டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!

ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சலே அல்ஜஃபராவி.

ரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் காசா மீதான இன அழிப்புப் போரில் 18,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இனவெறிப் பிடித்த இஸ்ரேல் அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான மக்கள் போராட்டங்கள் உலகம் முழுவதும் பற்றி படர்ந்து வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாத அமெரிக்காவும், பாசிச இஸ்ரேலும் தங்கள் மீதான குற்றத்தை திசைதிருப்பி தங்களை யோக்கியர்களாக காட்டிக்கொள்ளவும், தங்களுக்கெதிரான உலகளாவிய போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களை மட்டுப்படுத்தவும், அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அதனடிப்படையிலான பேச்சுவார்த்தை நாடகத்தை அரங்கேற்றின.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் அக்டோபர் 9 அன்று டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சாத்தியமானதாகவும், வெற்றியடைந்து விட்டதாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் வெறிக்கூச்சலிடுகின்றன. அமெரிக்க அடிமை பாசிச மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்துக் கூறினார்கள். ஆனால், அமெரிக்க-இஸ்ரேல் ஓநாய்கள் காசாவை  முற்றிலுமாகக் கைப்பற்றுவதற்கு ஆயத்தமாகி வருகின்றன என்பதையே நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பேச்சுவார்த்தை எனும் சதித்திட்டம்

ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.

முதலில், ஏகாதிபத்தியவாதிகள், முதலாளித்துவ ஊடகங்கள் பயன்படுத்தும் ‘இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்’ என்ற சொல்லாடலே அயோக்கியத்தனமானது. பாலஸ்தீன மக்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இனவெறிப் பிடித்த இஸ்ரேல்தான் காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாத இஸ்ரேல் அரசால் தங்கள் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை தடுத்தநிறுத்த வேண்டிய நிர்பந்தத்திலேயே ஹமாஸ் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அதேசமயம், 20 அம்சத் திட்டத்தை ஹமாஸ் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. ஏனெனில், ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்பது 20 அம்சத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகும். அதுமட்டுமின்றி, காசாவின் இறையாண்மையை ஒழித்துக்கட்டுவதே 20 அம்சத் திட்டத்தின் பெரும்பகுதியாகும்.

தங்களின் சுயநிர்ணய உரிமையை அந்நியரிடம் விட்டுக்கொடுக்க முடியாது; காசாவில் இருந்து வெளியேற முடியாது; ஆட்சி அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று தெளிவாக ஹமாஸ் அறிவித்து விட்டுத்தான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.

ஆனால், டிரம்பின் முயற்சியால் முழுமையாக போர் முடிவுக்கு வந்துவிட்டது போலவும், டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுமா என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் பிதற்றின. இறுதியில், வெனிசுலாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கைக்கூலிக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது வேறு கதை.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதைப் போலவும், அந்நாடுகள் கொடுத்த அழுத்தத்தில்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன.

இதனால், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துப் போராடும் தங்கள் நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பாலஸ்தீன தனிநாடு கோரிக்கையை அங்கீகரிப்பதாக, திசைதிருப்பும் முயற்சியில் இறங்கின.

உண்மையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும், தங்களின் ஏகாதிபத்திய நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குரூர நாடகத்தில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தன என்பதே உண்மை. காசா மக்களின் மீது இந்தப் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு அக்கறை இருக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உண்மையில், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டுமெனில் இந்த 20 அம்ச திட்டத்திற்கு உடன்பட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பிற்கு நிபந்தனை விதித்ததே ஒரு போர்க்குற்றம்தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கே யார் இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டார்கள்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு..

கடந்த காலங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச சட்டங்களை தூக்கியெறிந்து விட்டு, இஸ்ரேல், காசா மக்களின் மீது போரை நடத்தியதை நாம் அறிவோம். சான்றாக, கடந்த மே 2024-இல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், நெதன்யாகு தலைமையிலான பாசிச இஸ்ரேல் அரசு அதனை கழிவறைக் காகிதமாக கூட மதிக்காமல் மீண்டும் காசா மீதான போரைத் தொடங்கி, இனப் படுகொலையைத் தொடர்ந்தது.

சொல்லி வைத்தாற்போல், தற்போதைய முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பின்பும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நெதன்யாகு அரசு காசாவில் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகான உடனடியான தாக்குதல்களில் மட்டும் காசாவில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, ‘காசா அமைதி உச்சி மாநாடு’ எகிப்தில் அக்டோபர் 13 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமெரிக்கா, எகிப்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், கத்தார், அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், துருக்கி, சௌதி அரேபியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். காசா பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் நோக்கம் என இவர்கள் அறிவித்துக் கொண்டனர். டிரம்ப் முன்னிலையில் ‘காசா அமைதி ஒப்பந்தம்’ கையெழுத்தானது. இஸ்ரேலும் ஹமாஸும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருதரப்பிலும் கைதிகள் பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதேசமயம், தீர்மானித்த அளவில் காசாவிற்குள் உணவுப் பொருட்கள் செல்வதில் சிக்கல்கள் நீடிப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான தடைகளை இஸ்ரேல் முற்றாக அகற்றவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம், ஹமாஸ் அமைப்புக்கும் உள்ளூர் ஆயுதக் குழுவான டக்முஷ் குழுவுக்கும் இடையிலான கடும் மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்முரண்பாடுகளால் கடந்த காலத்தில் ஹமாஸ் உடன் இக்குழுவுக்கு மோதல்கள் இருந்தாலும், தற்போது டக்முஷ் குழுவை இஸ்ரேல் பயன்படுத்தக்கூடும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

பணயக் கைதிகளை விடுதலை செய்த பின்பு, தங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கும் என்பதை ஹமாஸ் தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டே இருந்தது. அடுத்தடுத்து காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அதை உண்மையென்று நிரூபித்துவிட்டன.

இஸ்ரேலின் இராணுவ அமைச்சர், “கைதிகள் பரிமாற்றத்துக்கு பின்னரும், எங்கள் தாக்குதல் தொடரும். உடைக்கப்படாமல் இருக்கும் சுரங்கங்கள் உடைத்துத் தகர்க்கப்படும் வரை அமைதி திரும்பிவிட்டதாகக் கருதிவிட முடியாது” என்று கூறியதிலிருந்தே இந்த ஓநாய்களின் பேச்சுவார்த்தை நாடகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அதன் தொடர்ச்சியாக, காசாவின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. பொதுமக்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி 11 பேரைக் கொன்றுள்ளது. ‘சமாதானம்’ பேசிய அரபு நாடுகளோ ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோ அமெரிக்காவோ இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை.

இத்தகைய தாக்குதல்களுக்கு ஹமாஸ் எதிர்த்தாக்குதல் தொடுப்பதை வைத்துக்கொண்டு, இருதரப்பும் போர் நிறுத்தத்தை மீறுகிறது என்ற கருத்தைக் கட்டமைத்து, அதனூடாக காசாவின் மீதான தாக்குதலைத் தொடர ஏகாதிபத்திய நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

அக்டோபர் 19 அன்று, ரஃபா நகரில் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் கொன்றதாகக் கூறி, காசா மீது மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவின் தென்பகுதியில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில், அமெரிக்காவின் 153 டன் எடை கொண்ட குண்டுகளை, இஸ்ரேல் காசாவின் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு டிரம்போ அல்லது டிரம்பை ஆதரிப்பவர்களோ பொறுப்பேற்க போவதில்லை, இஸ்ரேலை கண்டிக்கப் போவதுமில்லை.

டென்மார்க் நாட்டின் இராணுவத்துறை ஆய்வாளர், கிறிஸ்டியன் மௌரிட்சென், “போர்நிறுத்தம் முறிந்து, அது ஆகாயத்தில் துண்டு துண்டாக பறக்கும் கடைசி இடத்துக்கு வந்துள்ளது” என்றும் “இந்த போர்நிறுத்த மீறல் மிகவும் பாரதூரமானது” என்றும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இவையெல்லாம், டிரம்ப் தலைமையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் வெறும் நாடகம் என்பதையும் ஏகாதிபத்தியங்களின் இந்த போலித்தனமான போர்நிறுத்த நாடகம் விரைவாக அம்பலப்பட்டு விட்டதையும் உணர்த்துகின்றன.

இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்

ஏகாதிபத்திய ஓநாய்கள் மீண்டும் காசா மீதான போரை தொடர்வதற்கும் முழுமையான கைப்பற்றலுக்கும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. “ஹமாஸ் அமைப்பு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது”, “போர்நிறுத்தத்தை ஹமாஸ் துச்சமாக கருதிவிட்டது” என்றெல்லாம் அமெரிக்கா கூறி வருவது இதனை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறுவதே இவர்களின் முக்கியமான பிரச்சினையாகும்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நடைபெற்றுவரும் சம்பவங்களானது, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக, அமைதிப்படை காசாவிற்குள் செல்லாவிட்டால், இத்தகைய மோதல்களை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே இந்த இரண்டு விடயங்களும் நடைபெற்றாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஹமாசிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க வேண்டும் என்பதுதான் வளைகுடா நாடுகளின் கருத்தாகவும் உள்ளது எனவும் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

சர்வதேச அமைதிப் படைகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை என்பதை கடந்த கால உலக வரலாறுகளில் இருந்து காசா மக்களும் ஹமாசும் உணர்ந்தே இருப்பர். ஜே.டி.வான்ஸின் கூற்றானது, காசாவை எப்படியாவது கைப்பற்றத் துடிக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுநோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது.

இந்நிகழ்வுகளிலிருந்து, காசாவில் முழுமையான இனப்படுகொலையை நடத்தி முடித்து, காசாவை முழுமையாக கைப்பற்றும் வகையிலான ஒரு போருக்கு இஸ்ரேல் தயாராகிக் கொண்டிருப்பதையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதற்கேற்ப காய்நகர்த்துவதையும் நம்மால் உணர முடிகிறது.

இத்தகைய நெருக்கடியான சூழலில், உலகளாவிய உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மட்டுமே காசாவுக்கான நம்பிக்கையாக இருப்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். குறிப்பாக, அக்டோபர் 23, 24 தேதிகளில் டென்மார்க்கில், 27 இசைக்குழுக்கள் இணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் இறையாண்மையான ஆட்சிக்கு ஆதரவு, நீடித்த நிலையான போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை விற்பதை டென்மார்க் நிறுத்த வேண்டும், பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, விடுதலையை நேசிக்கின்ற, ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் காசா மக்களுக்காக, பாலஸ்தீன விடுதலைக்காக தங்களது குரலை முன்பை விட அழுத்தமாகவும் ஓங்கியும் வெளிப்படுத்த வேண்டும். உலகம் முழுக்க பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் முன்னிலும் வீரியமாக வீறுகொண்டெழ வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவான உலக மக்களின் இடைவிடாத, சோர்வுறாத போராட்ட மனநிலையை தகர்த்துவிட முடியும் என்ற எதிரிகளின் எண்ணத்தை நாம் தவிடுபொடியாக்க வேண்டும். நீதிக்கான பாதை அது ஒன்றே!


அய்யனார்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க