாவட்டத்தில் விதைத்து 10 நாட்களே ஆன 50,000-ற்கும் மேற்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருமருகல், சிக்கல், கீழ்வேளூர் பகுதிகளில் விலை நிலங்கள் நீரில் மூழ்கி ஆறு போல் காட்சியளிக்கின்றன.

பெருங்கடம்பனூர், பாலையூர், நரிமணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு ₹25,000 செலவு செய்து பயிரிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை:

காவிரி டெல்டாவின் கடை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக புதுவீடு பகுதியில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை விட்டால் மட்டுமே பயிரைக் காப்பாற்ற முடியும். நடவு செய்து 45 நாட்கள் ஆன நிலையில் நெல்மணிகள் முளைக்கும் நேரத்தில் நீரில் மூழ்கியதால் பயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். மேலும் உடனடியாகப் பாதிப்புகளைக் கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் பணையகுளம் கண்மாயையும், நீர் செல்வதற்கான வாய்க்கால்களையும் தூர்வாராததால், மழைநீர் நிரம்பியதால், உபரி நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் நால்வர் நகர், ரஹமத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நால்வர் நகர்ப் பகுதியில் தேங்கிய நீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகளும், மருத்துவர்களும் நடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடன் நெருக்கடி, வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும், மக்களும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை நிலங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வடிகால் அமைக்காமலும், கால்வாய்களை தூர்வாராமலும் அரசு விவசாயிகளை இருமுனைத் தாக்குதலுக்குத் தொடர்ந்து ஆளாக்கி வருகிறது.

போர்க்கால அடிப்படையில் கன மழையால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்; கீழே அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அகற்றப்பட வேண்டும்; கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் ஆகியன பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க