04.12.2025

திருப்பரங்குன்றத்தை இந்து மத வெறி கும்பல் கலவர பூமியாக்க அனுமதியோம்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வர வேண்டும்!

கண்டன அறிக்கை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவை கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று அநீதியான ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. மாறாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எடுத்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாலை 6:00 மணிக்குள் தான் குறிப்பிட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மாலை 06.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்கி இருக்கும் சூழலில் திருப்பரங்குன்றம்  மலை உச்சியில் அதுவும் நில அளவை கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பதட்டத்தோடு பரபரப்பாக இவ்வழக்கை அணுகிய ஜி.ஆர். சுவாமிநாதன், சி.ஐ.எஸ்.எஃப் படையினரை பாதுகாப்புக்காக அனுப்பி வழக்கின் மனுதாரர் ஆன ராம. ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுவரை இக்கோயில் பிரச்சனை தொடர்பாக அளிக்கப்பட்ட அனைத்து முன் தீர்ப்புகளுக்கு எதிராகவும் நீதிமன்ற ஒழுங்குக்கு எதிராகவும் ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ள ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிபதியாக இருக்கவே கொஞ்சமும் தகுதியற்றவர் ஆகிறார்.

கோயில்களின் ஆகம விதிப்படி கருவறைக்கு மேல் இருக்கக்கூடிய மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதற்கு கொஞ்சமும் தொடர்பற்ற சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள நில அளவைக் கல்லில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து மத வெறி பாசிச கும்பல் தொடர்ந்து போராடி வருவதையே தனது தீர்ப்பின் மூலம் அவர் தெரிவித்திருந்தார். நில அளவை கல்லில் தீபம் ஏற்ற வேண்டுமென்றால் தர்காவின் வழியாகத்தான் சென்று தீபம் ஏற்ற வேண்டும். இதையெல்லாம் அறியாதவர் அல்ல நீதிபதி.

நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை  சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் போர் தொடுத்திருக்கிறார் ஜி.ஆர். சுவாமிநாதன்.

தமிழ்நாடு அரசு சார்பில், ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் வழக்கம் போலவே தீபம் ஏற்றும் இடத்திலேயே இந்த முறையும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற பாசிசக் கும்பல்  கலவரத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் தர்காவுக்குள் நுழைந்து கலவரம் செய்யவும் முயன்று இருக்கிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிலரும் காயம் அடைந்திருக்கிறார்கள். மதுரையின் மதநல்லிணக்க மரபுக்கு எதிராக கலவரம் செய்ய முயன்ற அத்தனை பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – இந்து மத வெறி பாசிஸ்டுளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களையும் தீர்ப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

திருப்பரங்குன்றத்தில் இப்படி ஒரு கலவர நிகழ்வுக்கு காரணமான ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதுடன் ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தீர்மானமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானவர்கள் அதிகாரத்தில் வீற்றிருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ள காவி பாசிஸ்டுகளை வெளியேற்றுவது தமிழ்நாடு மக்கள் முன் உள்ள முதன்மையான கடமையாகும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க