தெருக்களில் குவிக்கப்பட்டிருக்கும் பிணங்கள்; குழந்தைகளின் விளையாட்டு பூங்காக்களில் நிறைந்திருக்கும் மனித எலும்பு கூடுகள்; மனித படுகொலை கூடங்களாக மருத்துவமனைகள். இவைதான் சூடானின் தற்போதைய நிலை. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரங்களையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோரங்களையும் சூடான் மக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் எகிப்துக்குக் கீழே உள்ள நாடுதான் சூடான். இங்கு 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சூடானின் இராணுவத் தளபதி அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவப் படைக்கும் (SAF – Sudanese Armed Forces), முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான விரைவு ஆதரவுப் படைக்கும் (RSF – Rapid Support Forces) இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். விலங்குகளின் தீவனங்கள், இறந்த விலங்குகளை உண்டு வாழக்கூடிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். ஆனால், உண்மை நிலவரங்கள் இதைவிட மோசமானதாகவே இருக்கும்.
இரண்டு இராணுவக் குழுக்களும் எண்ணிலடங்கா பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. சூடானின் விரைவு ஆதரவுப் படையானது, அகதிகள் முகாம்களின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நிவாரண உதவிகள் செய்யும் நிறுவனங்களிடமிருந்தே உணவுப் பொருட்களை சூறையாடுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கற்பனைக்கெட்டாத அளவில் அரங்கேற்றி வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் குழந்தைகளின் நிலை மேலும் மோசமாக உள்ளது. குழந்தைகளின் கண் முன்னே படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும், சொல்லொணா துன்புறுத்தல்களும் அரங்கேற்றப்படுகின்றன. அத்துடன், சுமார் அறுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
சூடானிலிருந்து வெளியேறும் மக்களில் 57 சதவிகிதம் பேர் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள். ஆனால், அவர்களுக்கு போதுமான எண்ணிக்கையில் பள்ளிகள் இல்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் பிரதிநிதி ஜாந்பால் ஹப-முங்கு கூறுகிறார். குறைந்தபட்சம் தற்காலிக பள்ளிகள், கற்றல் நிலையங்களை கட்டுவதற்கு கூட தங்களிடம் போதிய நிதியில்லை என்கிறார்.
அத்துடன், தற்போது சூடான் உலகின் மிக மோசமான இடப்பெயர்வை சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூடானின் அண்டை நாடான சாட்டிற்குள் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். சூடான் மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லை நகரமான டைனில் தினமும் பல குடும்பங்கள் தொடர்ந்து அகதிகளாக தஞ்சமடைகின்றன. தற்போது டைன் நகரத்திலும் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரங்கேறும் இனப்படுகொலை
அமைதி காக்கும் உலக நாடுகள்
இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 அன்று விரைவு ஆதரவுப் படை மேற்கு சூடானின் டார்ஃபுர் பிராந்தியத்தின் தலைநகரான எல்-ஃபாஷரை சுமார் 18 மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியது. எல்-ஃபாஷரை கைப்பற்றிய பிறகு அந்நகரத்தில் மருத்துவ சேவைகளை வழங்கிவந்த ஒரே மருத்துவமனையான சவூதி மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியது. இக்கொடூரத் தாக்குதலில் 460-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும், விரைவு ஆதரவுப் படையினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைக் சுட்டுக்கொல்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர். எல்-ஃபாஷரைக் கைப்பற்றியதிலிருந்து மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சூடானிய மக்களை கொன்றொழித்து அப்பட்டமான இனப்படுகொலையை விரைவு ஆதரவுப் படை அரங்கேற்றியுள்ளது.
மேலும், இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்களின் உடல்களை ஒன்றாக குழித்தோண்டி புதைப்பது அல்லது எரிப்பது உள்ளிட்ட கொடூரங்களிலும் இப்படை ஈடுபட்டு வருவதாக “சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு” (The Sudan Doctors Network) குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, விரைவு ஆதரவுப் படையின் 18 மாத முற்றுகையின் போது குண்டுவீச்சு, பஞ்சம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் காரணமாக, சுமார் 14,000 சூடானிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மனித பேரவலத்தை சூடானிய மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாகவும், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைவதற்குள் தடுத்ததாகவும் சவடால் அடித்துவரும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப், ஈராண்டுகளாகத் தொடரும் சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. கொன்று குவிக்கப்பட்டு வருவது கருப்பின மக்கள் என்பதால் மேற்கத்திய ஊடகங்களும் இந்த அவலம் குறித்து வாய் திறப்பதில்லை.
பிராந்திய மேலாதிக்கவாதிகள் – இராணுவக் கும்பல்களின்
ஆதிக்க – அதிகாரப் போட்டாபோட்டி
ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சூடானில், தங்கம், வெள்ளி, யுரேனியம் முதலான கனிம வளங்களும், வளமான விவசாய நிலங்களும் உள்ளன. உலகின் மிக நீண்ட நைல் நதி பாய்ந்தோடுகிறது. இருந்த போதிலும், சூடான் நீண்ட நெடுங்காலமாக ஏழ்மையான நாடாகவே உள்ளது. சூடான் மக்கள் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் இந்நாட்டு வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் பிராந்திய வல்லரசுகளும் சூறையாடிக் கொண்டிருப்பதுதான்.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் பகுதியில், பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் சூடான் உள்ளது. தங்கம் உள்ளிட்டு ஏராளமான கனிம வளங்களும் சூடானில் நிறைந்துள்ளது. எனவே, சூடானில் செல்வாக்கு செலுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நாடுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.
தற்போது, சூடானில் இரண்டு இராணுவக் குழுக்களுக்கிடையில் உள்நாட்டு போர் நடந்து வருவதற்கும், அதனை உலக நாடுகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பதற்கும், சூடான் மீதான ஆதிக்க – அதிகாரப் போட்டாபோட்டியே காரணம்.
2021-ஆம் ஆண்டு சூடானின் இராணுவ தளபதிகளான அல்-புர்ஹானும் டகாலோவும் இணைந்து இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தி இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவினர். ஆனால், சூடானின் இராணுவத் தளபதி அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், டகாலோ தலைமையிலான விரைவு ஆதரவுப் படைக்கும் இடையிலான அதிகாரப் போட்டாபோட்டி முற்றத் தொடங்கியது. நாட்டின் கனிம வளங்களை யார் கைப்பற்றிக் கொள்வது; குறிப்பாக, சூடானின் டார்ஃபுர், கோர்டாஃபான் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தங்கச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவது என்பதாக தீவிரமடைந்து, இரு தரப்புக்கும் இடையிலான உள்நாட்டுப் போராக வெடித்தது.
இந்நிலையில், சில அந்நிய ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள், தமது சூறையாடலுக்கும் ஆதிக்கத்துக்கும் சாதகமாக உள்ள இராணுவக் கும்பலுக்கு மறைமுகமாக உதவுகின்றன. சான்றாக, “வளர்ச்சிக்கான ஜட்னா சர்வதேச கம்பெனி லிமிடெட்” என்ற கார்ப்பரேட் நிறுவனம் சூடான் இராணுவத்திற்கு உதவுகிறது; “அல்-ஃபாஹர் அட்வான்ஸ் ஒர்க்ஸ் கம்பெனி லிமிடெட்” மற்றும் “அல் ஹாலிஜ் வங்கி கம்பெனி லிமிடெட்” ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்கள் விரைவு ஆதரவுப் படைக்கு உதவுகின்றன.
மேலும், தனது அண்டை நாடான சூடான் மீது ஆதிக்கம் செலுத்த எகிப்து முயற்சிக்கிறது. அதற்காக, ஏறத்தாழ மூன்று லட்சம் பேரைக் கொண்டுள்ள சூடான் இராணுவப் படைக்கு எகிப்து அனைத்து வழிகளிலும் உதவுகிறது. இராணுவத்தின் துணையோடு பெயரளவிலான ஒரு ஜனநாயக ஆட்சியை சூடானில் நிறுவ எகிப்து முயற்சிக்கிறது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சூடானின் விரைவு ஆதரவுப் படைக்கு ஆதரவாக நின்று ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. சூடானுக்குள் இஸ்லாமிய பயங்கரவாத கூலிப்படைகள் நுழைந்து போராடுவதற்கு ஏற்ப சூடானின் மேற்கு எல்லைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது.
ஏறத்தாழ ஒரு லட்சம் சிப்பாய்களைக் கொண்டுள்ள சூடானின் விரைவு ஆதரவுப் படைக்கு ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவியும், ஆயுத உதவிகளும், ஆளில்லா போர் விமானங்களும் கொடுத்துள்ளதை ஐ.நா. மன்றமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டி கண்டித்துள்ளன. மறுபுறம் அமெரிக்கா வல்லரசானது அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 160 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியானது சூடானின் விரைவு ஆதரவுப் படைக்குச் செல்கிறது.
இவ்வாறு, சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்தி அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட எந்த நாடும் முயற்சிப்பதில்லை. மாறாக, இரு தரப்பு இராணுவக் கும்பலில் ஒன்றை ஆதரித்து கொம்பு சீவி விடுவதன் மூலம் சூடானில் ஆதிக்கம் செலுத்தி, கனிம வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக உள்ளன.
தற்போது மேற்கு சூடானில் உள்ள வடக்கு டார்ஃபுர் மாநிலத்தின் தலைநகரான எல்-ஃபஷாரில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து சர்வதேச அளவில் எழுந்த கண்டனங்கள், மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. அமெரிக்கா மற்றும் குவாட் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தத் திட்டத்தை நவம்பர் மாத தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டதாக விரைவு ஆதரவுப் படை கூறியது.
ஆனால், ஒரு வாரத்திலேயே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடங்கப்பட்டது. இரு இராணுவ கும்பலும் நாட்டின் மத்திய பகுதியில் போரை தீவிரப்படுத்துவதற்கான துருப்புகளையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர். நாட்டு மக்களை இன மற்றும் பிராந்திய அடையாளங்களின் அடிப்படையில் பிளவுபடுத்தி தங்கள் சொந்த நோக்கங்களுக்காக இராணுவக் கும்பல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஏகாதிபத்தியங்களின் இந்த லாபவெறி, மேலாதிக்கவெறிக்காக ஒட்டுமொத்த சூடான் நாட்டு மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு வருகிறது, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சூடானின் உள்நாட்டுப் போரை இயக்கிவரும் ஏகாதிபத்தியங்களுக்கும், அவற்றின் அடியாட்களான பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது சர்வதேச உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மேலும், சூடான் இராணுவத்திற்கும் அதன் துணைப்படையான விரைவு ஆதரவுப் படைக்கும் ஆயுதங்கள், நிதியுதவி அளித்துவரும் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்திய மேலாதிக்க நாடுகளின் மீது பொருளாதார உறவுகளை துண்டிக்குமாறும், இப்போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டி நிவாரண உதவிகளை வழங்குமாறும் உலக நாடுகளை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை கட்டியமைப்பது அனைத்துலக உழைக்கும் மக்களின் கடமையாகும்.
![]()
நந்தன்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











