தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் வலைத்தளம்: நெல்லையில் ம.அ.க., ஜனநாயக சக்திகள் மனு!

தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே,

“ரிக்லைம் டெம்பிள்ஸ்” (கோவில்களை மீட்போம்) என்ற வலைத்தளம் (reclaimtemples.com) வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 175 இடங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கிறிஸ்துவ தேவாலயம் உட்பட பள்ளிவாசல்கள், தர்கா என ஆறு வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் சதித்திட்டம் தீட்டி வருகிறது.

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று முழக்கமிட்டு மதுரையில் கலவர முயற்சிகளை மேற்கொண்டுவந்த சங்கி கும்பல், இதன் மூலம் நெல்லை மாவட்டத்திலும் தங்கள் சதித்திட்டத்தை விரிவுபடுத்த முயல்கிறது.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவிக் கும்பலின் சதி நடவடிக்கைகளைத் தடுக்கக் கோரியும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைத்தது.

அதன்படி, 15.12.2025 அன்று மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு செய்யது அலி, தி.மு.க. மாநகர துணைச் செயலாளர் அப்துல் கையூம், பாவேந்தர் தமிழ் மன்றம் ராமகிருஷ்ணன், தமிழ் புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மாடத்தி, கரும்புலிகள் பேரவை பார்வதி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர் ஷா, தோழர் திருக்குமரன் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் ஏற்றுவோம் என்று தமிழ்நாட்டில் கலவரம் செய்யும் நோக்கில் இந்துத்துவ சங்கி கும்பல் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்திலும் ஜி.ஆர். சுவாமிநாதன் உள்ளிட்ட இந்துத்துவவாதிகளின் மூலமாக காய் நகர்த்தி தன்னுடைய சதித்திட்டத்தை அரங்கேற்ற முயன்றது.

ஆனால், தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்துக் களமாடிய புரட்சிகர – ஜனநாயக சக்திகள் இதற்குச் சரியான எதிர்வினையை ஆற்றினர். ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்த பாசிச கும்பல் பிளவை ஏற்படுத்த முயல்வதைத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு மிகச்சரியாக இனங்கண்டு கொண்டது. சங்கி கும்பல் அடுத்த கட்டத்திற்கு நகரும் போது இதற்கான எதிர்வினையும் மக்கள் மத்தியிலிருந்து சரியாகக் கிளம்பும். ஆளுகின்ற தி.மு.க. அரசும் இவ்விசயத்தில் சரியான நிலைப்பாடு எடுத்து, பாசிசக் கும்பலின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் இந்த பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் மேற்கண்ட “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது. அதில் நெல்லை, காயல்பட்டினம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களும் அடக்கம்.

சமீபத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய மேலப்பாளையம் பகுதியில் கலவரம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி, சங்கிக் கும்பல் திடீரென பிள்ளையார் சிலையை வைத்தது. போலீசுதுறையின் நடவடிக்கையினால் இது அப்புறப்படுத்தப்பட்டது. இது காவி கும்பலின் விரிந்த நோக்கத்தைக் காட்டுகிறது.

திருப்பரங்குன்றத்தைப் போல நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளையும் இந்த பாசிச கும்பல் இலக்கு வைத்து, நடவடிக்கையில் இறங்குவதை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த மனு அளிக்கும் நிகழ்வு நடந்தது. இது பாசிசத்தை வீழ்த்தும் நோக்கில் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதை ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை நமக்கு உணர்த்தியது.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க