மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி என்கிற செல்வகனேஷுக்கும் தோழர் ராதிகாவிற்கும் நடக்க இருக்கும் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னணி ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம். நேரிலும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் இந்த அழைப்பிதழைப் பார்த்த அனைவரும் இம்மணவிழாவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
முதன்மையாக, இந்த மணவிழா, “சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற தலைப்பில் நடத்தப்படுவதைப் பலரும் வரவேற்கின்றனர். சமூகத்தில் பலரும் சாதி ஒழிப்பை தம்மளவில் பேசிக் கொண்டும், தமக்கு தெரிந்தவகையில் அதனைப் பரப்புரை செய்தும் வரும் வேளையில், மணவிழாவிற்கு சாதி ஒழிப்பையே, ஜனநாயகக் கோரிக்கையையே முழக்கமாக வைத்து நடத்துவதால், இது, மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்துடன், மேலும், முக்கியமாக, அனைவரையும் அதிர்ச்சி கலந்த உற்சாகமூட்டும் விசயம், மணவிழா அழைப்பிதழில், ஆணவப் படுகொலைக்கு பலியானவர்களின் புகைப்படங்களை இடம்பெறச் செய்திருப்பதாகும். பார்ப்பனிய எதிர்ப்பு, ஜனநாயக, சமத்துவ உணர்வு கொண்ட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வு ஏற்பட்டிருப்பது முக்கியமான விசயமாகும்.

பெரியாரையும் அம்பேத்கரையும் மார்க்ஸையும் பின்பற்றும் பெரும்பாலானோர், “இப்படி யோசிக்கவில்லை”, “அதிரடியான அழைப்பிதழ்”, “மிகவும் தைரியம்தான்” என்றெல்லாம் வாழ்த்தி இந்த அழைப்பிதழை வரவேற்று வருகின்றனர். பலரும் தமது சமூக ஊடகப் பக்கங்களில் இந்த மணவிழாவிற்கு அழைப்பு விடுத்தும் வருகின்றனர்.
உண்மையில், இந்த உற்சாகமானது, நமது சிந்தனையில் ஒட்டியிருக்கும், பார்ப்பனியம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் மிச்ச சொச்சங்களை அசைத்துப் பார்ப்பதன் வெளிப்பாடு என்றே நாம் உணர்கிறோம்.
***
பொதுவில், மணவிழா என்பது “மங்கல நிகழ்ச்சி” அதில், “அமங்கலமான” விசயங்கள் இடம்பெறக் கூடாது என்பது பார்ப்பனியம் நமக்குப் புகுத்தியிருக்கும் ‘பொதுப்புத்தி’யாகும். மணமகன் (ஆண்), மணமகளுக்கு (பெண்) கட்டும் தாலி என்பது ‘மங்கல’ நாண் என்று பார்ப்பனியம் போதிக்கிறது. எனவே, மணமகன் (கணவன், புருஷன்) இறப்பானது, பெண்ணிற்கு ‘அமங்கலம்’ என்பதால், கணவனை இழந்த பெண்ணிற்கு (மணமகளுக்கு) தாலியறுப்பை ஒரு நிகழ்ச்சியாக பார்ப்பனியம் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
அந்தவகையில், துன்பத்தையும் நெருக்கடியையும் கொடுக்கின்ற தொந்தரவு கொடுக்கின்ற, தனது வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற விசயத்தைப் பற்றி உழைக்கும் மக்கள் நொந்து கொண்டு செல்லும் போது, “ஏன் தாலியறுக்கிற” என்று கேட்பதைப் பார்த்திருப்போம். அந்த வகையில், “தாலியறுப்பது” என்பது அடக்குமுறை, வன்முறை என்பதுதான் உழைக்கும் மக்களின் மனநிலையாகும். எனினும், பார்ப்பனிய மேலாதிக்கம் காரணமாக, சூத்திர சாதியினர் மத்தியிலும் கணவனை இழந்த பெண்களுக்கு, தாலியறுக்கும் சடங்குகள் நடத்தப்படுவது நமது காலத்தின் கொடுமையாகும்.
என்னதான் அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்ஸையும் நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும் பார்ப்பனியம் உருவாக்கியுள்ள பொதுப்புத்தியின் காரணமாக, இந்த “மங்கலம்”, “அமங்கலம்” என்ற உணர்வு நமது சிந்தனையிலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. கருத்தியல் ரீதியாக, இதற்கு நாம் உடன்படவில்லை என்றாலும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் இந்த “மங்கலம்”, “அமங்கலம்” என்ற கருத்தோட்டமானது நம்மையும் பாதித்துள்ளது என்பதே உண்மை.
எனினும், உழைக்கும் மக்கள் இந்த “மங்கலம்”, “அமங்கலம்” கோட்பாட்டிற்கு முற்றிலுமாக உடன்பட்டுவிடவில்லை என்பதே உண்மையாகும்.
அதனால்தான், சூத்திரர்களாக பார்ப்பனியத்தால் குறிப்பிடப்படும், பார்ப்பனிய எதிர்ப்பை இயல்பாகக் கொண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்களது குல தெய்வங்களின் துணையாகவே அனைத்து நற்செயல்களையும் மேற்கொள்கின்றனர். “முனியப்பன் துணை”, “மதுரைவீரன் துணை”, “பேச்சியமன்னன் துணை”, “மாரியம்மன் துணை”… என்று பலவாறாக, மணவிழா அழைப்பிதழ்கள், கடைகள், தொழில் நடத்தும் இடங்கள், வாகனங்களில் தாங்கள் வணங்கும் குல தெய்வங்களைத் துணையாக அழைப்பதைப் பார்த்திருப்போம்.
என்னதான், பார்ப்பனிய கடவுளர்களை வணங்குபவர்களாக இருந்தாலும், கிராமப்புறங்களிலிருந்து வெளியேறி நகரங்களில் குடியேறியவர்களாக இருந்தாலும் “குல தெய்வங்களை” வணங்குவது இன்னும் நமது மரபில் தொடரவே செய்கிறது.
இந்த குலதெய்வங்கள் எல்லாம் யார்? பார்ப்பனிய கடவுளர்கள் அல்ல; நாட்டார் தெய்வங்கள்.
இந்த நாட்டார் தெய்வங்கள்தான் நமது முன்னோர்கள். இவர்களை மக்கள் வணங்குவதற்கு பல வகை காரணங்கள் உள்ளன. ‘மழையைத் தருதல், ஊரைப் பாதுகாத்தல், பயிரைப் பாதுகாத்தல், வனத்தைப் பாதுகாத்தல்…’ போன்ற வகைகளிலும் இந்த முன்னோர்களை வணங்குவதுண்டு. தமது மூதாதையர்களையும் இந்தவகையில் வணங்குவதுண்டு. சாதி ஆதிக்கத்திற்கு பலியான பெண்களை, பலி கொடுத்த பெண்களைக் கன்னித் தெய்வங்களாக வணங்குவதுண்டு.
இப்படி பலவகைகளில் மக்கள் தமது முன்னோர்களை வணங்கித்தான் நற்செயல்களைத் தொடங்குகின்றனர்.
பார்ப்பனிய சடங்குகள், வழிபாட்டு முறைகள் உழைக்கும் மக்களிடையே திணிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்களது குல தெய்வங்களை தொடர்ந்து வணங்கி வருகின்றனர், அவற்றைப் போற்றி வருகின்றனர்.
அந்தக் குல தெய்வங்கள் வெட்டரிவாள், வேல் கம்புடன் இருப்பதையும் இரத்தம் வழியும் ஆயுதங்களுடன் இருப்பதையும் பார்த்து மக்கள் யாரும் அச்சப்படுவதில்லை. தம்மைக் காக்கும் தெய்வங்களாக மரியாதையுடன் வணங்குகின்றனர்.
அந்தவரிசையில், தமிழ் மக்களின் குல தெய்வங்களைப் போன்றவர்களே, கண்ணகி-முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கவின்… என ஆணவப் படுகொலைக்கு பலியானவர்களும். அவர்கள் கொல்லப்பட்ட பின்னர், இரத்த வெள்ளத்தில் மிதந்தவாரேதான் நாம் அனைவரும் அவர்களை அறிவோம்!
ஆம், இவர்கள் அறிந்தோ அறியாமலோ தம் இன்னுயிரை ஈந்து சாதி ஆணவத்திற்கு எதிரான அடையாளங்களாக இருக்கின்றனர்.
ஆனால், வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.
இவர்களெல்லாம் காதலித்தவர்கள். தங்களது சுயநலத்திற்காக உயிரைத் துறந்தவர்கள் என்று சாதி ஆதிக்க வெறியர்களும் தன்னல வெறியர்களும் கூறலாம்.
தொழிலாளியின் வாழ்வுதான், முதலாளித்துவச் சுரண்டல். தலித்தாக இருத்தி வைப்பதுதான், பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பின் அடக்குமுறை. இங்கு, (உழைக்கும் வர்க்கத்திற்கு, அடக்கப்பட்ட வர்க்கத்திற்கு) இருப்பே போராட்டமாகும், தலித்துகளின் காதலும் அவ்வாறே.
சுரண்டலையும் அடக்குமுறையையும் எதார்த்தமாகக் கருதிவிடும்பொழுது, விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வானது, சுயநலத்திற்கானதாகத் தெரிகிறது. அதுபோல, தலித்தின் காதலும் சுயநலத்திற்கானதாகத் தெரிகிறது.
இந்த உணர்விலிருந்துதான், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ்பேண்ட் போட்டும், கூலிங் கிளாஸ் அணிந்தும் வன்னியச் சாதி, கவுண்டர் சாதிப் பெண்களைக் கவர்ந்திழுத்துச் சென்றுவிடுகின்றனர் என்று வன்னிய சாதி வெறியர்களும் கவுண்டர் சாதி வெறியர்களும் 2,000-ஆம் ஆண்டுகளில் கிளப்பிவிட்டனர். ‘நாடகக் காதல்’ என்று கதையளந்தனர்.
ஆகையால், உழைக்கும் வர்க்கங்களுக்கு அவர்களது வாழ்வே போராட்டம்தான். ஆகையால், தலித் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, ஆதிக்கச் சாதியில் பிறந்த பெண்களுக்கும் அவர்களது மனித உணர்வே அவர்களுக்கு இருத்தலுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, மனிதர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு விலக்கி வைக்கிறது. சொத்துரிமை பெண்களுக்கு வழங்கக் கூடாது, பெண்கள் படிக்கக் கூடாது, ஆதிக்கச் சாதிப் பெண்கள் படிக்கும் கல்லூரிகள், வேலை செய்யும் இடங்களில் அந்தந்த சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் இருக்க வேண்டும், இதற்கேற்ப பெண் கல்வி, வேலை வாய்ப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென இந்த அடிமைத்தனம் விரிந்து செல்கிறது.
ஆகையால், உழைக்கும் வர்க்கங்கள், தலித்துகள், பெண்களுக்கு அவர்களது இருப்பே போராட்டமாக அமைந்துள்ளது என்பதுதான் இன்றைய எதார்த்தமாகும்.
ஆணவப் படுகொலைகளில் பலியானவர்கள், சாதியை ஒழிக்க விரும்பினார்களா, சாதியை மறுக்க விரும்பினார்களா என்பதெல்லாம் நமக்குரிய கவலைகள் அல்ல. ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்கள், தங்களது காதலுக்காக, அந்த காதலின் மூலம், சாதி, மதம், வர்க்கம் கடந்து ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, அவர்கள் அறிந்தோ அறியாமலோ, இந்த சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்குச் சவால் விட்டு வாழ்ந்துள்ளனர். அந்த துணிவானது, அவர்களை இந்த சமூகம் அவர்களை நெஞ்சிலேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் வரும் பரியனுக்காக பரிந்த சமூகம்தான், கவின்களையும் நெஞ்சில் ஏந்தி நிற்கிறது.
ஆணவப் படுகொலைக்கு பலியான அந்த இளந்தலைமுறையினர் நமது நெஞ்சில் வாழ்கின்றனர். அதனால், மணவிழா அழைப்பிதழில் அவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
இது, புதிய இயல்பாக்கப்பட வேண்டும்! நமது சிந்தையில் விலங்கிட்டிருக்கும் பார்ப்பனிய, முதலாளித்துவ சட்டகங்களைத் தகர்த்து நாம் முன்னேற வேண்டும்!
ஆகையால், சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கமானது, சாதிவெறி-மதவெறி ஆதிக்கத்திற்கு எதிரான, ஆணவப் படுகொலைக்கு எதிரான, சமத்துவத்திற்கான ஒரு பண்பாட்டுப் போர் முழக்கமாகும்.
முழங்குவோம்! மணவிழாவிற்கு அணிதிரள்வோம், வாருங்கள்!
கோவை மாறன்,
கழக இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











