டெல்லி பல்கலைக்கழகம்: ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் புதிய விதிகள்!

பல்கலை. நிர்வாகம், ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0

டெல்லி பல்கலைக்கழகம் நவம்பர் 12-ஆம் தேதியன்று பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடைபெறும் தேசிய, சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகளில் பங்கேற்பதற்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

அந்த அறிவிப்பில், ”தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் ஆசிரியர்கள் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிடம் முழு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு வழங்கப்படும் அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றையும் கருத்தரங்கு முடிவடைந்த பிறகு, எத்தனை அமர்வுகள் கருத்தரங்கம் நடைபெற்றது, என்ன பேசினோம் என்பது குறித்தும் ஆசிரியர்கள் முழு அறிக்கையைக் காட்சிப் பதிவுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய விதிகள் ஆசிரியர்களின் ஆய்வுக் கட்டுரையை ஆராயவும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சான்றுகளை ஆராயவும் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவிற்கு அதிகாரம் அளிக்கின்றது. அதாவது இக்குழு, ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பேராசிரியர் அபூர்வானந்த் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக தன்னுடைய முழு உரையையும் சமர்ப்பிக்கும்படி நிர்வாகம் கோரியதாக தெரிவித்தார். இவரைப் போன்று முன்னாள் உதவிப் பேராசிரியர் இடிஷா நாகர் “ஒரு கருத்தரங்கை நடத்தும் அமைப்பு என்பது அறிவுஜீவிகளின் குழு அல்லது சங்கம்தானே? அதில் என்ன சோதிப்பதற்கு இருக்கிறது? தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளனவா? அல்லது இது ஆசிரியர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எந்தக் கருத்துகளைப் பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் வழிமுறையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ”டெல்லி பல்கலைக்கழகத்தில் நெறிமுறை ஆய்வு வாரியங்கள் (Institutional Review Boards) இல்லாத நிலையில் வெளி அமைப்புகளின் ’நம்பகத்தன்மையை’ ஆராய பல்கலைக்கழகம் அதிகாரம் கோருவது அறிவுச் சுதந்திரத்துக்கு எதிரானது” என்றும் விமர்சித்துள்ளார்.

உலகளவில் இந்தியாவின் கல்விச் சுதந்திரம் குறைந்து வருகின்ற சூழலில் புதிய விதியினை டெல்லி பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு கல்விச் சுதந்திரக் குறியீடு (Academic Freedom Index) அறிக்கையில் இந்தியா 179 நாடுகளில் 156-வது இடத்தில் உள்ளது. 2022-ல் 0.38 ஆக இருந்த மதிப்பெண் தற்போது 0.16 ஆக சரிந்து கீழ்வரிசையில் உள்ளது. இந்த அறிக்கை ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் சுதந்திரம், கல்வி பரிமாற்றம், நிறுவன சுயாட்சி மற்றும் வளாக ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்! போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!


முக்கியமாக துணைவேந்தர் யோகேஷ் சிங் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகத்தில் காவிமயமாக்கல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக “இந்து ஆய்வு மையம்” அமைத்தல், வளாகத்தில் யாகங்கள், பூஜைகள் நடத்துதல், சுவர்கள், வாயில்களில் காவி நிறம் பூசுதல், ’தர்மசாஸ்திர ஆய்வுகள்’ போன்ற பாடங்களை அறிமுகம் செய்வது, போன்றவை சில உதாரணங்களாகும்.

செப்டம்பர் 28 அன்று துணைவேந்தர் யோகேஷ் சிங் ஆற்றிய உரையில் , “இன்று நக்சலிசம் காடுகளில் இல்லை; நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கிறது” என்று கூறி, விமர்சன சிந்தனையும் சமூக நீதி ஆய்வும் செய்யும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ’நகர்ப்புற நக்சலைட்டுகள்’ என்று முத்திரை குத்தி பேசினார்.

மேலும் ”தேச விரோதிகளைக் கண்டறிந்து அகற்றுங்கள்” என்று ஆசிரியர்களை வலியுறுத்தினார். இந்த உரை பல்கலைக்கழக மின்னஞ்சல் பக்கத்திலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டு மாணவர்களின் போராட்டத்தைத் தூண்டியதுடன், மாணவர் அமைப்புகளும் துணைவேந்தரின் வன்முறைப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக டெல்லி பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தியுள்ள விதிமுறையை வெறும் நிர்வாக மாற்றம் என்று மட்டும் சுருக்கி பார்க்க முடியாது. மாறாக பாசிச கும்பல் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு, டெல்லி ஜாமியா மில்லியா உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சங்கிகள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களும் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன.

இதன் நீட்சியாகத்தான் டெல்லி பல்கலைக்கழகமும், ஆசிரியர்களின் கருத்துக்களைத் தணிக்கை செய்யும் விதிகளை உருவாக்கி அதற்கான நிர்வாக குழுவையும் அமைத்துள்ளது என்று பார்க்க வேண்டியுள்ளது. அதாவது கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிச தாக்குதலை துணைவேந்தர் மூலம் தற்போது நிறுவனமயப்படுத்தியுள்ளது ஒன்றிய மோடி அரசு.

எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த புதிய விதியை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே கல்வி நிலையங்களில் ஆபத்தான நிலையில் இருக்கின்ற கொஞ்சநஞ்ச உரிமைகளையாவது காப்பாற்ற முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க