SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

SIR பயங்கரவாதம்! | பதிவு 6

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLOs – Booth Level Officers) நியமிக்கப்பட்ட 250 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நவம்பர் 27 அன்று வேலைநிறுத்தம் செய்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது தங்கள் மீதான அச்சுறுத்தல் மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு எதிராக அகமதாபாத்தின் கோக்ராவில் உள்ள தரவு பதிவேற்றும் மையத்தில் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.

எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுவதில்லை எனவும், வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

குறிப்பாக, பெண் வாக்குச்சாவடி ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தொடர்பு கொள்வதால், இரவு நேரத்தில் சில நபர்கள் தொலைபேசிக்கு அழைத்து, தவறான முறையில் அணுகுவதாக கூறுகின்றனர்.

மேலும், ஆசிரியர்கள் காலை 7 மணிக்கு மையங்களுக்கு வந்துவிட வேண்டும். ஆனால், திரும்பவும் வீட்டிற்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் கிடையாது. இரவிலும் பணி நீடிக்கும். நீண்ட வேலை நேரம் சிரமத்தை ஏற்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

“எங்கள் மேலதிகாரியிடமிருந்து நள்ளிரவு 1 மணிக்குக் கூட அழைப்புகள் வரும். தரவுகளை பதிவு செய்யும்படி உத்தரவிடப்படும். கடந்த மூன்று வாரங்களாக நாங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை” என்று வாக்குச்சாவடி ஊழியர்கள் தங்களது அவல நிலையை எடுத்துரைக்கின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள 246 நகராட்சி கார்ப்பரேசன் பள்ளி வாரியங்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.


படிக்க: உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!


“இது 20 நாட்களில் முடியும் வேலை அல்ல. குறைந்தது 60 நாட்கள் வேண்டும். இது சட்டசபை சார்ந்த பிரச்சினை அல்ல. அகமதாபாத்தின் அனைத்து தொகுதிகள் சார்ந்த பிரச்சினை” என ஒரு வாக்குச்சாவடி ஊழியர் நெருக்கடியான இந்த வேலைநிலைமையைப் பற்றிக் கூறுகிறார்.

மற்றொரு பள்ளி ஆசிரியர், “வாக்காளர் பட்டியல் 2002-இல் உள்ள பெயர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அதிகாரிகள் முரட்டுத்தனமாகக் கையாண்டனர். எங்களுக்கு எந்தத் தீர்வும், உதவியும் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இலக்கை அடைய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

மற்றொரு ஆசிரியர் கூறுகையில், “அரசாங்கத்தின் முக்கியமான குறைபாடு என்னவென்றால், அவர்கள் மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்பவில்லை. யாரும் படிவங்களை நிரப்புவதில்லை. அதை நிரப்பித் தரும்படி எங்களிடம் கேட்கிறார்கள்” என்றார்.

குஜராத்தில் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிச்சுமையை கண்டித்து பி.எல்.ஓ. உள்ளிட்ட வாக்குச்சாவடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம், எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை, அதிகாரிகளின் மிரட்டல், மன அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் பி.எல்.ஓ-கள் பலர் தற்கொலை செய்யும் நிகழ்வு அன்றாட செய்தியாகி உள்ளது.

ஆனால், இதற்கு தீர்வு காணும் நிலையில் பாசிச மோடி கும்பலும் தேர்தல் ஆணையமும் இல்லை. இந்த மனிதாபிமானத்தை அவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது. மாறாக, தங்களின் பாசிச நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள, எப்படியாவது எஸ்.ஐ.ஆர்-ஐ முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கட்டுரை: தி வயர்


இவான்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க