அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் யுரேனியம், பீகாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப் பாலில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று “நேச்சர் போர்ட்ஃபோலியோ ஜர்னல்”-இல் (A Nature Portfolio Journal) வெளியான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 2021 முதல் 2024 வரை பாட்னாவை சேர்ந்த மகாவீர் புற்றுநோய் நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. மகாவீர் புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அருண் குமார் மற்றும் பேராசிரியர் அசோக் கோஷ் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அசோக் சர்மா தலைமையிலான கூட்டுக் குழுவால் ஆய்வு நடத்தப்பட்டது.
போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், கதிஹார், நாளந்தா ஆகிய பீகாரின் ஆறு மாவட்டங்களில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட 40 பெண்களின் தாய்ப்பாலில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தாய்மார்களிடம் இருந்து நேரடியாகப் பெறப்பட்ட பால் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பாலை ஆய்வாளர்கள் வைஷாலியில் உள்ள நிப்பர் (NIPER) ஆய்வகத்தில் பரிசோதனை செய்தார்கள்.
அந்த ஆய்வின் முடிவில், பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 0 முதல் 5.25 மைக்ரோகிராம் (µg/L) வரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கதிஹார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5.25 மைக்ரோகிராம், நாளந்தா மாவட்டத்தில் 2.35 மைக்ரோகிராம், காகரியா மாவட்டத்தில் 4.035 மைக்ரோகிராம் என்ற அளவில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டயறிப்பட்டது.
குறைந்த அளவே யுரேனியம் இருப்பதால் இதனால் பாதிப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், தாய்ப்பாலில் எந்த அளவு யுரேனியம் பாதுகாப்பானது என்று எந்த நிறுவனமும் குறிப்பிடவில்லை. சாதாரணமாக தண்ணீரில் யுரேனியத்தின் அளவு லிட்டருக்கு 30 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும், இந்த ஆய்வில் தாய்ப்பால் குடிக்கும் 35 குழந்தைகளிடம் இருந்தும் மாதிரிகள் பெறப்பட்டது. அதில் 70 சதவிகித குழந்தைகளின் ரத்தத்திலும் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் புற்றுநோய் ஆபத்து இல்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மகாவீர் புற்றுநோய் நிறுவனம் இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள தண்ணீரில் யுரேனியம் அளவைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
யுரேனியம் என்றால் என்ன?
யுரேனியம் என்பது இயற்கையில் கிடைக்கும் ஒரு கனமான உலோகம் ஆகும். இது கதிர்வீச்சு (Radioactive) தன்மை கொண்டது. அதன் ரசாயனச் சின்னம் “U”, அணு எண் 92 ஆகும். இது அணு மின் நிலையங்கள் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய எரிபொருள். இது அணு பிளவின் (Nuclear Fission) போது அதிகப்படியான ஆற்றலையும் கதிர்வீச்சையும் வெளியிடும் தன்மை கொண்டது.
இந்த யுரேனியத்தை, புற்றுநோய் ஆபத்து இல்லாத யுரேனியம் (NON CARCINOGENIC) மற்றும் புற்றுநோய் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய யுரேனியம் (CARCINOGENIC) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். புற்றுநோயை உண்டாக்காத யுரேனியம் சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல நோய்களையும், புற்றுநோயை உண்டாக்கும் யுரேனியம் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.
பீகாரின் நீர் மாசுபாடு
சமீபத்தில், பீகார் சட்டமன்றத்தில் பீகார் பொருளாதார ஆய்வறிக்கையின் (2024-25) ஒரு பகுதியாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை, 4,709 வார்டுகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் (Arsenic) இருப்பதையும், 3,789 வார்டுகளில் ஃப்ளோரைடு (Flouride) இருப்பதையும், 21,709 வார்டுகளில் இரும்பு மாசுபாடு இருப்பதையும் எடுத்துக்காட்டியது.
“மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 31 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற வார்டுகள் “சுமார் 26 சதவிகிதம் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அதிகமாக ஆர்சனிக், ஃப்ளோரைடு மற்றும் இரும்பு மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளன” என்று மாநில பொது சுகாதார பொறியியல் துறை (PHED) ஆய்வு தெரிவித்துள்ளது. நைட்ரைட், ஃப்ளோரைடு, ஆர்சனிக் போன்ற பல நச்சு பொருள்கள் நீண்ட காலமாக தண்ணீரில் கலந்திருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பீகார் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஆழ்துளைக் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீர் திறந்துவிடப்படுகிறது. இவையெல்லாம், நிலத்தடி நீரில் கலக்கின்றன. மேலும், பயிர்களுக்கு அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பீகாரில், நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பீகார் இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கையில், நிதிஷ் குமார் பத்தாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். பீகாரின் நீரில் நச்சு மூலப்பொருட்கள் கலந்திருப்பது பல ஆண்டுகளாக அம்பலமாகி வந்தாலும், இப்பிரச்சினையைக் கலைவதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமல், சில தற்காலிக நடவடிக்கைகள், திட்டங்களை அறிவித்து நிதிஷ்அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
மறுபுறம், நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் அம்பானிக்கும் அதானிக்கும் வாரி வழங்கி ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் நலனுக்காக கூறு போட்டு வருகிறது மோடி – அமித்ஷா கும்பல். கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத பல தொழிற்சாலைகள் நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி வருகின்றன. இந்த அவலத்தைத்தான் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடாக நாம் பார்த்து வருகிறோம்.
இயற்கையைப் பாதுகாப்பதற்கும், மக்கள் நலனை உறுதிப்படுத்தவும், மக்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியதும் பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச அரசை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்க வேண்டியதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
காலா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











