SIR பயங்கரவாதம்! | பதிவு 4
தேர்தல் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதன் ஓர் அங்கமாக பாசிச பா.ஜ.க. அரசு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்டு வருகிறது. இந்த எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாட்களில் மூன்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO – Booth Level Officer) உயிரிழந்திருப்பது, எஸ்.ஐ.ஆர்-இன் கொடூர பணிச்சூழலை காட்டுகிறது.
நவம்பர் 25 அன்று எஸ்.ஐ.ஆர். அழுத்தம் காரணமாக பள்ளி ஆசிரியரான விபின் யாதவ் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டிருந்த இவர், தன் உயர் அதிகாரிகளால் அதிகமான அழுத்தத்திற்கு உள்ளானதாக இறக்கும் தருவாயில் கூறியுள்ளார். விபினின் இறப்பு பற்றி அவரது உறவினர் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை நீக்குமாறும், அதற்கு பதிலாக புதிய பெயர்களை சேர்க்குமாறும் விபின் யாதவ் மெஜிஸ்ட்ரேட் மற்றும் தொகுதி வளர்ச்சி அதிகாரியால் வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அவ்வாறு செய்யவில்லை என்றால் பணிநீக்கம் செய்து விடுவோம் என்றும் போலீசு மூலமாக பொய்வழக்கு பதியப்படும் என்றும் மிரட்டப்பட்ட நிலையில் விபின் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். ஆனால், விபின் மிரட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி கோண்டா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் தப்பித்துக் கொண்டுள்ளார்.
அதே நாள் நவம்பர் 25 அன்று சுதீர் குமார் என்பவரும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அடுத்த நாள் அவருக்கு திருமணம் நடக்கவிருந்ததால் எஸ்.ஐ.ஆர். குறித்த ஒரு கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள இயலாமல் போனது. இதனால் சுதீரின் வீட்டிற்கு வந்த உயரதிகாரிகள் அவரை பணிநீக்கம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர். பணியிடத்தில் ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்துவந்த சுதீர், அதிகரித்த இந்த அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்த நாளான நவம்பர் 26 அன்று பரேலி மாவட்டத்தில் யோகேஷ் காங்வர் என்ற 47 வயது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி செப்டம்பர் மாதம் உயிரிழந்த நிலையில் யோகேஷ் இரவு பகலாக எஸ்.ஐ.ஆர். வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு தன் உடல் நலத்தை கவனிக்க முடியாமல், தூக்கம் இல்லாமல் இவ்வேலையில் தொடர்ச்சியாக ஈடுபட்டதால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
வேலைப்பளு காரணமாகவே யோகேஷ் இறந்ததாக அப்பகுதி மக்கள் கூறிய நிலையில், “யோகேஷ்க்கு எந்த வேலை அழுத்தமும் இல்லை. மேலதிகாரிகள் யாரும் அழுத்தம் கொடுக்கவும் இல்லை. யோகேஷிற்கு உதவியாக பலர் அங்கு நியமிக்கப்பட்டனர்” என்று கூறி மேஜிஸ்ட்ரேட் இவ்விசயத்தை தட்டிக் கழித்துள்ளார்.
ஆனால், வேலை அழுத்தம் மற்றும் பணிநீக்க மிரட்டலால் அதிக மன அழுத்தம் ஏற்பட்டு இம்முடிவை நோக்கி பி.எல்.ஓ-கள் தள்ளப்படுவதை, உயிரிழந்த பி.எல்.ஓ-களின் குடும்பத்தினர் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
படிக்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!
இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளில் பெரும்பாலும் குறைந்த சம்பளம் வாங்கும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவி ஆசிரியர்கள் போன்றோரே ஈடுபடுத்தப் படுகின்றனர். பொதுவாக தேர்தல் நேரங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தாலும், மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரும் பணிகளை கொண்டுள்ள எஸ்.ஐ.ஆர்., இவர்களுக்கு கடும் வேலைச்சுமையை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமின்றி இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்று இந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். இதனை செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் மிரட்டப்பட்டு வந்தனர்.
இந்த அழுத்தத்தால் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கியதிலிருந்து தற்போதுவரை 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இன்று வரை இவர்களின் உயிரிழப்பிற்கு அரசும் தேர்தல் ஆணையமும் எந்தவித பதிலும் சொல்லவில்லை.
சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்கி, போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து தங்களின் வெற்றியை உறுதி செய்துகொள்ள பாசிச பா.ஜ.க. மேற்கொள்ளும் இந்த எஸ்.ஐ.ஆர்., சாமானிய மக்களின் வாக்குரிமையை பறிக்கிறது, குடியுரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது.
இவற்றோடு இப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளையும் அழுத்தத்தில் தள்ளி அவர்களை தற்கொலை முடிவை நோக்கி தள்ளுகிறது. குறுகிய காலத்தில் இப்பணியை செய்து முடிக்க நிர்பந்திக்கப்படும் இந்த அதிகாரிகளும் செய்வதறியாமல் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இது பாசிச பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் கள்ளக்கூட்டின் பச்சைப் படுகொலையாகும்.
மூலக்கட்டுரை – தி வயர்
![]()
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











