SIR பயங்கரவாதம்! | பதிவு 5
எஸ்.ஐ.ஆர். படிவங்களை வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து வாங்கும் பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என நாடு முழுவதும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO – Booth Level Officers) நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பி.எல்.ஓ-களாக 68,464 அரசு ஊழியர்களும், பி.எல்.ஓ-களுக்கு உதவி செய்வதற்காக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்களாகவும் (Booth Level Agents) பணியாற்றி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், முறையான வழிகாட்டுதல் வழங்கப்படாதது, போதிய பயிற்சியின்மை, அனுபவமின்மை, கடுமையான பணிச்சுமை, தேர்தல் ஆணையத்தின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பி.எல்.ஓ-களாக பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதற்கெதிராக பல மாநிலங்களில் பி.எல்.ஓ. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றக்கோரி பி.எல்.ஓ-களை மிரட்டுவது, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது, பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது நாடு முழுவதும் பொது நிலைமையாக உள்ளது.
இதனால், “பணி அழுத்தத்தை தாங்க முடியவில்லை”, “அதிகாரிகளின் மிரட்டல்களை எதிர்கொள்ள இயலவில்லை” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு பி.எல்.ஓ-கள் தூக்கிட்டும், ரயில் முன் பாய்ந்தும், விஷம் குடித்தும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடூரம் நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேலைகளின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் துயரங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தியா முழுவதும் இதுபோல் 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் இதனை காட்டிலும் பூதாகரமாக உள்ளது. சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் மேற்குவங்கத்தில் மட்டும் 40 தேர்தல் அதிகாரிகள் இறந்திருப்பதாகவும், அவர்களில் 17-18 பேர் பி.எல்.ஓ-கள் என்றும் ஆளும் திரிணாமுல் கட்சியின் 10 மக்களவை உறுப்பினர்கள் அடங்கியக் குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறது.
ஆனால், இவை வெறும் குற்றச்சாட்டுகள்தான் என்றும் மேற்குவங்கத்தில் இவர்கள் இறந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தனக்கே உரிய பாசிச திமிருடன் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.
2016-ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த மோடி அரசு, தற்போது தனது பாசிச நோக்கத்திற்காக வாக்காளர் பட்டியலை செல்லாததாக அறிவித்து, பி.எல்.ஓ. அலுவலர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது.
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











