தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!

இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.

தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா:
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான
பண்பாட்டுப் போர் முழக்கத்தின்
அறிமுக விழா!
கொண்டாடுவோம், அணிதிரண்டு வாரீர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

மக்கள் அதிகாரக் கழகத்தின்
மாநில இணைச் செயலாளர்
தோழர் ரவி என்கிற செல்வகணேசுக்கும்
தோழர் ராதிகாவிற்கும்
நடக்க இருக்கும் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை,
சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்

என்கிற முழக்கத்தின் கீழ் நடத்துகிறோம்.
இந்த மணவிழாவில் தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதிலிருந்து
பல்வேறு ஜனநாயக சக்திகள், சாதி ஒழிப்புப் போராளிகள்
கலந்து கொள்ள இருக்கின்றனர்;
சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இந்த மணவிழாவிற்கு
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்
அனைவரும் பங்கேற்குமாறு
மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக
அழைக்கிறோம்.

***

சாதி கடந்த, மதம் கடந்த
உழைக்கும் மக்களின்
ஒற்றுமையைத் தடுப்பதுதான்
சாதிவெறி, மதவெறி, இனவெறியின்
வெளிப்பாடுகளாகும்.

சாதி – மதம் கடந்த
காதல்களையும் மணங்களையும் தடுக்க
சாதிவெறி, மதவெறி சக்திகள்
தொடுக்கும் போர்தான்
ஆணவப் படுகொலைகளாகும்.

ஆம், பிற்போக்கு சக்திகள்,
முன்னேறி வரும் சமூகத்தின் மீது
தொடுக்கும் போர் தான் ஆணவப் படுகொலைகள்.

ஆகையால்,
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக,
சாதி – மதம் கடந்த
காதலையும் மணங்களையும்
ஊக்குவிக்கும் ஒரு பண்பாட்டுப் போர்
இன்றைய காலத்தின் தேவையாகும்.

“சாதி-மதம் கடந்து
காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்”
என்பதுதான்
அந்தப் பண்பாட்டுப் போரின் முழக்கமாகும்.
இந்தப் போர்முழக்கத்தின் தொடக்கம்தான்,
தோழர்கள் ராதிகா – ரவி மணவிழாவாகும்.

வர்க்கம் கடந்து காதலிப்பது
காலங்காலமாக நடந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி கடந்து
காதலிப்பதும் மணமுடிப்பதும் அவ்வாறே.
மக்களிடம் நிலவும் பிற்போக்குச் சிந்தனைகளும்
பிற்போக்குப் பழக்க வழக்கங்களும் தான்
காதலைத் தடுப்பதன் பொதுப்புத்தியாகும்.

ஆனால், இன்றைய காலத்தில்,
தலித் மக்கள் மீதும்
இசுலாமிய மக்கள் மீதும்
பழங்குடி மக்கள் மீதும்
தொடுக்கப்படும் தாக்குதல்களும்,
ஆணவப் படுகொலைகளும்
அவற்றின் தொடர்ச்சி மட்டுமல்ல.

சாதி மாறிக் காதலிப்பதை,
மணமுடிப்பதை
தந்தையும் தாயும் ஏற்றுக்கொண்டாலும்,
உற்றார் உறவினர் ஏற்றாலும்
இவர்களை எல்லாம் மீறி சில சக்திகள்,
காதல் மனங்களைக்
காவு கொடுக்கக் கோருகின்றன.
அவைதான், ஆதிக்கச் சாதிச் சங்கங்கள்,
ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரங்கள்.

தற்கால, சாதிவெறி,
மதவெறித் தாக்குதல்கள் அனைத்திலும்
இப்பயங்கரவாத சக்திகள் ஆணி வேர்களாக
இருப்பதைப் பார்க்க முடியும்.

ஆகையால்,
தற்கால சாதிவெறி, மதவெறித் தாக்குதல்களும்
ஆணவப் படுகொலைகளும்
ஆதிக்கச் சாதிச் சங்கங்களால்
ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரங்களால்
உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும்
சமூகப் பண்பாட்டுப் போராகும்.

நலிந்துவரும் விவசாயத்தில் இருந்து
தன் பிள்ளைகள் வெளியேற விரும்புகிறார்
பாடுபட்டு உழைக்கும் விவசாயி.
அழிந்துவரும் காடுகளில் இருந்தும்,
நசிந்துவரும் தொழில்களிலிருந்தும்
வெளியேற நினைக்கின்றனர் மக்கள்.
மாறிவரும் சமூக சூழலின் விளைவாக,
நகரங்களுக்கு குடியேறுகின்றனர்.

தம் பெற்றோரின் கடின உழைப்பாலும்,
சொத்துகளை விற்றும்
கல்வியறிவைப் பெறுகின்றனர்
இக்கால இளந்தலைமுறையினர்.
தம்மைப் போல நகரங்களை நோக்கி வந்த
சக உழைக்கும் வர்க்கத்தினருடன்,
சாதி, மதம், இனம், மொழி கடந்து
ஒன்று கூடி வாழ்கின்றனர்.

இந்த சமூக வளர்ச்சியின்
அங்கமாகவும் தொடர்ச்சியாகவுமே
சாதி, மதம், இனம், மொழி கடந்த
காதல்களும் மணங்களும் அரங்கேறுகின்றன.
இக்காதல்களும் மணங்களும்
உழைக்கும் மக்களின் இயல்பாகும்,
ஜனநாயக, சமத்துவ உணர்வாகும்.

எளிமையாகச் சொன்னால்,
சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடுகளான
பிறப்பின் அடையாளங்கள் கரைந்து,
சமத்துவ உணர்வுகளின்
உழைப்பின் அடையாளங்கள் கரையேறுகின்றன.

உழைக்கும் மக்களின் வாழ்க்கை,
கடந்தகாலம் நிகழ்காலத்தின் மீது
ஆதிக்கம் செய்வதை எதிர்க்கிறது.
எதிர்கால கனவிற்கான
நிகழ்கால உழைப்பாகிறது.

ஆகையால்,
கரைபவையும் கரை சேருபவையும்
அதிகரிக்கவே செய்யும்.

இயற்கையின் இந்த நியதியை
அழிக்க நினைக்கின்றன பிற்போக்கு சக்திகள்.
சாதிவெறி, மதவெறி, இனவெறித் தாக்குதல்கள்
அந்த பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடுகள்.
ஆணவப் படுகொலைகளும் அவ்வாறே.

சாதி ஆதிக்கத்திற்கெதிராக,
பாடல்கள், கட்டுரைகள்,
கவிதைகள், இலக்கியங்கள் என
அலை அலையாக வெளிவந்தன,
இன்று,
அவை அடுத்தக்கட்டத்திற்கு வளர்ந்துள்ளன.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராக
திரைப்படங்கள் முழங்குகின்றன.
ஆம்,
தம் கண் முன்னே,
பிற்போக்கின் கோட்டைகள் சரிவதை
ஆதிக்கச் சாதிவெறியர்களாலும்
சங்கப் பரிவாரக் கும்பல்களாலும்
சகித்துக் கொள்ள முடியவில்லை.

சாதிவெறியர்களும் மதவெறியர்களும்
நேர்மறையில் எதையும் சொல்லமுடியவில்லை.
“ஆண்ட பரம்பரை”, “இந்துப் பண்பாடு” என்று
அழிந்துவரும் அடையாளங்களை முன்னிறுத்துகின்றன.
“நாடகக் காதல்”, “லவ் ஜிகாத்” என
பொய்ப் பிரச்சாரங்கள் செய்கின்றன.
ஆம்,
கடந்த காலத்தைக் கொண்டு
நிகழ்காலத்தின் மீது
ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.
பொய்களைக் கொண்டு
உண்மைகளை மூடி மறைக்க முனைகின்றன.

அந்த பிற்போக்கின் வீராவேசம்தான்,
வெட்டறிவாளைத் தூக்கும் கோழைத்தனமாகும்.

ஆண்டபரம்பரை, இந்துப் பண்பாடு என்கிற
போலிப் பெருமிதம்தான்
சாதி, மதம், இனம், மொழி கடந்து
வாழ்வதைத் தடுக்கிறது;
காதலிப்பதையும் மணமுடிப்பதையும் எதிர்க்கிறது.
இதுதான், ஆணவப் படுகொலைகளுக்கும் அடிப்படையாகிறது.

இவை மட்டுமல்ல,
ஆணவப் படுகொலைகள், பெண்களுக்கு எதிரானவை.
பெண்களுக்கு சொத்துரிமையை மறுப்பவை.
தமது வாழ்க்கைத் துணையைத் தேடும்
பெண் விடுதலையை நசுக்குபவை.
பெண் உடல்மீதான
சாதி, மத, இன ஆதிக்கத்தைத் திணிப்பவை.
பெண்களின் அறிவு, திறமை, வளர்ச்சியை
நசுக்குபவை.

அழிந்துவரும் சாதியை,
மலர்ந்துவரும் மதச் சார்பின்மையை,
கலைந்துவரும் இனவேறுபாடுகளைத்
தடுக்க முனைகின்றன,
சாதிவெறி மதவெறித் தாக்குதல்களும்
ஆணவப் படுகொலைகளும்,

ஆம்,
சாதிவெறி மதவெறித் தாக்குதல்களும்
ஆணவப் படுகொலைகளும்
முற்போக்கின் மீது
பிற்போக்கு தொடுத்திருக்கும் போர் தாக்குதல்களாகும்.
ஜனநாயக, சமத்துவ உணர்வின் மீது
பாசிச சர்வாதிகாரத்தின் அடக்குமுறைகளாகும்.
“நாடகக் காதலும்” “லவ் ஜிகாத்தும்”
அவர்களின் பொய்ப் பிரச்சார முழக்கங்களாகும்.

பாசிசத்தின் பிற்போக்கின்
இந்தப் போருக்கு எதிராக,
ஜனநாயகத்தின், சமத்துவ உணர்வின்
முற்போக்குப் பண்பாடுப் போரை
நாம் தொடுக்க வேண்டும்.
அதன் முழக்கம்தான்,
சாதி – மதம் கடந்து
காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்
என்ற பண்பாட்டுப் போர் முழக்கமாகும்.
இந்த முழக்கத்தின் அறிமுகம்தான்,
தோழர்கள் ராதிகா – ரவி மணவிழாவாகும்.

வாருங்கள், டிசம்பர் 28 அன்று,
மதுரையில் நடக்க இருக்கும்
ராதிகா – ரவி மணவிழாவிற்கு!

முழங்குங்கள்,
சாதி – மதம் கடந்து
காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்
என்று!

மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு –  புதுச்சேரி.

[பி.டி.எஃப் (pdf) வடிவில் தரவிறக்கம் செய்ய]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க